search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் பாதிக்கப்பட்ட கிரீன்பீல்டு பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்திய காட்சி.
    X
    மழையால் பாதிக்கப்பட்ட கிரீன்பீல்டு பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்திய காட்சி.

    வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த கிரீன்பீல்டு பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு

    வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த கிரீன்பீல்டு பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.
    ஊட்டி:

    ஊட்டியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. அப்போது கிரீன்பில்டு, காந்தல், வி.சி. காலனி, கோடப்பமந்து உள்ளிட்ட இடங்களில் 55 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள் சேறும், சகதியுமாக மாறியது. மேலும் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட கிரீன்பில்டு பகுதியில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார். மேலும் கோடப்பமந்து கால்வாயை பார்வையிட்டார். அப்போது அங்கு மழைநீர் கால்வாய்களின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறிய பாலங்களை உயர்த்தி அமைக்க வேண்டும். கோடப்பமந்து கால்வாயில் தாழ்வாக செல்லும் குடிநீர் குழாய்களை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் ஒரே நாளில் 6 சென்டி மீட்டர் மழை பதிவானதால் தாழ்வான கிரீன்பில்டு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோடப்பமந்து கால்வாயை மீண்டும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். நீலகிரியில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகமாக பெய்தது.

    இதனால் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் வந்து தங்கலாம். நீலகிரியில் 486 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சப்-கலெக்டர் மோனிகா, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். இதற்கிடையில் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா-சின்கோனா சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, மரத்தை வெட்டி அகற்றினர்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-62.5, கல்லட்டி-14, குந்தா-46, எமரால்டு-13, பாலகொலா-30, குன்னூர்-16.5, கோடநாடு-25.5 உள்பட மொத்தம் 296.5 பதிவாகி உள்ளது. இதன் சராசரி 10.23 ஆகும்.
    Next Story
    ×