என் மலர்tooltip icon

    நீலகிரி

    • காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணிநேரமும் பட்டாசுகள் வெடிக்க நடவடிக்கை
    • ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் விழிப்புணர்வு பேரணி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்கள் தீபாவளி யன்று பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் ஒலி மாசு ஏற்படும். செவிதிறன் குறையும் வாய்ப்பு ஏற்படும்.

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உயிர்க்கோளப்பகுதி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் தீபாவளி நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் அரியவகை தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்க முன்வர வேண்டும்.

    தீபாவளி அன்று பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே நீலகிரி மாவட்ட த்தில் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பட்டாசு கள் வெடிக்க வேண்டும். மேலும் அதிகஓசை எழு ப்பும் தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் விற்பனை உரிமை ரத்து செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக வனத்துறை சார்பில் மாசற்ற தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் நடந்து. இதில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் தொடங்கிய பேரணி, மத்திய பஸ் நிலையத்தில் முடிந்தது. அப்போது பேரணியில் நடங்கேற்ற வர்கள் பட்டாசு வெடிக்க மாட்டோம், காற்று மாசு இல்லாமல் கட்டுப்படுத்து வோம், ஒலிமாசுவை கட்டுப்படுத்துவோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி (ஊட்டி) கவுதம், உதவி வனபாது காவலர் தேவராஜ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், ஊட்டி நகராட்சி பொறியாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டார்.

    • வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலாததால் நடவடிக்கை
    • ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வருவதால், மார்கெட் நுழைவு வாயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலவில்லை. மேலும் அந்த பகுதியில் சரக்குவாகன நிறுத்தம் செயல்பட்டு வந்தது.

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வி.பி.தெரு பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே சரக்குவாகன நிறுத்தும் இடம் தற்போது குன்னூர் மெயின் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது இதனால் அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான நிகழ்ச்சியில் சரக்குவாகன நிறுத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பிக்கப் டிரைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    • தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கால நிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நேற்றிரவும் கோத்தகிரி, குன்னூர், அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், கோத்தகிரி-மேட்டுப்பாளையம், சாலை, குன்னூர் சாலை, ஊட்டி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை என்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

    மண் திட்டுகள், பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்திட்டுக்கள், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜே.சி.பி.எந்திரம் கொண்டு ராட்சதபாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் மண்திட்டுகளை ஒழுங்குபடுத்தி சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட 4 தாலூக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    • கோத்தகிரி வி.சி.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்
    • அட்டடி கிராமத்திற்கு குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

    அரவேணு,

    கோத்தகிரி அருகே நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டடி கிராம த்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக உரிய நடைபாதை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அட்டடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் முன்பாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோத்தகிரி வி.சி.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுதாகர், மண்டல துணை செயலாளர் மண்ணரசன், கிறிஸ்தவ சமூக நீதி அமைப்பின் மாநில துணைச் செயலாளர் கோல்ட்ரஸ், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அட்டடி கிராமத்திற்கு குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், பாதியில் நிறுத்திய பணியை நிறைவு செய்து தரவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்மு ருகன், சப்இன்ஸ்பெக்டர்கள் ரகுமான்கான், ரமேஷ், பப்பிலாஜாஸ்மின் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்னும் சில தினங்களில் மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டத்தின்கீழ் அட்டடி கிராமத்திற்கு உரிய குடிநீர் வசதி செய்து தரப்படும்.

    மேலும் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம மக்கள் கேட்கும் நடைபாதை தனியாருக்கு சொந்தமான நிலம். எனவே சம்பந்தபட்ட நில உரிமையாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

    பின்னர் அங்கு வந்த கோத்தகிரி தாசில்தார் கோமதி அட்டடியில் கிராம மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலம் ஒடை புறம்போக்கு நிலமா அல்லது தனியாருக்கு சொந்தமானதா என்பதை அறிய வருகிற 17-18-ந் தேதிகளில் நிலஅளவை செய்யப்படும்.

    அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிய வந்தால் உடனடியாக அங்கு நடைபாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அட்டடி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • வனவிலங்குகள் நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து உணவு-தண்ணீர் தேடி உலா வருகின்றன.
    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே அம்பிகாபுரம் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

    குன்னூர் பகுதியில் வனத்தையொட்டி அம்பிகாபுரம் கிராமம் அமைந்து உள்ளது. எனவே காட்டுக்குள் இருக்கும் வனவிலங்குகள் நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து உணவு-தண்ணீர் தேடி உலா வருகின்றன. அப்போது அவை வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை அடித்து கொன்று தின்று விட்டு மீண்டும் காட்டுக்குள் தப்பி செல்கின்றன.

    அம்பிகாபுரம் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் வீடுகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன்மூலம் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அம்பிகாபுரம் பகுதிக்கு நேற்று பட்டப்பகலில் ஒரு சிறுத்தை வந்தது. அது காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் முருகன் என்பவர் வீட்டுக்குள் கேட்டை தாண்டி குதித்து சென்றது. அப்போது வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு வளர்ப்புநாய், சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தது. எனவே அது சத்தமாக குரைத்தது.

    இது சிறுத்தைக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. தொடர்ந்து வளர்ப்பு நாயை கொல்வதற்காக பாய்ந்து சென்றது. இந்த நிலையில் அந்த நாய் லாவகமாக தப்பித்து குடியிருப்பு பகுதியில் இருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது. எனவே சிறுத்தைப்புலி ஏமாற்றத்துடன் மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றது.

    இதற்கிடையே அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் அதிரடியாக புகுந்த ஒரு சிறுத்தை, அங்கு நின்ற வளர்ப்பு நாயை விரட்டி செல்வது அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அம்பிகாபுரம் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டி அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள், அம்பிகாபுரம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனா்.

    • நகரமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சிக்கு வெற்றி
    • அக்கீம்பாபு, நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மேரிஸ்ஹில் பகுதியில் இருந்து ஜெ.எஸ்.எஸ் வரையிலான சாலையில் மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டும் கல்வெட்டு போடாமல் இருந்தது. எனவே அந்த பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் அப்பகுதி நகரமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியால், அங்கு ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய கல்வெட்டு அமைக்கும் பணி துவங்கியது.

    இந்த பணிகளை நகரமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க பாசறை மாவட்டசெயலாளருமான அக்கீம்பாபு மற்றும் நகரமன்ற உறுப்பினர் நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    • ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தொழிலை பதிவு செய்ய வலியுறுத்தல்
    • சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டுகோள்

    ஊட்டி,

    ஊட்டி தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் தமிழக சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல் மேலாளர் குணேஷ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அப்போது டூர் ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜெண்டுகள் ஆகியோர் ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தங்களின் தொழிலை பதிவு செய்ய வேண்டும். மேலும் உரிய அங்கீகாரம் தருவதன்மூலம் சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டும் என்பவை தொடர்பாக கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

    நீலகிரி மாவட்ட மேக்சி கேப்-டிராவல் ஏஜெண்டுகள் உரிமையாளர் சங்க தலைவர் குலசேகரன், செயலாளர் நித்தின்சேகர், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் இம்பாலாபாபு, பிரீத்திரவி, பவானிரமேஷ், இம்பீரியல் நஞ்சுண்டன், ஸ்டேன்லி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • 8-ந்தேதிக்குள் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்க உத்தரவாதம்
    • குறிப்பிட்ட தேதியில் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட முடிவு

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள முறையாக சம்பளம் வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதில் நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யு சங்கத் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வினோத், பொருளாளர் நவீன்சந்திரன், நகராட்சி-உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க செயலாளர் சேகர், பொருளாளர் ரவி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    பின்னர் ஊழியர் சங்க பிரதிநிதிகளிடம் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 8-ந்தேதிக்குள் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

    குறிப்பிட்ட தேதியில் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்
    • ஒவ்வொரு மாதமும் இலவச முகாம் நடத்த முடிவு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட்ரோட்டில் உள்ள லப்பை சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் ஊட்டி ஐ பவுண்டேஷன் சார்பில் ஜாவாபேட்டை வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குன்னூர் சின்ன பள்ளிவாசல் ஜமாத்தார் செய்திருந்தனர். இலவச மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    தொடர்ந்து ஜமாத் தலைவர் நூர்முகமது, செயலாளர் முபாரக் கூறுகையில், வருகிற டிசம்பர் மாதமும் இலவச பொதுநலமருத்துவ முகாம் நடத்தப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் மதம்-இன வேறுபாடு இன்றி இலவச முகாம் நடத்தப் போவதாக தெரிவித்து உள்ளனர்.

    • இணையத்தில் வீடியோ வைரல்
    • கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

    அரவேணு,

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிரித்து வருகிறது.

    குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் வீடுகளை சேதப்படுத்தி, வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி செல்கிறது.

    கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் ஆயிரக்க ணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இந்த குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இந்த சிறுத்தை வெகுநேரமாக குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து வன த்திற்குள் சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அனைத்தும், அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களில் பதிவாகி இருந் தது.

    இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிக்குள் சிறுத்தை நடமாடியதால் அச்சத்தில் உள்ள னர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சென்று ள்ளது. இனி இது தொடர்ந்து வரலாம்.

    சிறுத்தை ஊருக்குள் வந்ததால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவும் தனியாக செல்லும் பயப்படுகின்றனர்

    எனவே சிறுத்தையை கண்காணித்து ஊருக்குள் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • வணிகர்கள், வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை
    • சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வணிகர்கள், வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அருணா தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட் டது.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருணா கூட்டத்தில் பேசியதாவது:-

    தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கால் ஆன பைகள், கப்புகள், டம்ளர்கள், கரண்டிகள், முலாம் பூசிய காகித தட்டுகள், சாப்பாட்டு இலைகள், தோரணம் மற்றும் கொடிகள் உள்ளிட்ட 19 வகையான பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆலோசனை கூட்டத்தில் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாம கேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், வருவாய் கோட்டாட்சி யர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமதுகுதரதுல்லா (கூடலூர்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, ஊட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் உள்பட அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குன்னூர் பகுதியில் பல இடங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
    • வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே பரவலாக மழை பெய்து வருகிறது.

    அவ்வப்போது மிதமானது முதல், கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, மண்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. சாலையில் விழும் மரங்களால் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள் பகுதிகளில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    மழையால் குன்னூர் வண்ணாரப்பேட்ைட, கோத்தகிரி சாலை, ஊட்டி சாலை, பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீரும் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் அவதியடைந்தனர்.

    குன்னூர் சந்திரா காலனியில் நடைபாதையை ஒட்டி தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் அதிகமானோர் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மழை பெய்தததால் தொழிலாளர்கள் பணியை நிறுத்தி விட்டு, அருகே உள்ள கட்டிடத்தில் சென்று ஒதுங்கி நின்றனர்.

    அந்த சமயம் பெய்த மழைக்கு, பணி நடைபெற்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    மண்சரிவு ஏற்பட்டு அருகே உள்ள வீடுகள் மீது விழுந்ததில், வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் வீட்டில் ஆட்கள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    குன்னூர் பகுதியில் பல இடங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அவை எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை காணப்படுகிறது.

    எனவே அந்த மின்கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, தற்போது மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் மலை சரிவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. காலையில் தொடங்கி இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.

    அவ்வப்போது பெரிய மழையாகவும், பெரும்பாலான நேரங்களில் தூறி கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் குளிரும் வாட்டி வதைப்பதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    குளிரில் இருந்து தப்பிக்க வீடுகளில் தீமூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள்.

    இதுதவிர பகல் நேரங்களில் கடும் மேகமூட்டமும் நிலவுகிறது. இதனால் சாலைகள் எதுவும் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.

    ×