search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நீலகிரியில் கடும் குளிர்- பொதுமக்கள் அவதி

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்பட அனைத்து இடங்களிலும் காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே செல்கின்றனர்.

    குன்னூரில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக இரவு மற்றும் பகல் நேரத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக குளிர் இருப்பதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

    காற்று அதிவேகத்துடன் வீசுவதால் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த காற்றுக்கு குன்னூர் நகர பகுதிகளில் உள்ள 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பறந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக யாரும் நடந்து செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    கோத்தகிரி மற்றும் கொடநாடு, ஓட்டுப்பட்டரை, சோலூர்மட்டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்தது. அதிகாலையில் கடும் பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்குகின்றனர்.

    குறிப்பாக வயதானவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சுவயட்டர், தலைக்கு குல்லா உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு கடும் பனி மூட்டத்துக்கு மத்தியிலும் வேலை பார்த்து வருகின்றனர். இதுதவிர சில ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள் தங்கள் வாகனங்களின் அருகே குளிரில் இருந்து காத்து கொள்ள தீமூட்டி காய்ந்து வருகின்றனர்.

    தொடர்ந்து 2 நாட்களுக்கும் மேலாக கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×