என் மலர்
நீலகிரி
- மாணவிகள் அதிகம் பேர் வெற்றி
- செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது.
ஊட்டி :
தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. கடந்த வாரம் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளில் அளித்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. தேர்வு முடிவு வெளியான உடனே மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
ஊட்டியில் உள்ள பள்ளிகளில் அறிவிப்பு பலகைகளில் தேர்வு முடிகள் ஒட்டப்பட்டன. இதனை மாணவர்கள் பார்த்து மதிப்பெண்களை தெரிந்துகொண்டனர். 91 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 3,415 மாணவர்கள், 3,861 மாணவிகள் என மொத்தம் 7,276 பேர் எழுதினர். இதில் 2,951 மாணவர்கள், 3,674 மாணவிகள் என மொத்தம் 6,625 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.05 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 86.41 சதவீதமும், மாணவிகள் 95.16 சதவீதமும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது.
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் நீலகிரியில் 2 அரசு பள்ளிகள், ஒரு பழங்குடியினர் பள்ளி, 20 தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 26 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. கலைப்பிரிவு பாடங்களில் அதிகபட்சமாக 95 சதவீதம் பேரும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் குறைந்தபட்சமாக 73 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
- கலெக்டர் அம்ரித் வழங்கினார்
- பொதுமக்களிடமிருந்து 108 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
ஊட்டி :
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 108 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
மாணவர்களுக்கு பரிசு
இதைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 11 -ம் வகுப்பு மாணவி கி ஸ்ருதி கிருஷ்ணாவுக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பிடித்த அம்பலமூலா அரசு மேநிலைப் பள்ளியைச் சோ்ந்த 12 -ம் வகுப்பு மாணவன் பிரியதா்ஷனுக்கு ரூ.3,000,மூன்றாம் இடத்தைப் பிடித்த கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஜெ.பூமிகாவுக்கு ரூ.2,000 மற்றும் கக்குச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி, பந்தலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரித்தா ஆகியோருக்கு சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ.2,000-த்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினாா்.
மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவன் சி.சுதிருக்கு ரூ.5,000, இரண்டாம் இடத்தைப் பிடித்த ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிா் கல்லூரி மாணவி து.சவுந்தா்யாவுக்கு ரூ.3,000, குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவி ம.கீா்த்தனாவுக்கு ரூ.2,000-த்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
பேச்சுப்போட்டி
அதேபோல, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவன் அ.முகமது இலியாஸுக்கு ரூ.5,000, குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவி பா.சோபிகாவுக்கு ரூ.3,000, மூன்றாம் இடத்தைப் பிடித்த ஊட்டிஅரசு கலைக் கல்லூரி மாணவி ச.கல்பனா சாவ்லாவுக்கு ரூ.2,000த்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் மு.சம்சுதீன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
- கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.
- நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
ஊட்டி:
கேரளா-கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.
அப்போது மலைப்பிரதேசத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல டிரைவர்கள் பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்தது. ஊட்டியில் இருந்து வரும் போது நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
இதனால் மலைப்பாதையில் 2-வது கியரை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசார் சாலையோரம் நின்று வெளிமாநில டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். இதனால் விபத்துகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர்-கேரள சாலைகள், ஊட்டி செல்லும் சாலை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ஸ்ரீமதுரையில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒரு வேன் நம்பாலக்கோட்டை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக வேனை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி சென்று கொண்டிருந்த ஒரு கார் 2-ம் மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்பகுதியில் மின்கம்பம் இருந்ததால் அதில் கார் தடுத்து நின்றது. இதனால் கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடும் நடவடிக்கை இதேபோல் பல இடங்களில் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, மலைப்பாதையில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கக்கூடாது. மேலும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- மிளிதேன், எரிசிபெட்டா, நெடுகுளா போன்ற பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் மேரக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- மேரக்காய் பயிரிடுவதற்கு பந்தல்கள் அமைக்க கூடுதல் செலவாகிறது. மேரக்காய் நாற்றுகளை குறிப்பிட்ட இடைவெளியில் நட்டு பராமரித்து வருகிறோம்.
ஊட்டி:
கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
குறிப்பாக மிளிதேன், எரிசிபெட்டா, நெடுகுளா, இந்திரா நகர், ஓடேன் துறை போன்ற பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் மேரக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேரக்காய் சாகுபடி செய்வதற்காக, விளைநிலங்களில் பல லட்சம் செலவில் பந்தல்களை விவசாயிகள் அமைத்து உள்ளனர். தற்போது அதே பந்தல்களை பயன்படுத்தி மேரக்காய் தோட்டங்களில் பீன்ஸ் ஊடு பயிராக பயிரிட்டு வருகின்றனர்.
ஒரே இடத்தில் 2 காய்கறி பயிர்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் மேரக்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், பீன்ஸ் மூலம் விவசாயிகள் நஷ்டத்தை ஈடுசெய்து வருகின்றனர்.
பீன்ஸ் நடவு இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மேரக்காய் பயிரிடுவதற்கு பந்தல்கள் அமைக்க கூடுதல் செலவாகிறது. மேரக்காய் நாற்றுகளை குறிப்பிட்ட இடைவெளியில் நட்டு பராமரித்து வருகிறோம்.
இதனால் விளைநிலம் காலியாக இருப்பதால், ஊடு பயிர்களையும் பயிரிட்டு வருகிறோம். மேரக்காய் போன்று கொடியில் வளர்ந்து காய்க்கக்கூடிய காய்கறிகளில் பீன்ஸ் காய்கறியும் ஒன்று. பீன்ஸ் பயிரை சாகுபடி செய்ய, ஒவ்வொரு நாற்றுக்கும் உயரமான ஒரு குச்சி வீதம் நட்டு வைக்க வேண்டி உள்ளது.
குச்சிகளை பயன்படுத்தாமல் மேரக்காய்க்காக அமைக்கப்பட்ட பந்தல்களிலேயே பீன்ஸ் கொடிகளை படற விட்டு பயிர் செய்து வருகிறோம். இதனால் செலவு குறைவதுடன், மேரக்காய் மற்றும் பீன்ஸ் பயிர்களை ஒரே நேரத்தில், ஒரே விளைநிலத்தில் பயிரிட முடிகிறது. இதனால் ஏதாவது ஒரு காய்கறிக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு காய்கறியின் மூலம் நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்றனர்.
- ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்மசி பிராக்டிஸ் துறை சார்பில் நடைபெற்றது
- விழிப்புணர்வு பதாகையில் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்மசி பிராக்டிஸ் துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து அங்கு விழிப்புணர்வு பதாகைகளை பார்மசி பிராக்டிஸ் துறை தலைவரும், பேராசிரியருமான முனைவர் பொன்னுசங்கர், முனைவர்கள் கவுதமராஜன், செந்தில், பிரவின், பாபு, கீர்தனா, காளிராஜன், வடிவேலன், கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த விழிப்புணர்வு பதாகையில் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
- நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
- மாவட்டத்தில் மொத்தம் 681 வழக்குகள் முடிக்கப்பட்டன. ரூ.3 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 192க்கு தீா்வு காணப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஊட்டியில் மாவட்ட முதன்மை நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கிக் கடன் தொடா்பான வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன நஷ்ட ஈடு கோரும் வழக்குகள், குடும்ப பிரச்சினை, சம்பந்தமான வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தேசிய வங்கிகளின் வாராக் கடன் சம்பந்தமான அனைத்து வகை வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டன.
இதில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக் குழுவின் செயலாளரும் சாா்பு நீதிபதியுமான சி.ஸ்ரீதா், ஊட்டி உரிமையியல் நீதிபதி ஏ.மோகன கிருஷ்ணன் மற்றும் ஊட்டி குற்றவியல் நீதித்துறை நடுவா் என்.தமிழினியன் ஆகியோா் ஊட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு கண்டனா்.
அதேபோல, குன்னூா் நீதிமன்ற வளாகத்தில் சாா்பு நீதிபதி எஸ்.சந்திரசேகரன் தலைமையில் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.அப்துல் சலாம் மற்றும் கே.இசக்கி மகேஷ்குமாா் முன்னிலையில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை எடுத்துக்கொண்டு சமரச தீா்வு கண்டனா்.
கூடலூா் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் ஆா்.ஷஷின்குமாா் தலைமையில் கூடுதல் உரிமையியல் நடுவா் க.பிரகாஷ் முன்னிலையிலும், பந்தலூா் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவா் டி.சிவகுமாா் மற்றும் என்.சிவசுப்பிரமணியன் முன்னிலையில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீா்வு கண்டனா்.
கோத்தகிரி நீதிமன்ற வளாகத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் வனிதா முன்னிலையிலும், குன்னூா் மாவட்ட உரிமையியல் நடுவா் ராஜ்கணேஷ் முன்னிலையிலும் வழக்கு களுக்கு தீா்வு கண்டனா். இதில் வழக்காடிகள், வங்கி மேலாளா்கள், மாவட்ட நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 1,137 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 652 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. அதேபோல, வங்கி வாராக் கடன் வழக்குகளில் 29 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ.84 லட்சத்து 5 ஆயிரத்து 897. மாவட்டத்தில் மொத்தம் 681 வழக்குகள் முடிக்க ப்பட்டன. ரூ.3 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 192க்கு தீா்வு காணப்பட்டன.
- பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
- குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி:
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, நகர்நல அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் மணி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகளை தனியாக வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தரம் பிரித்து சரியாக வழங்குபவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நகரமன்ற உறுப்பினர் விசாலாட்சி தலைமையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி முன்னிலையில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்தனர்.
- கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் தேயிலை பயிரிட்டுள்ளனர்.
- உரிய விலை கிடைக்காததால் சில விவசாயிகள் பறித்த தேயிலைகளை சாலையோரம் மற்றும் தோட்டங்களிலும் கொட்டி வரும் நிலை காணப்படுகிறது.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சிறு, குறு தேயிலை விவசாயிகள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் தேயிலை பயிரிட்டுள்ளனர். அவர்கள் தங்கள் தோட்டங்களில் விளையும் பச்சை தேயிலைகளை பறித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக தேயிலை வாரியம் விலை நிர்ணயித்துள்ளது.
ஆனால் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையில் விவசாயிகளிடம் இருந்து தேயிலையை கொள்முதல் செய்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அந்தந்த தேயிலை தொழிற்சாலைகள் தங்களுக்குள்ளாகவே ஒரு விலையை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து தேயிலை பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய விலை கிடைக்காததால் சில விவசாயிகள் பறித்த தேயிலைகளை சாலையோரம் மற்றும் தோட்டங்களிலும் கொட்டி வரும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில், பச்சை தேயிலை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், தேயிலை வாரியத்தை கண்டித்தும் அரவேணு, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொட்டி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.
இதேபோல் தும்மனட்டி, கக்குச்சி பகுதிகளில் தேயிலைக்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் ஊர்வலமாக பேரணி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
- கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனச்சரகத்தில் சேரங்கோடு, காபிக்காடு, காவயல், கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.
உதவி வனப்பாதுகாவலர் ஷர்மிளி மேற்பார்வையில் வனக்குழுவினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்- கோழிக்கோடு சாலையில், அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனால் யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
- நெல்லியாளம் நகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி ஏற்றனர்
- பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நெல்லியாளம் நகராட்சி சிறப்பான தூய்மையான நகராட்சியாக மாற்றப்படும்
ஊட்டி:
நெல்லியாளம் நகரசபையில் "என் குப்பை என் பொறுப்பு" விழிப்புணர்வு கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவரும் இணைந்து நெல்லியாளம் நகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி ஏற்றனர்
நகரசபை தலைவர் சிவகாமி பேசுகையில் "என் குப்பை என் பொறுப்பு" திட்டம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நெல்லியாளம் நகராட்சி சிறப்பான தூய்மையான நகராட்சியாக மாற்றப்படும் என்றார்.
- ஊட்டி வட்டம், தூனேரி, சோலூா், ஊட்டி நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.
- பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் ஊட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி வட்டம், தூனேரி, சோலூா், ஊட்டி நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.
இது தொடா்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:-
ஜமா பந்தி நடைபெறவுள்ள 3 நாள்களில் பொதுமக்கள் தங்களது மனுக்களை தாங்கள் குடியிருந்து வரும் வருவாய் கிராமத்துக்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட வருவாய் தீா்வாய அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம்.தூனேரி குறு வட்டத்திற்குள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 28, 29-ந் தேதியும், ஊட்டி நகரத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 30-ந் தேதியும் வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் ஊட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மீக்கேரி பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது.
- தொடர்ந்து சூறாவளி காற்றுடன் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், கூடலுார் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் மழை அறவே பெய்யாமல் போனது.
இந்நிலையில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்ய துவங்கியது. இரவு முழுவதும் விடிய விடிய பெய்த மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசியது.
தொடர்ந்து நேற்று பகலில் விடாமல் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மீக்கேரி பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் சிலரின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதேபோல் மேல்குந்தா பகுதியில் இருந்து பயணிகளுடன் மஞ்சூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டைனி தொழிற்சாலை அருகே சென்றபோது அப்பகுதியில் மழையுடன் வீசிய சூறாவளி காற்றில் பஸ்சின் மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த தார்ஷீட் பிய்ந்து காற்றில் பறந்தது.
காற்றில் மேற்கூரை பறந்து சென்று அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் அருகே விழுந்தது. இதனை அங்குள்ள தேயிலை தொழிற்சாலையின் முன்பு தேயிலை மூட்டைகளுடன் அமர்ந்திருந்த தொழிலாளர்களும், பஸ்சில் பயணத்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்தி பஸ்சின் மேற்பகுதியில் மீதமிருந்த தார்ஷீட்டை அகற்றினார். மஞ்சூர் சுற்றுப்புறப்பகுதிகளில் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.






