என் மலர்tooltip icon

    நீலகிரி

    கிராமங்களில் பொது நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு உத்தரவிட்டு உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிராமங்கள் அளவில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்ட மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியில் களம் இறங்கி விட்டனர். ஆனால் தற்போதுதான் மற்ற மாவட்டங்களில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற மக்கள் முன்னோடியாக திகழ வேண்டும். சமூக விழிப்புணர்வு என்ற திட்டம் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களிலும் ஊர் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    கிராமங்களுக்கு ஏதேனும் வெளியாட்கள் வந்தால் உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். ஊர்களில் இருந்து யாரேனும் வெளியே சென்று வந்தால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

    முகக்கவசம் அணிவது, கை கழுவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்று விட்டு தங்களை தனிமைப்படுத்தாமல் வெளியே யாரேனும் சென்றால் தகவல் தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அரசு, மாவட்ட நிர்வாகம் கூறும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை அவசியம்.

    நீலகிரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 கிராம ஊராட்சிகளிலும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீலகிரியை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும். மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கிராமங்களில் பொது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சந்திரசேகர் மற்றும் 20 கிராம தலைவர்கள் கலந்துகொண்டனர்.
    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரம் பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 32 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 26 பேரும், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 26 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதியான நபர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் முதல் நிலை, இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நீலகிரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசித்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. தினமும் 600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. இதுவரை 16 ஆயிரம் பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. தொற்று அதிகமாக பரவி வருவதால் 2 இடங்கள் கிளஸ்டராக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அறிகுறி கண்டறியப்பட்ட தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைவருக்கும் மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. அவசிய தேவை இருந்தால் மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    குன்னூர் வெலிங்டன் பகுதியில் ஒருவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை. அவர் உடல் நலக்குறைவால் இறந்து உள்ளார். ராணுவ பகுதி என்பதால் அத்துறையின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து உடல் அடக்கம் நடந்தது. இதை சமூக வலைத்தளத்தில் தவறாக பதிவிட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் யாரேனும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    போலி இ-பாஸ் தயாரித்து பெங்களூருவில் இருந்து ஊட்டி வந்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கக்கநல்லா சோதனைச்சாவடி வழியாக வாடகை காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் இரவு பெண் உள்பட 5 பேர் வந்தனர். பின்னர் ரோகிணி சந்திப்பு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விடுதியில் தங்கினர். அவர்கள் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்ததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனடியாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் அதிகாரிகள் விடுதிக்கு சென்று, விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து ஊட்டிக்கு போலி இ-பாஸ் தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊட்டி நகர மேற்கு போலீசாரிடம், அவர்கள் 5 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ராம்பிரசாத்(வயது 37), பெங்களுருவை சேர்ந்த ரமேஷ் சர்மா(42), அவரது மனைவி மனிஷா சர்மா(28), இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஈஸ்வர் சர்மா(50), பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ் சர்மா (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்த அவர்களை சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் கணேஷ் என்பவர் சமையல் மற்றும் உதவியாளர் வேலைக்காக ஊட்டிக்கு வரும்படி அழைத்ததும், அதற்கு போலி இ-பாஸ் தயாரித்து ரூ.16 ஆயிரம் வாடகை செலுத்தி காரில் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒப்பந்ததாரர் கணேஷ், கார் டிரைவர் ஜெகதீஷ் ஆகிய 2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 26 இடங்களில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வெளியிடங்களுக்கு சென்று வந்தவர்களால் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குளிச்சோலை மற்றும் எல்லநள்ளி ஆகிய 2 பகுதிகள் தொற்று பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு கிளஸ்டராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எல்லநள்ளியில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க 6 கிராமங்கள் மூடப்பட்டு உள்ளன. அரசின் அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், 10 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர். 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே கடந்த 2 வாரங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட டைகர் ஹில், எட்டின்ஸ் சாலை, காந்தல் இந்திரா காலனி, புட்டுசாமி லைன், கேஷ் பஜார் மற்றும் தூதூர் மட்டம் திலகர் நகர், கோத்தகிரி ராம்சந்த், குன்னூர் அலெக்ஸ்ண்டர் ஹவுஸ், எல்லநள்ளி காமராஜர் நகர் உள்பட 26 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு தொற்று பரவாத வகையில் புதிய தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    ஊட்டி, கூடலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் எம்.எல்.ஏ. நூதன போராட்டம் நடத்தினார்.
    ஊட்டி:

    தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஊட்டியில் உள்ள நீலகிரி கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற விலை உயர்வு மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும். எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பழங்காலத்தில் இருந்ததைபோல் குதிரைகள் மீது அல்லது சைக்கிள்களில் செல்ல நேரிடும் என்று கணேஷ் எம்.எல்.ஏ. கூறினார். பின்னர் அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஊட்டி காந்தல் முக்கோணத்தில் இருந்து படகு இல்லம் வரை சாலையில் குதிரை மீது அமர்ந்து சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். எம்.எல்.ஏ.வுடன் கட்சி நிர்வாகிகளும் குதிரைகளில் சென்றனர்.

    இதேபோன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் ராஜூ, சி.கே.ராஜ், அம்சா, சளிவயல் ஷாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் பந்தலூரிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நீலகிரி மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    உலகெங்கிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாவட்ட கலெக்டர்களுடன் அவ்வப்போது காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று கண்டறியப்பட்ட உடன் இரண்டாம் நிலை தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல், மேற்கொண்டு புதிய தொற்றுகள் உருவாகாமல் தடுத்தல் என சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் போலீசார் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. நகரப்பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடித்தலை கண்காணிக்கவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    தனியார் நிறுவனங்களில் பணிக்கு வரும் ஊழியர்களை தினமும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தால், புதிய தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள இயலும். எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் நலன் கருதி எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    கூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானையை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    கூடலூர்:

    கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் பயிர்கள், வீடுகள் சேதம் அடைகின்றன. மேலும் சில நேரங்களில் மனித-காட்டுயானை மோதல் ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்கிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள பாண்டியாறு குடோன், முன்டக்குன்னு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டுயானை ஒன்று முகாமிட்டு வருகிறது. மேலும் வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கிராமங்களுக்குள் காட்டுயானை நுழையாமல் தடுக்க வேண்டும் என்று வனத்துறையினரை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

    அதன்பேரில் தேவாலா வனத்துறையினர் நேரில் சென்று, காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. தற்காலிகமாக வனத்துக்குள் செல்லும் காட்டுயானை, மீண்டும் கிராமங்களுக்குள் வந்து விடுகிறது. குறிப்பாக பட்டப்பகலில் கிராமங்களுக்குள் வந்து நிற்பதை காண முடிகிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரவே கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் விளைநிலங்களில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கிராம மக்கள், விவசாயிகள் கூறியதாவது:-

    முன்டக்குன்னு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் முகாமிட்டுள்ள காட்டுயானை மூர்க்க குணம் உடையது. வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டால், சிறிது தூரம் வனப்பகுதிக்குள் செல்கிறது. அதன்பின்னர் மீண்டும் விவசாய பயிர்களை தேடி கிராமங்களுக்குள் வந்து விடுகிறது. சில சமயங்களில் வனத்துறையினரையும் விரட்டி உள்ளது. தற்போது பட்டப்பகலில் விவசாய நிலங்களில் முகாமிட்டு வருகிறது. இதனால் நிம்மதியாக வெளியே நடமாட முடியவில்லை. எனவே வனத்துறையினர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு காட்டுயானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும். மேலும் மீண்டும் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் 90 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல், பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒரு சிலருக்கு அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது தவிர பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்களுக்கு பறக்கும்படை மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மூலம் தலா ரூ.50 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி நகராட்சி எல்லையில் கமிஷனர் சரஸ்வதி அறிவுரைப்படி 3 குழுவினர் முகாமிட்டு, இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தவிர உரிய முறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. சுழற்சி முறையில் வாகன சோதனை நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.35,450 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என நீலகிரி மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மூலம் முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கேத்தி பேரூராட்சியில் 6 கிராமங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் தனியார் ஊசி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் என மொத்தம் 755 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களை வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே சென்று வருவது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் முதல் நிலை, இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லநள்ளி, உல்லாடா, கேத்தி, பிரகாசபுரம், மந்தாடா, அச்சனக்கல் ஆகிய 6 கிராமங்களுக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அதன்படி மேற்கண்ட கிராமங்களின் எல்லைகள், சாலைகளில் தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைத்து மூடப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, உரிய அனுமதியின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது. இதை கண்காணிக்க போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் திறக்கப்பட்டு இருந்த கடைகளை போலீசார் அடைக்கும்படி கூறியதையடுத்து கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கிராமங்கள் வழியாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல தடை இல்லை. ஆனால் வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை. ‘சீல்’ வைக்கப்பட்ட கிராமங்களுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு கேத்தி பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் போடுவது, கால்வாய்களை சுத்தம் செய்வது போன்ற சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே உள்ளது அட்டடி குடியிருப்பு பகுதி. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்களும், அதனை சுற்றிலும் வனப்பகுதிகளும் காணப்படுகிறது. அட்டடி குடியிருப்பு பகுதி மக்கள் பெரும்பாலும் தொழிலாளர்களாக இருப்பதால், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அட்டடி குடியிருப்பு பகுதியை சுற்றி உள்ள தேயிலை தோட்டங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. தினமும் மாலை வேளையில் தேயிலை தோட்டங்களில் உள்ள பாறைகளில் சிறுத்தைப்புலி ஓய்வெடுப்பதை காண முடிகிறது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிகளில் விட வேண்டும் என்று அவர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    ஊட்டி:

    ஊட்டி அருகே தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் தொடர்பில் இருந்த மந்தாடா புதுலைன் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய 2 பெண்கள், குன்னூர் குரூஸ்பேட் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண், 18 வயதுடைய ஆண், அருவங்காட்டை சேர்ந்த 58 வயதுடைய ஆண், எல்லநள்ளியை சேர்ந்த 35 வயதுடைய ஆண் என 6 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் வெளிமாவட்டத்துக்கு சென்று வந்த காந்தல் இந்திரா காலனியை சேர்ந்த 65 வயதுடைய முதியவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து உள்ளது. அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கேத்தி பேரூராட்சியில் 10 தொழிலாளர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளாமல், தொற்றை பரப்பும் வகையில் வெளியே நடமாடியதாக கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 10 பேர் மீது கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    கூடலூர் அருகே காட்டுயானை புகுந்து வாழைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் அருகே புளியாம்பாரா பகுதிக்குள் கடந்த சில நாட்களாக காட்டுயானை புகுந்து, வாழைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேவாலா வனத்துறையிடம் புகார் தெரிவித்தும், காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இனிமேலாவது அட்டகாசம் செய்யும் காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ×