search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மஞ்சூரில் சூறாவளி காற்றில் பறந்த அரசு பஸ் மேற்கூரை தார்ஷீட்
    X

    மஞ்சூரில் சூறாவளி காற்றில் பறந்த அரசு பஸ் மேற்கூரை தார்ஷீட்

    • சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மீக்கேரி பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது.
    • தொடர்ந்து சூறாவளி காற்றுடன் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், கூடலுார் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் மழை அறவே பெய்யாமல் போனது.

    இந்நிலையில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்ய துவங்கியது. இரவு முழுவதும் விடிய விடிய பெய்த மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசியது.

    தொடர்ந்து நேற்று பகலில் விடாமல் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மீக்கேரி பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் சிலரின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இதேபோல் மேல்குந்தா பகுதியில் இருந்து பயணிகளுடன் மஞ்சூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டைனி தொழிற்சாலை அருகே சென்றபோது அப்பகுதியில் மழையுடன் வீசிய சூறாவளி காற்றில் பஸ்சின் மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த தார்ஷீட் பிய்ந்து காற்றில் பறந்தது.

    காற்றில் மேற்கூரை பறந்து சென்று அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் அருகே விழுந்தது. இதனை அங்குள்ள தேயிலை தொழிற்சாலையின் முன்பு தேயிலை மூட்டைகளுடன் அமர்ந்திருந்த தொழிலாளர்களும், பஸ்சில் பயணத்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்தி பஸ்சின் மேற்பகுதியில் மீதமிருந்த தார்ஷீட்டை அகற்றினார். மஞ்சூர் சுற்றுப்புறப்பகுதிகளில் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×