என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் ஒருவரிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரித்த போது எடுத்த படம்.
    X
    பெண் ஒருவரிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரித்த போது எடுத்த படம்.

    ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை

    நீலகிரியில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 300 பேருக்கு மேல் தொற்று உறுதியாகிறது. தொற்று அறிகுறி தென்பட்டவுடன் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தாமதமாக வந்தால் பாதிப்பு அதிகரித்து தீவிர நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. நீலகிரியில் கொரோனா அறிகுறி தென்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ஆக இருந்தது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    600-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றி வசிக்கும் மக்கள் இடையே சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி வருகின்றனர். 2-வது அலையில் தென்படும் 12 அறிகுறிகள் யாருக்கேனும் உள்ளதா என்று சோதனை செய்யப்படுகிறது. அறிகுறி தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ஊட்டியில் புதுமந்து, விஜயநகரம், தலையாட்டுமந்து, அப்பர் பஜார், கஸ்தூரிபாய் காலனி, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் முகாமிட்டு காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஒரே இடத்தில் அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தால் அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரவலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்பகுதிகளில் வீடு, வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அறிகுறி தென்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றனர்.
    Next Story
    ×