என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்பட அனைத்து இடங்களிலும் காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே செல்கின்றனர்.

    குன்னூரில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக இரவு மற்றும் பகல் நேரத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக குளிர் இருப்பதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

    காற்று அதிவேகத்துடன் வீசுவதால் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த காற்றுக்கு குன்னூர் நகர பகுதிகளில் உள்ள 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பறந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக யாரும் நடந்து செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    கோத்தகிரி மற்றும் கொடநாடு, ஓட்டுப்பட்டரை, சோலூர்மட்டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்தது. அதிகாலையில் கடும் பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்குகின்றனர்.

    குறிப்பாக வயதானவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சுவயட்டர், தலைக்கு குல்லா உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு கடும் பனி மூட்டத்துக்கு மத்தியிலும் வேலை பார்த்து வருகின்றனர். இதுதவிர சில ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள் தங்கள் வாகனங்களின் அருகே குளிரில் இருந்து காத்து கொள்ள தீமூட்டி காய்ந்து வருகின்றனர்.

    தொடர்ந்து 2 நாட்களுக்கும் மேலாக கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டத்தின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீடிக்கும் கனமழையால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகன விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் பேரிடர் அபாயம் உள்ள 456 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    நீலகிரி கலெக்டர் பெயரில் ஆன்லைனில் மோசடி நடந்தது. போலி மின்னஞ்சல் மூலம் அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு, அதன் மூலம் ‘ஆன்லைன் வர்த்தக பரிசு கார்டு பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்று நீலகிரி மாவட்டம் உள்பட சில மாவட்ட அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் என்னை தொடர்புகொண்டு கேட்டபோதுதான் எனக்கு தெரியவந்தது. மேலும் சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
    இது முழுக்க முழுக்க பொய்யானது ஆகும். போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியது கண்டறியப்பட்ட உடன் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலம் வர்த்தக பரிசு கார்டு ஆர்டர் செய்து, மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். எத்தனை பரிசு கார்டுகள், எவ்வளவு மதிப்பில் வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும் என்று திரும்ப திரும்ப மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. அந்த மின்னஞ்சலில் நீலகிரி மாவட்ட மாஜிஸ்திரேட்டு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனது அலுவலக மின்னஞ்சல் collrnlg@gmail.com இதுதான். எனவே போலியான மின்னஞ்சல் மூலம் நான்(அதாவது கலெக்டர்) அனுப்புவதை போல அனுப்பப்படும் மின்னஞ்சலில் அமேசான் பரிசு கார்டு லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அதை திறந்து பார்க்கவும் வேண்டாம். இந்த தவறான செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, கலெக்டர் பெயரில் தொடங்கப்பட்ட போலியாக மின்னஞ்சலில் இருந்து குறுஞ்செய்தி எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்த ஐ.பி. முகவரி தேடப்பட்டு வருகிறது. இந்த முகவரி கண்டறியப்பட்ட உடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன்களில் ஹைபர்லிங்க், கியூ.ஆர். கோர்டை சிலர் அனுப்பி மற்றவர்களின் செல்போன்களில் உள்ள தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறு செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    கோத்தகிரி:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் குஞ்சப்பனை மற்றும் பர்லியார் சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை செய்யப்படுகிறது. இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உரிய இ-பாஸ் பெற்று வருகிறார்களா? எனவும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் உரிய சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதற்காக மாவட்ட நிர்வாகத்தால் சோதனைச்சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் வந்தது. இந்த காரை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது கோத்தகிரி அருகே உள்ள கெர்பெட்டா அம்மன்நகரை சேர்ந்த ஒப்பந்ததாரர் மணிகண்டன் (வயது 45) என்பதும், காரில் அவருடைய நண்பர் ஒருவர் இருந்ததும் தெரியவந்தது. மேலும் 2 பேரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து மணிகண்டன் தொடர்ந்து காரை இயக்க வேண்டாம் என்று போலீசார் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், மற்றும் அவருடைய நண்பர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தைகளால் போலீசாரை திட்டி, மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை அந்த காரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் குஞ்சபனை சோதனைச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஊசிமலை காட்சி முனைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என கூடலூர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    கூடலூர்:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் இ-பாஸ் பெற்றால் மட்டுமே நீலகிரிக்குள் வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊசிமலை காட்சி முனை, நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, பைக்காரா படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

    இதனால் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இ-பாஸ் முறையில் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல் சுற்றுலா தொழிலை சார்ந்து வாழும் தொழிலாளர்கள் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    இந்த நிலையில் இ-பாஸ் முறையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவதால் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர். இதேபோல் உள்ளூர் மக்களும் பொழுதைக் கழிக்கும் வகையில் நெருக்கடி அதிகம் இல்லாத சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    கூடலூர் பகுதியில் உள்ள பைக்காரா படகு குழாம், நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, ஊசிமலை காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்கும் வகையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் இ-பாஸ் பற்று சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் உள்ளூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊசிமலை காட்சி முனை உள்ளிட்ட இடங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மனஅழுத்தத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நீலகிரியில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டத்துக்குள் இயக்கப்படும் அரசு பஸ்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயணிகள் பயணம் செய்வதை உறுதி செய்ய போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி தென்படும் நபர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் பரிசோதனை செய்வதற்காக மாவட்ட எல்லைகளான குஞ்சப்பனை, காட்டேரி சோதனைச் சாவடிகளில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர அறிகுறி கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறி தென்பட்டால் கொரோனா பரிசோதனை நடத்தவும் நடமாடும் வாகன வசதி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தினமும் 2,000 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 700 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் அருகே உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நீலகிரியில் கொரோனா உறுதியான நபர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் என மாவட்டம் முழுவதும் 334 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 317 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. நாளுக்கு நாள் தனிமைப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதிகளுக்கு வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கிருமிநாசினி தெளிப்பது போன்ற சுகாதாரப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தேயிலை தொழிற்சாலைகள் பசுந்தேயிலை கொள்முதல் நிறுத்தி வைத்திருப்பதை கைவிட்டு மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோத்தகிரியில் தேயிலை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில மாதங்களாக பசுந்தேயிலைக்கு கொள்முதல் விலை உயர்ந்து கிலோவிற்கு ரூ.28 முதல் ரூ.30 வரை விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. தற்போது நிலவிவரும் சீதோஷண நிலை காரணமாக விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உரமிட்டு உள்ளதால் பசுந்தேயிலை மகசூலும் கணிசமாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தேயிலை வாரியத்தின் வரைமுறைப்படி பசுந்தேயிலை கொள்முதல் செய்ய இயலாது என ஒரு சில தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்வதை கடந்த 10 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சிறு தேயிலை விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே தேயிலை தொழிற்சாலைகள் பசுந்தேயிலை கொள்முதல் நிறுத்தி வைத்திருப்பதை கைவிட்டு மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோத்தகிரி அருகே கன்னேரிமுக்குவில் நாக்குபெட்டா விவசாயிகள் சங்கத்தின சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் பெள்ளி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கக்கி சண்முகம் அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகள், விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் நிறுத்தியுள்ள நிலையில், இது சம்மந்தமாக தேயிலை வாரியம் உடனடியாக தலையிட்டு, தொடர்ந்து தேயிலை கொள்முதல் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி மாதன் நன்றி கூறினார்.

    பந்தலூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பந்தலூர்:

    சேலம் மாவட்டம் ஒமலூரை சேர்ந்தவர் பூவரசன் (வயது 20). இவர் தர்மபுரியில் வேலை பார்த்த போது, அந்த பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமி நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்த நிலையில் பந்தலூருக்கு வந்த வாலிபர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, அவரை அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டார். பள்ளி மாணவி மாயமானதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒமலூரை சேர்ந்த பூவரசன் (வயது 20) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை ஒமலூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் பூவரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இதேபோல பந்தலூர் பகுதியை சேர்ந்த ஒருவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக பந்தலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவரை போக்சோ சட்டத்தில்கைது செய்தனர்.
    நீலகிரி மாவட்டத்துக்கு வர கர்நாடக சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    கொரோனா பரவலை தடுக்க மலைபிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு பிற மாவட்டங்களில் இருந்து வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படுகிறது

    ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா உள்ளது. இந்த பூங்கா திறக்கப்பட்டது குறித்து தகவல் தெரியாததால், மற்ற பூங்காக்களுக்கு வந்தவர்கள் அங்கு செல்லாமல் இருந்தனர். கர்நாடகா சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மற்றவர்களும் செல்ல தொடங்கி உள்ளனர். பூங்காவில் 2-வது சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை கவர மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிகோனியா மலர்கள் அடங்கிய 20,000 பூந்தொட்டிகளுடன் மலைச்சரிவில் வரிசையாக மலர் அலங்காரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5 வண்ணங்களில் சால்வியா மலர்களை கொண்டு 10,000 பூந்தொட்டிகள் மூலம் தொட்டியில் இருந்து மலர்கள் விழுவது போல மலர் அருவி அமைக்கப்பட்டு இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    சைக்கிளமன், ரெனன்குளஸ், ஆர்கிட், ஜெரேனியம், ஸ்டார் மற்றும் ரெக்ஸ் போன்ற ரகங்களை சேர்ந்த பிகோனியா, லெம்ப்ராந்தஸ் உள்பட 200 ரகங்களை சேர்ந்த 50 ஆயிரம் பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 2-வது சீசனையொட்டி நடைபாதை ஓரத்தில் அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் பூங்கா திறக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.

    கர்நாடகா தோட்டக்கலை பூங்காவுக்கு வருகை தரும் கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பூங்காவுக்குள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, குன்னூர் அருகே உள்ள ஆற்றில் நேற்று நடைபெற்றது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும். இதனால் நிலச்சரிவு, சாலைகளில் பாறைகள் விழுதல் போன்ற சம்பவங்கள் நடக்கும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, குன்னூர் அருகே உள்ள ஆற்றில் நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமை தாங்கினார். குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ குழுவினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்பது போன்று ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் வெள்ளத்தில் சிக்கிய நபரை கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். வெள்ளத்தில் மூழ்கினால் உடலில் இருந்து நீரை வெளியேற்றுவது, சுவாசத்தை சரி செய்வது, முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வனத்துறையினர், போலீசாரும் கலந்து கொண்டனர்.
    வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த கிரீன்பீல்டு பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.
    ஊட்டி:

    ஊட்டியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. அப்போது கிரீன்பில்டு, காந்தல், வி.சி. காலனி, கோடப்பமந்து உள்ளிட்ட இடங்களில் 55 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள் சேறும், சகதியுமாக மாறியது. மேலும் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட கிரீன்பில்டு பகுதியில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார். மேலும் கோடப்பமந்து கால்வாயை பார்வையிட்டார். அப்போது அங்கு மழைநீர் கால்வாய்களின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறிய பாலங்களை உயர்த்தி அமைக்க வேண்டும். கோடப்பமந்து கால்வாயில் தாழ்வாக செல்லும் குடிநீர் குழாய்களை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் ஒரே நாளில் 6 சென்டி மீட்டர் மழை பதிவானதால் தாழ்வான கிரீன்பில்டு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோடப்பமந்து கால்வாயை மீண்டும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். நீலகிரியில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகமாக பெய்தது.

    இதனால் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் வந்து தங்கலாம். நீலகிரியில் 486 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சப்-கலெக்டர் மோனிகா, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். இதற்கிடையில் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா-சின்கோனா சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, மரத்தை வெட்டி அகற்றினர்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-62.5, கல்லட்டி-14, குந்தா-46, எமரால்டு-13, பாலகொலா-30, குன்னூர்-16.5, கோடநாடு-25.5 உள்பட மொத்தம் 296.5 பதிவாகி உள்ளது. இதன் சராசரி 10.23 ஆகும்.
    ஓட்டல்களில் தீ விபத்தை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்தார்.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்தை தவிர்ப்பது தொடர்பாக வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம், கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஊட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது:-

    கடைகள் காற்றோட்டமாக இருப்பது அவசியம். சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகியவை கடைகளின் முன்பகுதி ஓரத்தில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும். சிலிண்டரில் பொருத்தப்படும் டியூப் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு பேரலில் தண்ணீர் நிரப்பி அதில் சிலிண்டரை வைக்க வேண்டும். அடுப்பின் அருகே ஒரு சாக்குப்பையை நனைந்த நிலையில் எப்பொழுதும் வைத்து இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலையில் சிறிய அளவிலான தீயணைப்பு கருவியை வைத்திருக்க வேண்டும். டீக்கடைகளை மார்க்கெட்டின் வெளிப்பகுதியிலேயே வைத்து நடத்தினால் விபத்துகளை தவிர்க்கலாம். மார்க்கெட்டின் உள்பகுதியில் டீக்கடைகள் நடத்தினால் பாதுகாப்பாக நடத்த வேண்டும்.

    இல்லையென்றால் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் உள்ளே சென்று உடனடியாக தீயை அணைப்பதற்கு சிரமமாகவும், சேதங்கள் அதிகமாக ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. டீக்கடைகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் 2 மட்டுமே வைத்து இருக்க வேண்டும். இதற்கு மேல் கூடுதலாக வைக்கக்கூடாது. டீக்கடை வைத்து நடத்தி வருகிறவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளில் கட்டிட விதிமுறைகளின்படி மின் அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வெப்பக்காற்று வெளித்தள்ளும் மின்விசிறி கண்டிப்பாக அமைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நகராட்சி வருவாய் அலுவலர் பால்ராஜ் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
    ×