search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே மண்வயல் பகுதியில் முறிந்து கிடக்கும் வாழைகளை காணலாம்.
    X
    கூடலூர் அருகே மண்வயல் பகுதியில் முறிந்து கிடக்கும் வாழைகளை காணலாம்.

    கூடலூர் பகுதியில் தொடர் மழை- காற்றில் வாழைகள் முறிந்து விழுந்து சேதம்

    கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சூறாவளி காற்றுடன் தொடர் கனமழை பெய்தது. இதனால் கோடை வறட்சியால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றில் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புத்தூர்வயல், கம்மாத்தி, மண்வயல், முதுமலை, பாடந்தொரை, தேவர்சோலை, புளியம்பாரா உள்பட பல இடங்களில் காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் வாழைகள் சேதமானது. மேலும் கூடலூர் பகுதியில் பாகற்காய், மேரக்காய், தட்டை பயிறு உள்ளிட்ட விவசாய பயிர்களும் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் மே மாதம் கோடை மழை செய்வது வழக்கம். கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் கோடை மழை சரிவர பெய்யவில்லை. இருப்பினும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பாகற்காய், பஜ்ஜி மிளகாய், மேரக்காய், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.

    ஆனால் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்ததால் கோடை கால பயிர்கள் சேதம் அடைந்துவிட்டது. பாகற்காய் பயிர் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. மேலும் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதி கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்ததால் தாழ்வான இடங்களில் வசித்த ஆதிவாசி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயில் அடித்தது. மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று இல்லாததால் பாதிப்பு இல்லை. குறிப்பாக பந்தலூரில் அதிக மழை பொழிவு பதிவாகி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக முகாம்களுக்கு வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    ஊட்டி-18.1, நடுவட்டம்-28, கிளன்மார்கன்-27, அவலாஞ்சி-34, அப்பர்பவானி-25, கூடலூர்-24, தேவாலா-42, செருமுள்ளி-21, பாடந்தொரை-22, பந்தலூர்-135, சேரங்கோடு-33 உள்பட மொத்தம் 484.1 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 16.69 ஆகும். தொடர் மழை பெய்து வருவதால் அபாயகரமான பகுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×