என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். மேலும் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர். அந்த பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூளானது குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    அங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலைத்தூள் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 20, 21-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு(விற்பனை எண்-20) 24 லட்சத்து 3 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது.

    இதில் 17 லட்சத்து 46 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 6 லட்சத்து 57 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 13 லட்சத்து 92 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது 57 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.17 கோடியே 92 லட்சம். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.3 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.238 மற்றும் ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.260 என ஏலம் போனது.

    சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.103 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.155 முதல் ரூ.183 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.109 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.195 வரையும் இருந்தது. தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அடுத்த ஏலம்(விற்பனை எண்-21) வருகிற 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு 23 லட்சத்து 90 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
    அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து உள்ளாட்சி அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரியில் இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நேற்று காலை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், மஞ்சூர் பகுதிகளில் மார்க்கெட், உழவர் சந்தை, வணிக நிறுவனங்கள், என அனைத்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

    காலை, 11 மணிக்கெல்லாம் அத்தியாவசிய பொருட்கள் விற்று தீர்ந்தது. கடைகளில் கூடியிருந்த மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை மறந்து கூட்டம், கூட்டமாக நின்றிருந்தனர். ஒருசிலர் முக கவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றி திரிந்தனர்.

    நேற்று முகூர்த்த நாள் என்பதால் அதிகமான திருமணங்கள் நடந்தன. அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிக்கவில்லை. அதில் ஏராளமானோர் சமூக இடைவெளி இன்றி கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து உள்ளாட்சி அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.

    இதில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத கடைகளுக்கு, ரூ. 4 லட்சமும், திருமண நிகழ்ச்சியில் விதி மீறலுக்கு ரூ.3 லட்சம் என மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினந்தோறும் 300-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினந்தோறும் 300-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலுமே படுக்கைகள் நிரம்பி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 ஆயிரத்து 429 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 310 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2 ஆயிரத்து 778 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குன்னூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 18 தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து இந்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள 18 தெருக்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவிற்கு செல்லவும், அங்கிருந்து வெளியில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி தொடர்ந்து 5 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குன்னூர் அருகே தூதூர் மட்டம் என்ற பகுதியில் 5 நாட்கள் முழு ஊரடங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக குன்னூர் பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை நிரம்பியது.

    குன்னூர்:

    மத்திய கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நீலகிரி உள்பட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று காலை முதலே வானம் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டமாக இருந்தது. காலை நேரமே இரவு நேரம் போல காட்சியளித்தது.

    மாலை 5.30 மணியளவில் குன்னூர், அருவங்காடு, பர்லியார், கொலக்கெம்பை, ஒட்டுப்பட்டறை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குன்னூர் பேருந்து நிலையம் சாலை, ஊட்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன. சில தாழ்வான பகுதிகள் மற்றும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

    நாளை முதல் தளர்வற்ற ஊரடங்கு அறிவித்ததால் நேற்று மதியத்திற்கு பிறகே கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தது. இதனால் குன்னூர் நகராட்சி மார்க்கெட் உள்பட பல கடைகள் திறந்திருந்தன. மக்கள் அனைவரும் கொட்டும் மழையிலும் நனைந்தபடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக குன்னூர் பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை நிரம்பியது. ரேலியா அணையின் மொத்த அடி 42.3. தற்போது அணையில் 41 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் மாலை முதல் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், ராமநாதபுரம், பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலைய பகுதி, காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்தது. இந்த மழையால் கோவை மாவட்டத்தில் நிலவிய வெப்பம் குறைந்து இதமான காலநிலை நிலவியது.

    குன்னூர் தூதூர்மட்டம் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 300-க்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குன்னூர் அடுத்த கொலக்கெம்பை அருகே உள்ளது தூதூர்மட்டம் கிராமம். இந்த பகுதியில் வட மாநிலத் தவர்கள், உள்ளூர்காரர்கள் என ஏராளமனோர் வசித்து வருகிறார்கள். 

    இந்த பகுதி தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் அனைவரும் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து அந்த பகுதியை சேர்ந்த மற்றவர்களுக்கும் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். 

    மேலும் அந்த கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொண்டு தடுப்புகள் வைத்து அடைத்து அங்கு 5 நாட்கள் முழு ஊரடங் கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியில் வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள எஸ்டேட்டில் தேயிலை தொழிலை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி அருகே மாவனல்லா வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு காலநிலைகளுக்கு ஏற்ப வனத்துறையினர் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய உள்ளது. இதையொட்டி பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியை முதுமலையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் தொடங்கினர். சுமார் 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனத்துக்குள் சென்று நேரடியாக காணுதல், கால் தடயங்கள் மற்றும் எச்சங்களை கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

    இந்த பணி நேற்று 2-வது நாளாக புலிகள் காப்பக வனத்தில் மும்முரமாக நடைபெற்றது. அப்போது புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி அருகே மாவனல்லா வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் கரடி ஒன்று இரை தேடியவாறு உலாவி கொண்டிருந்தது. இதைக்கண்ட வன ஊழியர்கள் சற்று தொலைவில் நின்று பார்வையிட்டனர். பின்னர் கரடியின் அருகே சென்றவாறு மயிர் கூச்செரியும் வகையில் தங்களது செல்போனில் படம் பிடித்து பதிவு செய்தனர்.

    இதுகுறித்து வன ஊழியர்கள் கூறியதாவது:-

    வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியின் போது காட்டு யானைகள், மான்கள் அதிகளவு காண முடிகிறது. வன விலங்குகளில் மிகவும் ஆபத்தானது கரடி. மசினகுடி பகுதியில் கரடிகள் அதிகளவு உள்ளது. கணக்கெடுப்பு பணியின் போது கரடி தென்பட்டது. இருப்பினும் மிகவும் சாதுர்யமாக அதன் அருகே சென்று கணக்கெடுப்புக்காக பதிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர முடியாததால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.20-க்கு குறையாமல் கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்து உள்ளனர்.

    இதற்கிடையில் பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு உள்ளூரில் போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால், வெளியூரில் இருந்து வாகனங்களில் தொழிலாளர்களை விவசாயிகள் அழைத்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதையொட்டி பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் தனியார் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் நிலவிய மாறுபட்ட காலநிலையால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்கியது. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதித்தது. தற்போது தொடர் மழை பெய்து, பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஆனால் ஊரடங்கு காரணமாக வெளியூர்களில் இருந்து பச்சை தேயிலை பறிக்க வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. இதனால் பச்சை தேயிலையை பறித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் இலைகள் முற்றி வீணாகும் நிலை ஏற்படும். இதனால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்கள்.
    நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் உருவாகியுள்ள தாழ்வழுத்த நிலை காரணத்தால் நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என 283 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை.

    தீயணைப்புத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது மாவட்ட அவசரகால மையத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 -க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதுபோன்று வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261295, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

    இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகம் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையவேண்டாம் என்றும் மாவட்டம் நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான 293 ரகங்களை சேர்ந்த 5 லட்சம் செடிகள் நடவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இதை ஆன்லைனில் பார்வையிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது ஆண்டாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அங்கு செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை நேற்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மலர் அலங்காரங்களை பார்வையிட்ட பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான 293 ரகங்களை சேர்ந்த 5 லட்சம் செடிகள் நடவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இதை ஆன்லைனில் பார்வையிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழகத்தில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

    இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் கணேஷ், பொன்.ஜெயசீலன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    கூகுள் டிரைவில் தாவரவியல் பூங்கா-2021 என உள்ளீடு செய்து ட்ரோன் கேமரா மூலம் பூங்காவின் இயற்கை எழில் மிகுந்த காட்சி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மலர் அலங்காரம், கண்ணாடி மாளிகை போன்றவற்றை 5 நிமிட வீடியோவாக பார்க்கலாம். முன்னதாக ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் முன்கள பணியாளர்களுக்கு முககவசங்களை வழங்கினார்.
    தேயிலை தோட்டப்பணிகள் நிறுத்தப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையையும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே கிரேக் மோர், உட்லண்ட்ஸ், மானார் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களும், 4 தொழிற்சாலைகளும் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை தேயிலை தோட்டங்களில் இலை பறித்தல் போன்ற பணிகளையும், தொழிற்சாலைகள் இயங்குவதையும் நிறுத்தி வைக்க சுகாதார துறையினர் அறிவுரை வழங்கினர். அதன்படி தேயிலை தோட்டப்பணிகள் நிறுத்தப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையையும் சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நெலாக்கோட்டை, கார்குடி, முதுமலை, தெப்பக்காடு, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் 37 வன குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள், செந்நாய்கள் என வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு பருவ மழைக்கு முன்பு மற்றும் பிந்தைய காலகட்டத்தில் வனத்துறையினர் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போது கோடை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் இன்னும் சில திங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

    புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நெலாக்கோட்டை, கார்குடி, முதுமலை, தெப்பக்காடு, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் 37 வன குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு குழுவில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். தெப்பக்காட்டில் வனச்சரகர் தயானந்தன் தலைமையில், மசினகுடியில் வனச்சரகர் மாரியப்பன் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கணக்கெடுப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கோடை மற்றும் மழை காலத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை துறை ரீதியாக பதிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி முதுமலையில் நடைபெற்று வருகிறது. இன்று (நேற்று) தொடங்கிய கணக்கெடுப்பு பணி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், நேரில் காணுதல் உள்ளிட்ட முறைகளில் வன விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை சுழற்சி முறையில் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. முழு ஊரடங்கு உத்தரவால் காய்கறி, பலசரக்கு, மளிகை, இறைச்சி கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதர கடைகள் திறக்க அனுமதி இல்லை. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட கடைகள் வரிசையாக உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறி கடைகள் மீண்டும் மார்க்கெட்டில் திறக்கப்பட்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி. ஆகிய 2 இடங்களுக்கு காய்கறி கடைகள் இடமாற்றம் செய்ப்பட்டது. இருப்பினும் மார்க்கெட்டில் மளிகை, இறைச்சி கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். காலை 10 மணி வரை மட்டும் கடைகள் செயல்படுவதால், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் கொரோனா பரவும் இடமாக மாறி விடுமோ என்ற அச்சம் உள்ளது. இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை சுழற்சி முறையில் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    அதன்படி மார்க்கெட்டில் நேற்று முதல் கடைகள் சுழற்சி முறையில் திறக்கப்பட்டது. இதற்காக மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் முன்பு ஏ, பி என நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகள் ஒருநாள் விட்டு ஒருநாள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வரிசையாக கடைகள் திறக்கப்படாததால் பொதுமக்கள் கூட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் உள்ள 3 ரேஷன் கடைகள் மதியம் ஒரு மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.
    ×