என் மலர்
நீலகிரி
நேர கட்டுப்பாடு காரணமாக சிறு, குறு விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை உரிய நேரத்துக்கு விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் சரக்கு வாகனங்கள் சொந்தமாக வைத்து இருப்பவர்கள் நீலகிரி மட்டுமில்லாமல் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். சிறு விவசாயிகள் வாடகைக்கு சரக்கு வாகனங்களை எடுத்து காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல அதிக செலவாகிறது. மேலும் வாகனங்களில் மூட்டைகளை இறக்கி வைக்க தொழிலாளர்களை ஏற்றி செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.5 மட்டுமே விலை போகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சிறு, குறு விவசாயிகள் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது போலீசார் தடையில்லாமல் சென்று வர அனுமதிக்க வேண்டும். முழு ஊரடங்கால் அறுவடை செய்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். நேரடியாக நிலத்துக்கு வந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றனர்.
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயரண்யம் முகாம்களில் 29 வளர்ப்பு யானைகள் உள்ளது. வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் மீட்டு முகாம்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து முகாம்களில் அடைத்து கும்கியாக வனத்துறையினர் மாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு பயிற்சிகள் அளித்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
வளர்ப்பு யானைகளுக்கு வில்சன், சங்கர், இந்திரா, முதுமலை, உதயன், மசினி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெப்பக்காடு முகாமில் விஜய், சுஜய் என்ற வளர்ப்பு யானைகள் உள்ளன. 1971-ம் ஆண்டு முதுமலையில் பிறந்த இந்த இரட்டை சகோதரர்களுக்கு நேற்று 50-வது வயதானது.
இதைத்தொடர்ந்து விஜய், சுஜய்யின் பிறந்த நாள் முதுமலை முகாமில் கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு கரும்பு மற்றும் பழங்களை வனத்துறையினர் வழங்கினர். இதுகுறித்து தெப்பக்காடு வனச்சரகர் தயானந்தன் கூறியதாவது:-
1971-ம் ஆண்டு முகாமில் இருந்த தேவகி என்ற யானை இரட்டை ஆண் குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளுக்கு விஜய், சுஜய் எனப் பெயரிட்டு கும்கிகளாக மாற்றப்பட்டது. இரண்டு யானைகளும் காட்டு யானைகளை விரட்டுவதில் சிறப்பு வாய்ந்தவை.
2017-ம் ஆண்டுசுஜய் சாடிவயல் முகாமில் பிற யானைகளிடம் சண்டை போட்டபோது ஒரு தந்தம் உடைந்துவிட்டது. தற்போது 2 யானைகளும் பிறந்து 50-வது வயது பூர்த்தி அடைந்துள்ளது. பிறந்தநாளையொட்டி கரும்பு, பழங்கள் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோத்தகிரி அருகே உள்ள கொட்டகம்பை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவரும், கொட்டநள்ளி கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பிரியதர்ஷினி, மணிகண்டனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதியினர் கொட்டகம்பையில் வசித்து வந்தனர்.
நேற்று காலை பிரியதர்ஷினி நீண்ட நேரம் தூங்கிகொண்டிருந்ததை மணிகண்டன் கண்டித்ததாகவும், காலையில் எழுந்து வேலை செய்யவேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் மணிகண்டனின் பெற்றோர் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டனர். காய்கறி வாங்குவதற்காக மணிகண்டனும் வெளியே சென்றுவிட்டார். கணவர் திட்டியதால் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டன், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து இளம்பெண்ணின் தந்தை மனோகரன் கொடுத்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரியதர்ஷினிக்கு திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால், விசாரணை நடத்த குன்னூர் சப்-கலெக்டர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண், திருமணமான 7 மாதத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை யும்,பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 300 பேருக்கு மேல் தொற்று உறுதியாகிறது. தொற்று அறிகுறி தென்பட்டவுடன் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தாமதமாக வந்தால் பாதிப்பு அதிகரித்து தீவிர நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. நீலகிரியில் கொரோனா அறிகுறி தென்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ஆக இருந்தது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
600-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றி வசிக்கும் மக்கள் இடையே சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி வருகின்றனர். 2-வது அலையில் தென்படும் 12 அறிகுறிகள் யாருக்கேனும் உள்ளதா என்று சோதனை செய்யப்படுகிறது. அறிகுறி தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ஊட்டியில் புதுமந்து, விஜயநகரம், தலையாட்டுமந்து, அப்பர் பஜார், கஸ்தூரிபாய் காலனி, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் முகாமிட்டு காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஒரே இடத்தில் அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தால் அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரவலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்பகுதிகளில் வீடு, வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அறிகுறி தென்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கும், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். கலெக்டர் உத்தரவின்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரித்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சிறுமியை திருமணம் செய்த அந்த வாலிபர் மீதும், திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் நிலங்களில் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதுதவிர பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த சில வருடங்களாக அணையில் ஜூன் மாதத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 4 வருடமாக இதேநிலை நீடித்த வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன்மாதம் 23-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது கோடை மழை கைகொடுத்துள்ளதாலும், தென்மேற்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும், முல்லைபெரியாறு அணை நீரினை பயன்படுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தற்போது அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டியுள்ளதால் முதல்போக பாசனத்திற்கு ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கவேண்டும் என அரசுக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் முதல்போக நெல்சாகுபடி பணிகளை தொடங்க தயாராகி வருகின்றனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 129.70 அடியாக உள்ளது. வரத்து 405 கனஅடி, திறப்பு 900 கனஅடி, இருப்பு 4633 மி.கனஅடி.
வைகை அணை நீர்மட்டம் 64.83 அடி, வரத்து 968 கனஅடி, திறப்பு 72 கனஅடி, இருப்பு 4593 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.30 அடி, வரத்து 151 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 126.60 அடி, வரத்து 155 கனஅடி, அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் 3 கனஅடி நீர் ஷட்டர் வழியாகவும், 152 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடி.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் யாருக்காவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அறிகுறி உள்ளதாக கூறி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய குவித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோனை செய்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மேலும் பலர் உயிரிழந்தனர். நகராட்சி பகுதியில் சளிவயல், மங்குழி, எம்.ஜி.ஆர். நகர், காசிம் வயல், அள்ளூர் வயல் உள்பட பல இடங்களில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து நகராட்சி சுகாதார துறையினர் தினமும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் வசிக்கும் 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி ஆர்.டி.ஓ. ராஜகுமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், ஜென்மம் நில தாசில்தார் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை 11 மணிக்கு தனியார் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் கேரட், பீட்ரூட், காலி பிளவர், முட்டை கோஸ், நூர்கோல், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகளையும், சுகுனி, சல்லாரை, புரூக்கோலி, உள்ளிட்ட ஏற்றுமதி தரம் வாய்ந்த ஆங்கில வகை காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது புரூக் கோலியின் கொள்முதல் விலை நிலையானதாக இருப்பதாலும், பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வருவதாலும் புரூக் கோலி சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் பலர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேரக்காய் பயிரிட அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு இடையே ஊடு பயிராகவும் புரூக்கோலியை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
இதுகுறித்து கேர்பன் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில் கூறியதாவது:-
கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, மசக்கல், கூக்கல் தொரை, கட்டபெட்டு, உயிலட்டி உள்ளிட்ட பகுதிகளில் புரூக் கோலி அதிகளவில் பயிரிடப்படுகிறது. நாற்று ஒன்றுக்கு 2 ரூபாய் ஆகிறது. நிலத்தை நன்கு பண்படுத்தி, புரூக் கோலி பயிரிட்டு பராமரித்து வந்தால் 65 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
தற்போது புரூக் கோலி கிலோ ஒன்றுக்கு ரூ.120 முதல் ரூ.130 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் மாதங்களில் இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால் புரூக்கோலியை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, குறு மிளகு, இஞ்சி, ஏலக்காய் மற்றும் பல வகை காய்கறிகளும் வருகிறது. இது தவிர ஆண்டு முழுவதும் நேந்திர வாழைகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, மும்பை உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் வாழை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்து வருகிறது. இதுதவிர சிப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கவும் வாழை தார்கள் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தேவையும் அடியோடு குறைந்து உள்ளது.
கூடலூர் பகுதியில் விளையும் வாழைத்தார்களின் கொள்முதல் விலையும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. மேலும் கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு தொடர்வதால் வாழைத்தார்கள் போதிய விற்பனை ஆவதில்லை என கூறப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு நிலை தொடர்வதால் விளைந்த வாழைத்தார்கள் மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய்கள் ரூ.42 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கேரளா உள்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாழைத்தார் தேவையும் குறைந்துவிட்டது. இதனால் மொத்த வியாபாரிகள் வாழைத்தார்களை குறைவாக விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். தற்போது கிலோ ரூ.23 மட்டுமே விலை கிடைக்கிறது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.
இவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடப்பது வழக்கம். குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக டிசம்பர் மாதம் முதலே பூங்காவை தயார் செய்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் கோடை விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கோடை விழா நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இதற்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த டிசம்பர் மாதமே பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்து ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.
இதேபோல் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் 2-வது அலையால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி கிடக்கின்றன. பூங்காக்களில் உள்ள மலர்களை ஊழியர்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 ஆயிரம் பல வண்ண மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதில் கோவிட் 19 வேக்சினேட் யுவர்செல்பேன் என ஆங்கிலத்தில் மலர் தொட்டிகளை அடுக்கி வைத்து மலர் அலங்காரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த மலர் அலங்காரத்தை உள்ளூர் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிக்க வாய்ப்பில்லை என்ற போதிலும் பூங்கா நிர்வாகம் வழக்கம் போல கோடை காலத்தின் போது மேற்கொள்ளப்படும் மலர் அலங்காரத்தை இம்முறை வித்தியாசமான முறையில் மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது கொரோனா வைரஸ் வடிவிலான மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சூறாவளி காற்றுடன் தொடர் கனமழை பெய்தது. இதனால் கோடை வறட்சியால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றில் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புத்தூர்வயல், கம்மாத்தி, மண்வயல், முதுமலை, பாடந்தொரை, தேவர்சோலை, புளியம்பாரா உள்பட பல இடங்களில் காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் வாழைகள் சேதமானது. மேலும் கூடலூர் பகுதியில் பாகற்காய், மேரக்காய், தட்டை பயிறு உள்ளிட்ட விவசாய பயிர்களும் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் மே மாதம் கோடை மழை செய்வது வழக்கம். கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் கோடை மழை சரிவர பெய்யவில்லை. இருப்பினும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பாகற்காய், பஜ்ஜி மிளகாய், மேரக்காய், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
ஆனால் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்ததால் கோடை கால பயிர்கள் சேதம் அடைந்துவிட்டது. பாகற்காய் பயிர் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. மேலும் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதி கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்ததால் தாழ்வான இடங்களில் வசித்த ஆதிவாசி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயில் அடித்தது. மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று இல்லாததால் பாதிப்பு இல்லை. குறிப்பாக பந்தலூரில் அதிக மழை பொழிவு பதிவாகி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக முகாம்களுக்கு வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.






