என் மலர்
செய்திகள்

தொற்று பரவல் அதிகரிப்பு - குன்னூர் எம்.ஜி.ஆர். நகரில் 5 நாட்கள் முழுஊரடங்கு
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினந்தோறும் 300-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலுமே படுக்கைகள் நிரம்பி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 ஆயிரத்து 429 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 310 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2 ஆயிரத்து 778 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குன்னூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 18 தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது.
இதையடுத்து இந்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள 18 தெருக்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவிற்கு செல்லவும், அங்கிருந்து வெளியில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி தொடர்ந்து 5 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குன்னூர் அருகே தூதூர் மட்டம் என்ற பகுதியில் 5 நாட்கள் முழு ஊரடங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.






