என் மலர்
நீலகிரி
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
- ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவே இந்த பூங்கா அமைக்கப்பட்டது.ஆனால், மெக் ஐவர் என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்காவை போன்று ஊட்டி பூங்காவை அமைக்க விரும்பி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மரக்கன்று, செடிகளை நடவு செய்தார். பின்னர் ஜப்பான், ஆஸ்திரேலியா, கேனரி ஜலேண்ட் போன்ற நாடுகளிலிருந்து பிரபலமான மரக்கன்றுகளை கொண்டுவந்து நடவு செய்தார்.
தற்போது, இந்த நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் அறிவியல் மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு காட்சி விருந்தாகவும் இருந்து வருகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்து வியப்படைகின்றனர். ஆனால், அவற்றின் வரலாறு குறித்து அறியும் வசதி இல்லாததால் ஏமாற்றமடைந்து வந்தனர்.
இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அரியவகை மரங்கள், தாவரங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
இதில், அந்த மரம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எப்போது நடவு செய்யப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தது. அவற்றின் மூலிகைத் தன்மை என்ன என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் கூறியதாவது-
தாவரவியல் பூங்காவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தாவரங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ரோஸ் என்று அழைக்கப்படும் கமாலியா, டிராகன் மரம், குரங்கு ஏறாமரம், ருத்ராட்சை மரங்களில் கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 100 மரங்களுக்கு கியூஆர் கோடு பெயர் பலகை வைக்கப்படும், பின்னர் அனைத்து மரங்களுக்கும் கியூஆர் கோடு உடன் பெயர் பலகை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது
- சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சிறுத்தை காட்டில் இருந்து வெளியேறி, புதன்கிழமை அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
அப்போது நாய்கள் குரைத்தன. சிறுத்தை ஒரு நாயை வேட்டையாடி கொன்று தூக்கி சென்றது. இது அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளில் சிறுத்தை நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
இதில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார். அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூா்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை பகுதியில் நேற்று ராட்சத மரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
இதனால் அந்த பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
- போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பெரிய தொழிற்சாலைகளுக்கான ராட்சத எந்திரங்கள் சரக்கு லாரிகள் மூலம் எடுத்து வரப்படுகின்றன.
அந்த வாகனங்களின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். அவை சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
எனவே அந்த நேரத்தில் வாகனத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பணியாட்கள் ஈடுபடுவது உண்டு. ஆனால் வனப்பகுதிகளில் சரக்கு லாரி வரும்போது வழியில் உள்ள மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை சேதப்படுத்துகிறது. அவற்றை லாரி டிரைவர்கள் சரிவர அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் ராட்சத எந்திரங்களுடன் சரக்கு லாரிகள் பெரும்பாலும் மாலைநேரத்தில் வந்து செல்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடி யாக தலையிட்டு இதற்கு நிரந்தரதீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- தினசரி 60 கிராம் வீதம் 4 பிஸ்கெட்டுகள் சாப்பிட வேண்டும்.
- தமிழக அரசுக்கு கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
ஊட்டி,
தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சியை உறுதிசெய்யும்வகையில், தமிழக அரசு ஊட்டச்சத்தை உறுதிசெய் என்ற திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்து உள்ளது. அதன்படி ஊட்டச்சத்து குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீலகிரியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தமிழக அரசின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார்.
இதன் மூலம் மாவட்ட அளவில் 1517 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரிகள் கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமுள்ள குழந்தைகளுக்கு தலா 750 கிராம் வீதம், மாதம் 2 பாக்கெட் பிஸ்கெட்டுகள் வழங்கப்படும்.
இதனை அவர்கள் தினசரி 60 கிராம் வீதம் 4 பிஸ்கெட்டுகள் சாப்பிட வேண்டும். சிறிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள், தினமும் 30 கிராம் வீதம் 2 பிஸ்கெட்டுகள் சாப்பிட்டு வரவேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் உடல்நலம் ஆகியவை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட உள்ளது எனறு தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, வளரிளம்பருவத்தினரின் உடல்நலனில் அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசுக்கு கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
- கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணையின்போது வழக்கில் பல்வேறு புதிய தகவல்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் உயிர் தப்பினார்.
இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார். இந்த வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையின்போது இந்த வழக்கில் பல்வேறு புதிய தகவல்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை நடந்த இடம் மற்றும் ஜெயலலிதாவின் அறையில் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் 8 செல்போன்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதனை ஆய்வு செய்து, அதில் உள்ள விபரங்களை கொண்டு விசாரணை நடத்துவதற்காக அந்த செல்போன்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் கொடநாடு பங்காளவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா சசிகலாவின் அறைகள் மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றின் சில பொருட்கள் என 9 பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த பொருட்கள் அனைத்தையும் நேற்று ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் சி.பி.ஐ.டி.போலீசார் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே வருகிற 28-ந் தேதி ஊட்டி செசனஸ் கோர்ட்டில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அந்த சமயம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது, கொடநாடு பங்களாவில் கொள்ளை எதற்காக நடந்தது. இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை நடத்தப்பட்டுள்ள விசாரணையை அறிக்கையாக வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம் என்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளரான நடராஜிடம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதனை பதிவும் செய்து கொண்டனர்.
செல்போன்களை விசாரணைக்கு கேட்டது, கொடநாடு பங்களாவில் கைப்பற்றப்பட்ட 9 பொருட்களை கோர்ட்டில் ஒப்படைத்தது என அடுத்தடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில் யார் யாரிடம் விசாரணை நடந்தது, புதிதாக யாரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளதா? என்ற தகவல்கள் தெரியவரும்.
- ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும்.
- ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரில் குறுகலான சாலைகள் உள்ளன. ஆனால் இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கூடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே தேவாலா, பந்தலூரில் உள்ள ஆட்டோக்கள், உரிய அனுமதி இன்றி கூடலூரில் இயக்கப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் புகாா் அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும். ஆனால், தொலை தூரத்தில் இருந்து வந்து, கூடலூா் நகரில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் கூடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களை அடையாளம் காணும் வகையில் பிரத்யேக ஸ்டிக்கா் ஒட்டுவது என்று போக்குவரத்து வட்டார அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு இயக்கப்படும் உள்ளூா் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கான பணிகளில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி. செல்வராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குமாா், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரில் உள்ளூர் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனா்.
- நேற்று இரவு குஞ்சப்பனை பழங்குடியினர் விற்பனை அங்காடிக்கு அருகில் உள்ள ரோட்டில் முகாமிட்டு நின்றது.
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த குஞ்சப்பனை, முள்ளூர், மாமரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழம் விளைச்சல் தொடங்கி உள்ளது.
எனவே அந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. அப்போது அவை ரோட்டில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதும், துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக முள்ளூர் பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான சாலையில், காட்டு யானைகள் குட்டியுடன் கடந்த ஒரு மாதமாக உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காட்டு யானைகள் கூட்டம் நேற்று இரவு குஞ்சப்பனை பழங்குடியினர் விற்பனை அங்காடிக்கு அருகில் உள்ள ரோட்டில் முகாமிட்டு நின்றது.
இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே
அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் குஞ்சப்பனையில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டத்தை வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள், நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்க உள்ளது.
- மாணவர்கள் குலுக்கல் சீட்டு மூலம் தலைப்பினை தேர்வு செய்து பேச வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா் மற்றும் கருணாநிதி ஆகியோர் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள், நாளை (13-ந்தேதி) தொடங்கி 14ந்தேதி வரை 2 நாட்கள் நடக்க உள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள், ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ஜூலை 13, 14ந்தேதிகளில் நடக்க உள்ளன.
இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் மூன்று பரிசாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் பள்ளிகளில் நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரை தோ்வு செய்து, அவா்களுக்கு சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
முன்னதாக பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் குலுக்கல் சீட்டு மூலம் தோ்வு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேச வேண்டும். எனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் உரிய படிவத்தை பூா்த்தி செய்து பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் இன்று (12ந்தேதி) மாலை 6 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
- கொடநாடு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
நீலகிரி:
கொலை, கொள்ளை நடந்த கொடநாடு பங்களாவில் இருந்து 9 பொருட்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை, ஸ்டோர் ரூமில் இருந்து சில பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
- பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது.
- வால்பாறை, பொள்ளாச்சியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை குறைந்து உள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெரிய அளவில் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கவியருவி வறண்டு காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி முதல் தடை விதித்து இருந்தனர்.
இந்தநிலையில் பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு சென்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.
இந்தநிலையில் வால்பாறை, பொள்ளாச்சியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை குறைந்து உள்ளது. இதனால் கவியருவியில் தண்ணீர் வரத்து ஓரளவு குறைந்து சுற்றுலா பயணிகள் குளிக்க ஏதுவாக உகந்த சூழ்நிலை நிலவுகிறது. எனவே பொள்ளாச்சி கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான வனத்துறையின் தடை இன்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இன்று காலை வாகனங்களில் கவியருவிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் இதமாக விழும் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து, மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.






