என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மனித விலங்கு ேமாதலை தடுப்பது போன்றவை குறித்து விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.

    ஊட்டி,

    உலக புலிகள் தினத்தை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் புலிகளின் முக்கியத்துவம், காடுகளின் பாதுகாப்பு மற்றும் மனித விலங்கு ேமாதலை தடுப்பது போன்றவை குறித்து விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் பழங்குடியின மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரையிட்டு காணப்பட்டது.

    தொடர்ந்து உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார். மேலும் அங்குள்ள மரங்களில் பைக்கஸ் மர தாவரங்கள் பதியும் பணியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார், தெப்பக்காடு வனசரக அலுவலர் மனோ ஜ்குமார், பழங்குடியினர் சூழல் மேம்பாட்டு குழுவின் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சாலைகளில் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
    • கரடியை வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது .

    இந்நிலையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கரடி ஒன்று மிகவும் ஆக்ரோஷமான நிலையில் நடமாடி வருகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சாலைகளில் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    ஆக்ரோஷமாக உலா வரும் கரடியால் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்னர் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதிமக்கள் வனத்துறையினர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன.
    • 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன.

    கோத்தகிரி

    கோத்தகிரி நகர் பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களிலும் உலா வருகின்றன.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் வந்து முகாமிட்டு உள்ளன. குறிப்பாக வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும், தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். இவ்வாறு உலா வரும் காட்டெருமைகளால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மருந்து வேதியல் துறை சார்பில் திறன் மற்றும் ஆளுமை மேம்பாடு என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. இதனை புதுடெல்லி தேசிய மகளீர் ஆணையம் நிதி உதவியுடன் ஜெ.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமம் ஒருங்கிணைத்தது. கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

    பேராசிரியர் ஆனந்த்விஜயகுமார் வாழ்த்தி பேசினார். மருந்து வேதியல் துறை இணைப்பேராசிரியர் கவுரம்மா வரவேற்றார்.நிகழ்ச்சியில் துறைத்தலைவர் காளிராஜன் பேசும் போது திறன் மேன்பாடு மற்றும் ஆளுமை பண்பை வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

    கோவை தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான தேசிய அறக்கட்டளை தலைவர் டாக்டர் கணேசன் தொழில் திறன்களை வளர்ப்பதில் மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுத்தினார்.

    உதகை ஐவிஸ் நிறுவன தலைவர் பாபு பேசுகையில் சமூகஊடகங்களை மாணவர்கள் பயனுள்ளதாக மற்றும் அம்சங்கள் குறித்து பற்றி விளக்கினார். கல்லூரி துணை பேராசிரியர் ஜெயக்குமார் பேசும்போது ஆளுமை வளர்ச்சி மற்றும் மன அழுத்த முறைபாடு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

    மைசூரு ஜெ.எஸ்.எஸ் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் ஜெய் சாமராஜேந்திர பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் புஷ்பலதா மாணவர்களுடன் கலந்துரையாடும் போது உலகளாவிய திறன் மேன்பாட்டில் மாணவ ர்களின் பங்கு பற்றி எடுத்துரைத்தார். முடிவில் கல்லூரி இணை பேராசிரியர் துரை ஆனந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.
    • ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியில் சட்டமன்ற தொகுதி, நகர, ஒன்றிய, பேரூர் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுடான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து நிர்வாக தொண்டர்களுக்கு ஆலோசனை களை மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ெஜகநாத் ராவ், செந்தில் , பிருந்தா, ஜெய்விக்னேஷ் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • ஊட்டியில் கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
    • தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன.

    ஊட்டி,

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவை தற்போது விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள மலை காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் அறுவடையாகும் காய்கறிகள் உள்ளூர் மார்க்கெட் மட்டுமின்றி ேமட்டுப்பாளையம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

    ஊட்டியில் கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தற்போது குறைந்து உள்ளது. அங்கு நாள்தோறும் சாராசரியாக, 25 டன்கள் வரை காய்கறி வரத்து இருக்கும். ஆனால் தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன. எனவே ஊட்டி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. 

    • கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நடந்துள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் அண்மையில் கோர்ட்டில் இருந்து வாங்கப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில் செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் சயான் ஆகியோர் தலைமையிலான கேரளாவை சேர்ந்த கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.

    இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    கோவை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் முதலில் இருந்து தங்கள் விசாரணையை தொடங்கினர். கொலை, கொள்ளை எப்படி அரங்கேறியது என்பதை அறிய சம்பவம் நடந்த இடமான கொடநாடு பங்களா, எஸ்டேட் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பங்களாவின் மேலாளர், ஊழியர்கள், இந்த சம்பவத்தில் சாட்சி அளித்தவர்கள் என பலரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் பல முக்கிய தகவல்கள் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனை கொண்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலீசார் ஏற்கனவே போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்து இருந்த 8 செல்போன்களை தங்களிடம் தரும்படி மனு போட்டு இருந்தனர்.

    அந்த செல்போன்களில் ஏதாவது தகவல்கள் உள்ளதா என்பதை அறிய அதனை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும், அதில் கிடைக்கும் தகவல்களை கொண்டு விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த செல்போன்கள் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் அதனை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் முக்கியமான தகவல்கள் ஒன்று கிடைத்துள்ளது.

    கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நடந்துள்ளது. அந்த சம்பவம் நடந்த மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாளான 25, மற்றும் 26-ந் தேதிகளில் சயானும், கனகராஜூம் ஆந்திராவில் இருந்துள்ள தகவல் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கொலை, கொள்ளை சம்பவம் நடந்த மறுநாளே 2 பேரும் கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சென்றதும், அங்கு அந்த மாநிலத்தில் மிக முக்கியமான தொழில் அதிபர் ஒருவரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அண்மையில் கோர்ட்டில் இருந்து வாங்கப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில் செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.

    சயான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆந்திரா சென்றதும், அங்கு 1 அரை நாட்கள் தங்கியிருந்ததும் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து அதிகாரிகள், சயான் மற்றும் கனகராஜ் ஆந்திராவில் சந்தித்த தொழில் அதிபரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    அங்கு அவரிடம், இவர்களின் பழக்கம் உங்களுக்கு யார் மூலம் கிடைத்து. யார் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் உங்களை சந்தித்தபோது கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஏதாவது தகவல்களை தெரிவித்தனரா? அல்லது ஆவணங்களை ஏதாவது கொடுத்து சென்றனரா என்றும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஆந்திரா வரைக்கு சென்றுள்ளது இந்த சம்பவத்தில் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

    கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனால் இந்த வழக்கில் இன்னும் சிலர் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வருகிற 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகிறார்.
    • ஜனாதிபதி கர்நாடக மாநில மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் மசினக்குடி வந்து, வாகனத்தில் தெப்பக்காடு செல்கிறார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    இந்த யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இதனை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோர் தங்கள் மகனாக நினைத்து வளர்த்து வந்தனர்.

    இந்த நிகழ்வினை மையமாக வைத்து மும்பையை சேர்ந்த கார்த்தகி கன்சவால்ஸ் என்பவர் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார்.

    இந்த படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில், சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் பெற்றது.

    ஆஸ்கர் விருது பெற்ற சில நிமிடங்களிலேயே இந்த படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்றனர்.

    இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி பிரதமர் மோடி முதுமலைக்கு வந்து பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

    மேலும் பிரதமர் அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு, அங்கு வளர்க்கப்பட்டு வரும் மற்ற யானைகளையும் பார்த்து அவற்றிற்கு உணவும் வழங்கினார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

    அப்போது பாகன் தம்பதியினர் முதுமலைக்கு வரும்படி ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு அவரும் வருவதாக தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் வருகிற 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகிறார். அன்றைய தினம் காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு 2.45 மணிக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு 3.45 மணிக்கு வருகிறார். தொடர்ந்து முதுமலையில் உள்ள பாகன்கள், ஆதிவாசி மக்களை சந்திக்கிறார். மேலும் வளர்ப்பு யானைகளையும் பார்வையிட உள்ளார்.

    பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மசினகுடிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் ஜனாதிபதி வரக்கூடிய பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் மசினகுடியில் உள்ள ஹெலிபேட் தளம், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், முதுமலை துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார் உள்பட பிற துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் ஜனாதிபதி வருகையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனையும் மேற்கொண்டனர். மசினகுடி ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், ஹெலிபெட் தளம் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஜனாதிபதி கர்நாடக மாநில மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் மசினக்குடி வந்து, வாகனத்தில் தெப்பக்காடு செல்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடந்து வருகிறது என்றார்.

    • ஊட்டியில் சுற்றி திரிந்த 16 நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன.
    • நாய்கள் பிடிக்கப்பட்டது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி,

    ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக புகார்கள் வந்தன. இதன்அடிப்படையில் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உத்தரவின்படி, சுகாதார அலுவலவர் ஸ்ரீதர் அறிவுரைப்படி நகராட்சிஅலுவலர்கள் களமிறங்கினர். அப்போது ஊட்டியில் சுற்றி திரிந்த 16 நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.   

    கூட்டத்தில் 21 வாா்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    கூடலூா் நகரமன்ற மாதாந்திர கூட்டம் தலைவா் பரிமளா தலைமையில் நடந்தது. துணைத்தலைவா் சிவராஜ், நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ்சேவியா் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் 21 வாா்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழக முதல்வா் அறிவித்தபடி கூடலூர் நகா்மன்ற தலைவருக்கு ரூ. 15 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், 19 உறுப்பினா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பூதியத்தை கமிஷனர் பிரான்சிஸ்சேவியா் வழங்கினாா். 

    • பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அதனை சரியாக பராமரிப்பது இல்லை. எனவே இந்த மாடுகள் ரோட்டின் நடுவே படுத்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கோத்தகிரியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான வாகனஓட்டிகள் முன்விளக்குகளை ஒளிரவிட்டு செல்கின்றனர். அவர்களில் சிலருக்கு ரோட்டில் கால்நடைகள் படுத்து கிடப்பது தெரிவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கால்நடைகளை ரோட்டில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அடுத்த மாதம் 27-ந்தேதி கோவில்களில் உழவாரப் பணி நடக்கிறது.
    • கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    இந்து முன்னணி நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

    செயற்குழு கூட்டத்தில் நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, மாவட்டம் முழுவதும் 750 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது, அடுத்த மாதம் 27-ந்தேதி கோவில்களில் உழவாரப் பணி நடத்துவது, நீலகிரி மாவட்டத்தில் நகரம், ஒன்றியம், பஞ்சாயத்து, வார்டுகளில் இந்து முன்னணி கிளைகள் அமைப்பது, ஞாயிற்றுக்கிழமை தோறும் பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது ஆகியவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    ×