என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கு உள்ள பலாமரத்தில் இருந்து பலாப்பழத்தை பறித்து ருசித்து சாப்பிடட காட்சி.
கூடலூர் அருகே போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்து பலாப்பழங்களை ருசித்த காட்டு யானை
- பலாப்பழத்தை உண்பதற்காக யானைகள் வருவது வழக்கம்.
- குன்னூர், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது.
குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம், கேஎன்ஆா் நகா், பா்லியாறு ஆகிய பகுதிகளில் பலா மரங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பலாப்பழங்கள் விளைந்து தொங்குகின்றன.
பலாப்பழத்தை உண்பதற்காக யானைகள் வருவது வழக்கம். அதன்படி தற்போது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்துள்ள காட்டு யானைகள் கே.என்.ஆா்.நகா், பா்லியாறு, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.
அந்த யானைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலையோரம் திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் வேட்டைத் தடுப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இதற்கிடையே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூா் ஹெல்த்கேம்ப் பகுதியில் போலீஸ் குடியிருப்புப் பகுதிக்குள் சம்பவத்தன்று நள்ளிரவு காட்டு யானைகள் புகுந்தன.
அந்த யானைகள் அங்கு ஒரு வீட்டின் முன்பு இருந்த மரத்தை குலுக்கி, அதில் இருந்த பலாப்பழத்தை பறித்து ருசித்தன. அதன்பிறகு அவை நீண்ட நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன.






