என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க குழு அமைப்பு- கலெக்டர் தகவல்

    நீலகிரி மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    உலகெங்கிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாவட்ட கலெக்டர்களுடன் அவ்வப்போது காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று கண்டறியப்பட்ட உடன் இரண்டாம் நிலை தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல், மேற்கொண்டு புதிய தொற்றுகள் உருவாகாமல் தடுத்தல் என சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் போலீசார் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. நகரப்பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடித்தலை கண்காணிக்கவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    தனியார் நிறுவனங்களில் பணிக்கு வரும் ஊழியர்களை தினமும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தால், புதிய தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள இயலும். எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் நலன் கருதி எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×