என் மலர்tooltip icon

    நீலகிரி

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 35 கிராம ஊராட்சிகளில் சமூக விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டார். அவர் குன்னூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். அவரது அறிவுரையின் பேரில், நீலகிரி முழுவதும் உள்ள கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வு (கம்யூனிட்டி விஜில்) என்ற முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 கிராம ஊராட்சிகளில் ஊர் தலைவர்கள், சமுதாய தலைவர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள் தோறும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் யாரேனும் கிராமங்களில் இருந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தாலோ அல்லது வெளியூர்களில் இருந்து கிராமங்களுக்கு வந்தாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிமாவட்டம் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்கிறார்களா அல்லது வெளியே சுற்றுகிறார்களா என்பதும் கண்காணிக்கப்படுகிறது. இந்தக் குழுக்கள் கொடுக்கும் தகவலின் பேரில் இ-பாஸ் இல்லாமல் நீலகிரிக்கு வருகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கிராமங்கள் தோறும் வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கை கழுவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நீலகிரியில் பாதிப்பு 150 ஆக அதிகரித்து உள்ளது. கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க கிராம ஊராட்சிகளில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குழுக்கள் அமைத்து, புதியதாக யாருக்கும் தொற்று ஏற்படாத வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரியை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற புதிய முயற்சியான சமூக விழிப்புணர்வு முறைக்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
    கூடலூர் அருகே வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து 500-க்கும் மேற்பட்ட வாழைமரங்களையும், 50-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் கூடலூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மான், யானை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவலுக்கு சென்று உறக்க சத்தம் போட்டும், தகரங்களை தட்டி ஒலி எழுப்பியும் வன விலங்குகளை விரட்டியடித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு கடமான்குளம் பகுதியில் உள்ள சதீஷ் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து 500-க்கும் மேற்பட்ட வாழைமரங்களையும், 50-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்திவிட்டு அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு என மொத்தம் 18 பிரிவுகள் உள்ளன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி உள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

    மலைப்பாதைகளில் ஏற்படும் விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள், வனவிலங்குகள் தாக்குதலால் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    ஆனால் ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல 3 மணி நேரம் ஆகிறது. குறிப்பாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வருவதால், போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கோவைக்கு ஆம்புலன்ஸ் செல்லும்போது காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கின்றன. எனவே ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    இதற்கிடையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்காக ஊட்டியில் உள்ள எச்.பி.எப். பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், அதை மருத்துவ கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து வனத்துறையின் ஒத்துழைப்போடு 25 ஏக்கர் நிலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான டெண்டர் விடும் பணியும் முடிந்தது.

    இந்த நிலையில் அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊட்டி மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி கிடைத்தது. தொடர்ந்து 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நாளை மறுநாள் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
    ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டது.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பணிக்கு வரும் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஆரம்பத்தில் கைகளால் தொடாமல் காலால் மிதித்தால் கிருமி நாசினி வழங்கும் எந்திரம் மூலம் கைகளை சுத்தப்படுத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று கிருமி நாசினி வழங்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டது. எந்திரத்தின் கீழ்ப்பகுதியில் கையை கொண்டு சென்றதும் கிருமி நாசினி தெளிக்கிறது. குறிப்பிட்ட அளவு மட்டும் வருவதால் கிருமி நாசினி வீணாவதில்லை. மின்சாரம் மூலம் தானியங்கி எந்திரம் செயல்படுகிறது. கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களும் கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே முகக்கவசம் அணியாமல் அலுவலகத்துக்குள் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஊட்டியில் முழு ஊரடங்கை மீறிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நேற்று நீலகிரி மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பால் மற்றும் மருத்துவ தேவையை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது, மீறி வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதையடுத்து போலீசார் ஊரடங்கை மீறி வெளியே யாரும் வாகனங்களில் சுற்றுகிறார்களா? என்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஊட்டி நகரில் முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 15 பேர் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொணவக்கரை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொணவக்கரை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், ஊராட்சி துணை தலைவர் சுப்பிரமணி, செயலர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

    இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
    ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்ப பரிசோதனைக்கு தானியங்கி கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அவர்களிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து மீண்டும் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.

    இதற்கிடையில் சென்னையை நிரந்தர முகவரியாக கொண்ட 49 வயது ஆண், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் சென்னையில் இருந்து நீலகிரிக்கு வந்தபோது சோதனைச்சாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் வசித்து வந்த ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சர்ச்ஹில் போலீஸ் குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் 10 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தினமும் பணிக்கு வரும் அதிகாரிகள், போலீசார், பணியாளர்கள் தானியங்கி கிருமி நாசினி வழங்கும் எந்திரத்தில் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதற்கிடையில் காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் வைத்து முதலில் பரிசோதிக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தொடுதல் மூலம் பரவும் என்பதால், தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக கைகளால் தொடாமலேயே உடல் வெப்பநிலையை கணக்கிட தானியங்கி கருவி நுழைவாயிலில் பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கருவியின் எதிரே பக்கவாட்டில் நெற்றியை கொண்டு சென்றால் உடல் வெப்பநிலை எவ்வளவு என்பதை திரையில் காண்பித்து விடும். வெப்பநிலை அதிகமாக இருக்கிறதா அல்லது சரியாக இருக்கிறதா என்பதை பணியில் இருக்கும் போலீசார் சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் இருந்தால் பீப் சத்தம் எழுப்பும். இந்த தானியங்கி கருவி மின்சாரம் மூலம் இயங்குகிறது.
    குன்னூர் அருகே எடப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி குன்னூர் அருகே எடப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கொரோனா சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு முன்னிலை வகித்தார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசியதாவது:-

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும். எனவே அனைவரும் சுகாதாரத்தை பேண வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். வெளியூர்களில் இருந்து உறவினர்கள் யாரேனும் வந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்த நபர்களே பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனந்தா நேரு, எடப்பள்ளி ஊராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் கோபால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    தமிழக-கேரள எல்லையில் தடுப்புச் சுவரை தாண்டி செல்ல ‘குட்டி’க்கு தாய் யானை பயிற்சி அளித்தது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலும் மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுவதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் கீழ்நாடுகாணி அருகே தேன்பாறா என்ற இடத்தில் சரக்கு லாரிகள் சென்று கொண்டு இருந்தன. அப்போது பிறந்து 2 மாதங்களே ஆன குட்டியானையுடன் 2 காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்தன. உடனே சரக்கு லாரிகளை டிரைவர்கள் ஆங்காங்கே நிறுத்தினர்.

    இதற்கிடையில் சாலையோர தடுப்புச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் குட்டியானை தவித்தது. இதை கண்ட தாய் யானை, தடுப்புச்சுவரை தாண்டி செல்வது எப்படி? என்று செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தது. இதை கவனித்த குட்டியானை, முன்னங்கால்களை தடுப்புச்சுவரில் தூக்கி வைத்து, ஏற முயன்றது. ஆனால் முடியவில்லை.

    உடனே தடுப்புச்சுவரின் மீது தாய் யானை ஏறி நின்றது. இதை பார்த்து குட்டியானையும் முன்னங்கால்களை தடுப்புச்சுவர் மீது தூக்கி வைத்து, பின்னங்கால்களை தூக்கி மீண்டும் ஏற முயன்றது. எனினும் ஏற முடியாமல் தவித்தது. உடனே தாய் யானை துதிக்கையால் குட்டியானையை தூக்கிவிட்டு தடுப்புச்சுவரை தாண்டி செல்ல உதவியது. தொடர்ந்து குட்டியுடன் 2 காட்டுயானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன.

    இந்த நெகிழ்ச்சி காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த லாரி டிரைவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்த சென்றதும், டிரைவர்கள் தங்களது லாரிகளை இயக்கி சென்றனர். 
    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மன அழுத்தத்தை போக்க கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 39 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்ட 44 பேர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியிலும், அறிகுறி தென்பட்ட 24 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆரம்பத்தில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு மட்டும் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் அறிகுறி இல்லாதவர்களுக்கு ஊட்டியிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 35 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. படுக்கைகள் இடைவெளி விட்டு போடப்பட்டு இருக்கிறது.

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மூன்று வேளையும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அவர்களை முழு பாதுகாப்பு கவச உடையணிந்த டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று உறுதியானவர்கள் ஆஸ்பத்திரியிலேயே கண்காணிக்கப்பட்டும், சிகிச்சை பெற்றும் வருவதால் மன அழுத்தத்துக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலையில் அறைக்கு உள்ளேயே யோகா பயிற்சியை நோயாளிகள் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் மன வலிமை அதிகரிக்கும். ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் குணமடைந்தார். அவரை டாக்டர்கள் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு சந்தேக நபர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 67 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
    நீலகிரி:

    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு நீலகிரி மாவட்டத்தில் நேற்று வரை 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 33 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 67 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா உறுதி செய்யப்பட்ட முதியவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    முதியவர் உயிரிழந்ததன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 
    நீலகிரியில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு 100-ஐ கடந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 89 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அதாவது தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் 2-ம் நிலை தொடர்பில் இருந்த எல்லநள்ளியை சேர்ந்த 43 வயது பெண், 34 வயது பெண், பெரிய பிக்கட்டியை சேர்ந்த 48 வயது பெண், ஊட்டி அருகே போர்த்தியாடாவை சேர்ந்த 24 வயது வாலிபர், கேத்தியை சேர்ந்த 42 வயது ஆண், 38 வயது பெண், 47 வயது பெண், 60 வயது மூதாட்டி, 37 வயது ஆண், 65 வயது மூதாட்டி, 40 வயது பெண், வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்த 45 வயது பெண், குன்னூர் கல்லூரி சாலையை சேர்ந்த 47 வயது பெண், குன்னூர் உதயம் நகரை சேர்ந்த 45 வயது பெண், உபதலை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 27 வயது வாலிபர், அதிகரட்டியை சேர்ந்த 57 வயது ஆண், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு பகுதியை சேர்ந்த 48 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

    மேலும் கோத்தகிரி அருகே கேர்பெட்டாவை சேர்ந்த 50 வயது பெண் தனது மகள் பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் சென்று வந்தார்.

    அவரிடம் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு 107 ஆக உயர்ந்து உள்ளது.

    இதில் 39 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 68 பேரில் 44 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும், 24 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறுகிய நாட்களில் மலை மாவட்டமான நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது.

    இதனால் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ×