search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு பேசியபோது எடுத்தபடம்.
    X
    கூட்டத்தில் சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு பேசியபோது எடுத்தபடம்.

    கிராமங்களில் பொது நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - சிறப்பு அதிகாரி உத்தரவு

    கிராமங்களில் பொது நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு உத்தரவிட்டு உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிராமங்கள் அளவில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்ட மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியில் களம் இறங்கி விட்டனர். ஆனால் தற்போதுதான் மற்ற மாவட்டங்களில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற மக்கள் முன்னோடியாக திகழ வேண்டும். சமூக விழிப்புணர்வு என்ற திட்டம் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களிலும் ஊர் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    கிராமங்களுக்கு ஏதேனும் வெளியாட்கள் வந்தால் உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். ஊர்களில் இருந்து யாரேனும் வெளியே சென்று வந்தால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

    முகக்கவசம் அணிவது, கை கழுவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்று விட்டு தங்களை தனிமைப்படுத்தாமல் வெளியே யாரேனும் சென்றால் தகவல் தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அரசு, மாவட்ட நிர்வாகம் கூறும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை அவசியம்.

    நீலகிரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 கிராம ஊராட்சிகளிலும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீலகிரியை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும். மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கிராமங்களில் பொது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சந்திரசேகர் மற்றும் 20 கிராம தலைவர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×