search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளால் செலவிடப்படுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மாவட்டத்தில் முக்கிய பயிராக பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே பருத்தி அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்கிறது. பருத்திக்கு என்று வேப்பந்தட்டையில் ஆராய்ச்சி நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையத்தில்தான் தமிழகத்திலேயே முதன்முறையாக பருத்தியை அறுவடை செய்ய நவீன எந்திரம் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் சராசரியாக பருத்தி 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஆனால் பருத்திக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தற்போது பருத்தி அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளால் செலவிடப்படுகிறது. பருத்திக்கு மருந்து அதிகம் அடிக்க வேண்டியிருக்கிறது. தற்போது பருத்தி களை எடுக்கும் பணியில் இருந்து அறுவடை வரை போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள். பருத்தி களை எடுக்கும் எந்திரங்களும் வாடகைக்கு உடனடியாக கிடைப்பதில்லை. பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து பருத்தியை காப்பாற்றி அறுவடைக்கு கொண்டு வருவதற்குள் விவசாயிகள் படாதபாடு படுகின்றனர்.

    பருத்திக்கு விவசாயிகள் இவ்வளவு செலவழித்தும் அதற்கான லாபம் கிடைப்பதில்லை. தற்போது பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பருத்தியை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் இடைத்தரகர்கள் எடை மோசடியில் ஈடுபடுகின்றனர். பருத்தியை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்தால்தான் விவசாயிகள் நஷ்டப்படமாட்டார்கள். மாவட்டத்தில் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு காந்தி நகரிலும், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடியிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு சரியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

    விவசாயிகளில் சிலருக்கு அந்த ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இருக்கிறது என்று கூட தெரிவதில்லை. அங்கு பருத்தியை ஏலத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவு அதிகமாகிறது. பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர்-இரூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 100 ஏக்கர் நிலத்தில், பெரம்பலூர் மாவட்ட ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது தற்போதுவரை வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. ஜவுளி பூங்கா தொடங்கப்பட்டால் மாவட்டத்தில் உள்ள பருத்திக்கு தேவை அதிகமாகும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

    Next Story
    ×