என் மலர்
நீலகிரி
- 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டியின் மையப்பகுதியில் உள்ள ஜெயில்ஹில் குடியிருப்பில் அரசு ஊழியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கு நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக துப்புரவு பணியில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
இதனால் அங்கு உள்ள பாதையின் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து, புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் போக வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் புதர்களுக்குள் ஒளிந்திருக்கும் வனவிலங்குகள் அச்சுறுத்துகின்றன.
ஊட்டி நகரத்தின் மைய பகுதியில் உள்ள ஜெயில் ஹில் பகுதி, பராமரிப்பின்றி புதர்காடுகளாக மாறி கிடப்பது அங்கு வசிக்கும் பொதுமக்களை வேதனைப்படுத்தி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஜெயில்ஹில் பகுதியில் உள்ள சாலைகளில் மண்டிக்கிடக்கும் புதர்களை உடனடியாக வெட்டி அகற்றி, பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
- சுற்று வட்டார கிராம தலைவா்கள் உள்பட பலர் பங்கேற்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பரலட்டி கிராமத்தில் நேதாஜி விளையாட்டு சங்கம் சாா்பில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
இதில் மத்திய கால்நடை, மீன்வளத் துறை இணை மந்திரி எல். முருகன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் கூறியதாவது:-
மத்திய அரசு கேலோ இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதன் காரணமாக, மாவட்டம் மற்றும் கிராம அளவில் தலைசிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்கள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா். இந்தத் திட்டத்தால் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பரலட்டி கிராமத்தைச் சோ்ந்த கிஷோா் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று இந்த கிராமம், மாவட்டம், நாட்டுக்கு பெருமை சோ்த்து உள்ளாா். இதே போல பிட் இந்தியா திட்டம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் அறிமுகப்படுத்தியது. இது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பேணிகாத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமன், பாபு மற்றும் தும்மனட்டி, பரலட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம தலைவா்கள் உள்பட பலர் பங்கேற்றனா். முன்னதாக மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு படுகா் சமுதாய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
- கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
- உரிய தகுதிச்சான்றுடன் 15 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் பாதாள சாக்கடை முழுமையாக இல்லாததால் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்களின் பதிவு புத்தகத்தில் வாகனத்தின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதியப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
எனவே, கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிவு செய்யப்பட வில்லையென்றால், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை அணுகி பதிவுப் புத்தகம் மற்றும் அனுமதிச் சீட்டில் கழிவுநீர் அகற்றும் வாகனம் என உரிய தகுதிச்சான்றுடன் 15 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தவறினால் அனுமதிச்சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் கழிவுநீரை தொடர்ந்து கொட்டி வருவதாக கூறி அருகில் உள்ள பொதுமக்கள் கழிவுநீர் அகற்றும் வாகனத்தை சிறைபிடித்தனர். மேலும் அந்த வாகனத்தை கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயா கோத்தகிரிக்கு வந்து அந்த வாகனத்தை ஆய்வு செய்தார். அப்போது அதற்கான பதிவு மற்றும் அனுமதி உரிமம் இல்லை என்பது தெரியவந்தனது. இதனால் அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். அதேபோல அனுமதி பெறாமல் கோத்தகிரி, ஊட்டியில் இயங்கிய 2 வாகன உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்று பள்ளி வாகனங்களில் முறையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.
- பல்லாங்குழி போல் மாறிய சாலையால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி அடைந்துனர்.
- இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலம் மலப்புரம், திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக இயக்கப்படுகிறது. மேலும் சீசன் காலங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மோசமான பள்ளங்களை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இதனால் சீரமைத்த இடங்களில் சாலை மீண்டும் குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்லாங்குழி போல் உள்ள சாலையில் பயணம் செய்வதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் அவசர காலங்களில் ஆஸ்பத்திரிக்கு விரைவாக கொண்டு செல்ல முடியாத நிலை சாலை காணப்படுகிறது.
மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் நோயாளிகளை கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.
- தொடர் மழை காரணமாக அங்கு உள்ள புல்வெளிகள் பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன.
- சுற்றுலா பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முழுவதுமே கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் புல்வெளிகள் அனைத்தும் பச்சைபசேல் என காட்சியளிக்கிறது.
குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக அங்கு உள்ள புல்வெளிகள் பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன.
இதனால் வனத்தையொட்டிய சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்லக்கூ டிய சாலையோர புல்வெளிகளில் ஏராளமான புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன.
அவை அங்கு புற்களை மேய்ந்து கொண்டு, புல் தரையில் ஓய்வெடுத்தும் செல்வதை காண முடிகிறது. மேலும் காட்டெருமைகளும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. முதுமலையின் பசுமையான புல்வெளிகளில் புள்ளிமான்கள் கூட்டமாக நிற்கும் அழகு, சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்லும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், புள்ளி மான்களை செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தபடியே செல்கிறார்கள்.
- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
- கிளை செயலளார்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெட்போர்டு பகுதியில் குன்னூர் நகர தி.மு.க சார்பில் 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடந்தது. குன்னூர் நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார்.
மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத் துல்லா, குன்னூர் நகரமன்ற தலைவர் ஷீலாகேத்ரின், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், ஜெகநாத் ராவ், பழனிசாமி, மணிகண்டன், தலைமை கழக பேச்சாளர் ஜாகீர்உசேன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சிக்கந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், குமரேசன், வசந்தி, ஜெக நாதன், செல்வி, பாக்கியவதி, சித்ரா, சமீனா, அப்துல்காதர், மது, கோபு, சகாயநாதன், இளைஞரணி பிரவீன், அபி, கிப்சன், ஜெயராம் மற்றும் கிளை செயலளார்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- பலாப்பழத்தை உண்பதற்காக யானைகள் வருவது வழக்கம்.
- குன்னூர், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது.
குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம், கேஎன்ஆா் நகா், பா்லியாறு ஆகிய பகுதிகளில் பலா மரங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பலாப்பழங்கள் விளைந்து தொங்குகின்றன.
பலாப்பழத்தை உண்பதற்காக யானைகள் வருவது வழக்கம். அதன்படி தற்போது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்துள்ள காட்டு யானைகள் கே.என்.ஆா்.நகா், பா்லியாறு, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.
அந்த யானைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலையோரம் திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் வேட்டைத் தடுப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இதற்கிடையே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூா் ஹெல்த்கேம்ப் பகுதியில் போலீஸ் குடியிருப்புப் பகுதிக்குள் சம்பவத்தன்று நள்ளிரவு காட்டு யானைகள் புகுந்தன.
அந்த யானைகள் அங்கு ஒரு வீட்டின் முன்பு இருந்த மரத்தை குலுக்கி, அதில் இருந்த பலாப்பழத்தை பறித்து ருசித்தன. அதன்பிறகு அவை நீண்ட நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன.
- ஊட்டியில் ஒருசில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும்.
- ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களில் இனிப்பு சுவையை மேலும் கூட்ட ஆராய்ச்சிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
ஊட்டியில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், தருவூல ஜெர்சி காளை பண்ணையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு அப்புக்கோடு பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள முதன்மை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 8 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் ரூ.11.36 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும் வழங்கினார்.
பின்னர் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஆவினுக்கு சொந்தமான கருவூட்டல் பொலிகாளை பண்ணையில் சிறந்த மரபுத்திறன் உடைய ஜெர்சி, ப்ரீசியன் வகையை சேர்ந்த 157 கால்நடைககள் சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த காளைகளிடம் இருந்து உறைவிந்து சேகரிக்கப்பட்டு, மாநில அளவில் 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு உள்ள கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் உள்ளூர் பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்க முடியும். கால்நடைகளின் ஒட்டுமொத்த தரமும் உயரும். இதன்மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
தமிழகத்தில் ஒட்டுமொத்த தினசரி பால் உற்பத்தி 27 லட்சம் லிட்டராக இருந்தது. அது தற்போது 31 லட்சம் லிட்டராக உள்ளது. தமிழகத்தின் தினசரி பால் உற்பத்தியை 45 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக மாநில அளவில் 70 லட்சம் லிட்டர் பாலை கையாள தேவையான அடிப்படை வசதிகளை, ஆவின் நிர்வாகம் நடப்பாண்டு இறுதிக்குள் கொண்டு வரும்.
ஊட்டியில் ஒருசில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும். சுற்றுலா பிரதேசம் என்பதால் இலக்கு நிர்ணயித்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களில் இனிப்பு சுவையை மேலும் கூட்ட ஆராய்ச்சிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளிக்கு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். ஆவின் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் கூடுதலாக விற்கப்படுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கால்நடைகளை அடித்து கொல்லும் புலி கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
- வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்களை பொருத்தினர். அந்த கேமராக்களை தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை புலி நடமாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. அது கேமராக்களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தேவன்-1 பகுதியில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் விலங்கு புலியா அல்லது சிறுத்தையா என அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கேமராக்களில் எந்த வனவிலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை. இருப்பினும் அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
- வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பந்தலூர்
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் பந்தலூர் அருகே பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு, வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பேச்சு, ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு பிதிர்காடு வனச்சரகர் ரவி தலைமை தாங்கினார். சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், பிதிர்காடு வனவர்கள் ஜார்ஜ், பிரவின்சன், பெலிக்ஸ், பள்ளி தலைமை ஆசிரியர் மீரா மற்றும் ஆசிரியர்கள், வனத்துறையினர், பெற்றோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- ஒரு நபர் பல விண்ணப்பங்களை கொண்டு வந்து முகாமில் பதிவு செய்ய இயலாது.
- முகாம் நேரம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 5.30 மணி வரை ஆகும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பதிவு முகாம்கள் முதற்கட்டமாக ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் நடத்தப்பட உள்ளது.
இந்தநிலையில் பெண்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் 7 இடங்களில் கட்டுப்பாடு அறைகள் திறக்கப்பட்டு தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவாறு தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலை கடைகள் அருகே விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன்னரே நேரடியாக குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிற்கே சென்று நியாய விலை கடை விற்பனையாளர் விண்ணப்பத்தில் குடும்ப அட்ைட எண்ணை பதிவு செய்தும், டோக்கனில் முகாமிற்கு வரவேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை பதிவு செய்தும் வழங்குவார்.
ஒரு நபர் பல விண்ணப்பங்களை கொண்டு வந்து முகாமில் பதிவு செய்ய இயலாது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தினை அந்த குடும்ப தலைவியே அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகாமில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின்கட்டண ரசீது ஆகியவற்றுடன் சமர்ப்பித்து கை விரல் ரேகை மூலம் பதிவுகள் செய்திட வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப் பப்பதிவு முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முகாம் நேரம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 5.30 மணி வரை ஆகும். ஞாயிற்று கிழமைகளிலும் முகாம் நடைபெறும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் மேல் விபரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாடு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊட்டி 0423-2450034, 0423-2450035, வட்டாட்சியர் அலுவலகம், ஊட்டி 0423-2442433, வட்டாட்சியர் அலுவலகம், குந்தா 0423-2508123, வட்டாட்சியர் அலுவலகம், குன்னூர் 0423-2206102, வட்டாட்சியர் அலுவலகம், கோத்தகிரி 04266-271718, வட்டாட்சியர் அலுவலகம், கூடலூர் 04262-261252, வட்டாட்சியர் அலுவலகம், பந்தலூர் 04262-220734.
பொதுமக்கள் இத்திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் ஏனைய விபரங்கள் குறித்த சந்தேகங்களை மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கேட்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
- ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவே இந்த பூங்கா அமைக்கப்பட்டது.ஆனால், மெக் ஐவர் என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்காவை போன்று ஊட்டி பூங்காவை அமைக்க விரும்பி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மரக்கன்று, செடிகளை நடவு செய்தார். பின்னர் ஜப்பான், ஆஸ்திரேலியா, கேனரி ஜலேண்ட் போன்ற நாடுகளிலிருந்து பிரபலமான மரக்கன்றுகளை கொண்டுவந்து நடவு செய்தார்.
தற்போது, இந்த நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் அறிவியல் மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு காட்சி விருந்தாகவும் இருந்து வருகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்து வியப்படைகின்றனர். ஆனால், அவற்றின் வரலாறு குறித்து அறியும் வசதி இல்லாததால் ஏமாற்றமடைந்து வந்தனர்.
இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அரியவகை மரங்கள், தாவரங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
இதில், அந்த மரம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எப்போது நடவு செய்யப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தது. அவற்றின் மூலிகைத் தன்மை என்ன என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் கூறியதாவது-
தாவரவியல் பூங்காவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தாவரங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ரோஸ் என்று அழைக்கப்படும் கமாலியா, டிராகன் மரம், குரங்கு ஏறாமரம், ருத்ராட்சை மரங்களில் கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 100 மரங்களுக்கு கியூஆர் கோடு பெயர் பலகை வைக்கப்படும், பின்னர் அனைத்து மரங்களுக்கும் கியூஆர் கோடு உடன் பெயர் பலகை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






