என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க 15 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்ப உள்பட பல்வேறு தீர்மனங்கள் வாசிக்கப்பட்டது.
    • குடிநீர் வினியோக ஊழியர்களிடம் தெரிவித்தும் ரப்பர் துண்டுகள் கொண்டு இழுத்துக் கட்டி விட்டு செல்கின்றனர்.

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) காந்திராஜ், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க 15 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்ப உள்பட பல்வேறு தீர்மனங்கள் வாசிக்கப்பட்டது.

    தொடர்ந்து கவுன்சிலர் உஸ்மான் பேசுகையில், நகராட்சியில் 15 தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார். அதற்கு கமிஷனர் காந்திராஜ், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு நகராட்சிகளிலும் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க தூய்மை பணி மேற்கொள்ள 15 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கவுன்சிலர் வெண்ணிலா பேசும்போது, குடிநீர் குழாய்கள் பெரும்பாலான இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வினியோக ஊழியர்களிடம் தெரிவித்தும் ரப்பர் துண்டுகள் கொண்டு இழுத்துக் கட்டி விட்டு செல்கின்றனர். மேலும் இலவச பட்டா பெற்று குடியிருக்கும் மக்கள் வசிக்கும் இடங்களில் குடிநீர் முறையாக கிடைப்பது இல்லை.

    மேலும் வாய்க்கால் இல்லாததால் மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் தண்ணீர் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கவுன்சிலர் அனூப் பேசுகையில், நகருக்குள் தெரு நாய்கள், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி வருகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெற்று உரிய நேரத்தில் கட்ட முடியாமல் காலாவதியானதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய கமிஷனர் காந்திராஜ், மாவட்ட கமிட்டியிடம் அனுமதி பெற்று காலாவதியாகி இருந்தால் மீண்டும் அனுமதி வழங்கப்படும். இதேபோல் கால்நடை உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் 730 புதிய விளக்குகள் பொருத்த டெண்டர் விடப்பட உள்ளது.

    தொடர்ந்து துணைத் தலைவர் சிவராஜ் பேசுகையில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல் கூடலூர் நகர் பகுதியில் சிறுவர்களிடமும் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் ஆபிதா பேகம் கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதில் அளித்த ஆணையாளர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சுற்றுச் சூழல் பாதிப்பை தடுக்கவும், எதிா்காலத்தில் இயற்கைப் பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையிலும் கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
    • கடந்த 1999-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி 3 தளங்களுடன் தனியாா் வணிக வளாகம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச் சூழல் பாதிப்பை தடுக்கவும், எதிா்காலத்தில் இயற்கைப் பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையிலும் கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

    குறிப்பாக, 1993ஆம் ஆண்டு மாஸ்டா் பிளான் சட்டப்படி 7 மீட்டருக்கு மேல் கட்டடங்கள் கட்டவும், 30 டிகிரி சரிவான பகுதிகளில் கட்டடங்கள் கட்டவும் தடை விதிக்கப்பட்டது.

    இதன் பின்னா் நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்ட வேண்டுமெனில் நகராட்சி நிா்வாகத்திடம் இருந்து மட்டுமல்லாமல் வனத் துறை, புவியியல் துறை, வேளாண் பொறியியல் துறை உள்பட பல்வேறு துறைகளில் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

    ஊட்டியில் கேசினோ சந்திப்பில் கடந்த 1999-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி 3 தளங்களுடன் தனியாா் வணிக வளாகம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தினா் அந்தக் கட்டிடத்துக்கு 'சீல்' வைக்க நடவடிக்கை எடுத்தனா்.

    இதனை எதிர்த்து, தனியாா் வணிக வளாகத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டடத்தை இடிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் வணிக வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், வணிக வளாகம் காலி செய்யப்ப–டவில்லை. இதைத் தொடா்ந்து, அந்த வணிக வளாகத்துக்கு 'சீல்' வைக்க நகராட்சி ஆணையா் காந்திராஜனின் உத்தரவின்பேரில், நகரமைப்பு திட்ட அதிகாரி ஜெயவேல், நகரமைப்பு திட்ட ஆய்வாளா் மீனாட்சி தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனா்.

    இதற்கிடையே வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் தற்போது வழிபாட்டு தலம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் வழிபாட்டுத் தலத்துக்கு இடையூறு ஏற்படும் என தகவல் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோா் அங்கு திரண்டனா். இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் மேற்பாா்வையில் ஆய்வாளா்கள் பிலிப், செந்தில்குமாா் தலைமையில் போலீசாா் குவிக்கப்பட்டனா். பின்னா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

    இதில் வணிக வளாகத்தில் உள்ள தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு மட்டும் 'சீல்' வைக்கப்படும் எனவும், வழிபாட்டுத் தலத்துக்கு 'சீல்' வைக்கப்படாது என்றும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தினா் வணிக வளாகத்தில் உள்ள தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த கடைகளுக்கு 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினா்.

    • 10 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகளை சப்-கலெக்டர் வழங்கினார்.
    • கழிப்பிடம் கட்டித் தரப்படும் என சப்-கலெக்டர் தெரிவித்தார்.

     அரவேனு : கோத்தகிரி அருகே அரவேனு தும்பூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் இந்த ஆண்டு 75-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று தங்கள் பெற்றோருடன் கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய குழந்தைகள் பயின்று வரும் பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிப்பிடம் அமைந்துள்ளது. இந்த கழிப்பிடம் கிராமப்பகுதியின் அருகே உள்ளதால் அங்கு கிராம மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் வனவிலங்குகளான கரடி, காட்டு மாடு, பன்றி போன்ற வனவிலங்குகள் பகல் நேரங்களிலேயே உலா வருவதால் குழந்தைகள் பயன்படுத்தமுடியாத சூழல் ஏற்ப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி கழிப்பிட சுவற்றில் விரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில் மழைக்காலங்களில் பயத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் அட்டைப்பூச்சி அதிகமாக காணப்படுவதால் குழந்தைகள் காலில் கடித்து ரத்தம் வடிந்து வருகிறது.

    இதுசம்பந்தமாக ஒரு நல்ல தீர்வு கிடைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, நீலகிரி மாவட்ட கலெக்டர், மக்களை தேடி மக்களின் அரசு திட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர், ஜக்கனாரை ஊராட்சி மன்றம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளியில் தற்காலிகமாக மொபைல் கழிப்பிடம் வைக்கப்படும், விரைவில் அப்பகுதியை ஆய்வு செய்து நிரந்தர கழிப்பிடம் கட்டித் தரப்படும் என சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி தெரி வித்தார்.

    ஜமாபந்தியில் கீழ் கோத்தகிரி கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 22 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் 15 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 10 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகளை சப்-கலெக்டர் வழங்கினார். 

    • சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஊட்டி,

    கூடலூர் நாடுகாணி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பாலத்தின் அருகிலேயே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க பல முறை அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று கூட இருசக்கர வாகனத்தில் வந்த தாயும், மகனும் பள்ளத்தில் விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

    எனவே விரைவில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • ஊட்டி நகரசபை கூட்டம் நடைபெற்றது
    • வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி நகரசபை கூட்டம் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் ஆணையாளர் காந்திராஜன், , துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் உறுப்பினா்களின் விவாதங்கள் வருமாறு:

    ஜாா்ஜ் (திமுக): ஊட்டியில் கேளிக்கை பூங்காக்கள் முறையான அனுமதியுடன் இயங்குகிறா என ஆய்வு செய்ய வேண்டும்.

    முஸ்தபா (திமுக): சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள ஒரு தனியாா் ஓட்டலின் மேற்புறம் உள்ள கட்டிடம் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது. தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அபுதாகீா் (திமுக): மத்திய பஸ் நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை பெய்தால் குளம் போல் தண்ணீா் தேங்குகிறது. நகராட்சி பணியாளா்களின் குடியிருப்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன.

    ஆணையா்: பணியாளா்களின் குடியிருப்புகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தம்பி இஸ்மாயில்(திமுக): நகராட்சியில் காந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்கபை ழிவுகள் முறையாக அள்ளப்படுவதில்லை.

    கீதா (திமுக): நகராட்சியில் குப்பைகள் அகற்றுவது, கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்துவது போன்ற அடிப்படை பணிகளை நகராட்சிப் பணியாளா்கள் சரிவர மேற்கொள்வதில்லை.ஆணையா்: கவுன்சிலா்கள் தெரிவிக்கும் பணிகளை சரியாக செய்யாவிட்டால் நகராட்சிப் பணியாளா்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவாா்கள்.

    அனிதா (திமுக): வண்ணாரப்பேட்டை கால்வாயை தூா்வார வேண்டும்.செல்வராஜ் (திமுக): தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டதால் திறந்தவெளி சாக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். நொண்டிமேடு பகுதியில் தனியாா் நிலங்களில் உள்ள புதா்களை அகற்ற வேண்டும். குமாா்(அதிமுக):

    வாா்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் உள்ள நிலையில், நகராட்சி கட்டிடத்தை சீரமைக்கும் பணிகளை கைவிட வேண்டும்.ராஜேஷ்வரி பாபு (காங்): மரவியல் பூங்கா பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். நகராட்சி கடைகள் ஏலம் குறித்து கவுன்சிலா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அன்பு (திமுக): வாா்டு வரையறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

    ரஜினிகாந்த் (காங்): கன மழை பெய்யும்போது சேரிங்கிராஸ் மற்றும் கீரின்பீல்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில்

    துணைத் தலைவா் ஜே.ரவிக்குமாா் பேசுகையில், ஊட்டி படகு இல்லத்தை தோண்டி ஆழப்படுத்த வேண்டும். கோடப்பமந்து கால்வாய் கடந்த ஆட்சிக் காலத்தில் முறையாக பராமரிக் கப்படாத தால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எந்த விதமான வளா்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்றாா்.

    இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலா்கள் அக்கீம்பாபு, லயோலோ குமார், அன்பு செல்வன் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பிற கவுன்சிலா்கள் தங்கள் வாா்டுகள் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனா். இதன் பின்னா் நகராட்சி கூட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • முகக் கவசம் அணிந்து மாணவர்கள், ஆசிரியா்கள் பள்ளிக்கு வரவேண்டும்
    • பூங்கா ஊழியா்கள் அறிவுரை வழங்கி வருகின்றனா்.

     ஊட்டி,

    கோடை சீசன் நிறைவு பெற்ற நிலையிலும் தொடா்ந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

    தமிழகத்தில் ெகரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க ெதாடங்கியுள்ள நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.

    பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா மையங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது

    இதனைத் தொடா்ந்து ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளிடம் பூங்கா ஊழியா்கள் அறிவுரை வழங்கி வருகின்றனா்.

    அதுமட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முகக் கவசம் அணிந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
    • பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 72 மனுக்களை பெற்றார்.

    ஊட்டி :

    ஊட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீா்வாய நிகழ்ச்சி (ஜமாபந்தி) தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கிவைத்து 12 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 11 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு என மொத்தம் 23 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    மேலும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 72 மனுக்களை பெற்ற அவா், மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

    அதனைத் தொடா்ந்து, தூனேரி உள்வட்டத்துக்கு உள்பட்ட தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, , கூக்கல், கக்குச்சி ஆகிய கிராமங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.

    குன்னூா் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலும், கோத்தகிரி வட்டத்தில் குன்னூா் சாா் ஆட்சியா் தலைமையிலும், பந்தலூா் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், குந்தா வட்டத்தில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், கூடலூா் வட்டத்தில் கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் முகமது குதரதுல்லா, ஊட்டி வட்டாட்சியா் ராஜசேகரன், தனி வட்டாட்சியா் குமாரராஜா, உதகை வட்ட வழங்கல் அலுவலா் சங்கா் கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

    • கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • வழக்கில் தொடர்புடைய கனகராஜ் மரணம் விபத்து அல்ல, கொலை என மனைவி புகார் அளித்திருந்தார்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக சசிகலாவிடமும் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின்குட்டி, உதயன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

    முன்னதாக கொடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சேலம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி மர்மமான முறையில் இறந்தார். கனகராஜின் மரணம் விபத்து அல்ல, கொலை என காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கின் கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனகராஜ் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். 

    • காட்டு யானை துரத்திய போது முட்புதருக்குள் தவறி விழுந்தார்
    • உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    நீலகிரி,

    பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 67), கூலித்தொழிலாளி. கடந்த 21-ந் தேதி முனுசாமி வீட்டில் இருந்து வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்ற காட்டு யானை திடீரென அவரை தாக்க முயன்றது. மேலும் யானை துரத்தியதால், முனுசாமி ஓட்டம் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முட்புதருக்குள் அவர் தவறி விழுந்தார். முனுசாமியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து முட்புதருக்குள் விழுந்ததில் படுகாயம் அடைந்த முனுசாமியை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார். இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனுசாமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு வனச்சரகர் அய்யனார் உரிய சான்றுடன் விண்ணப்பித்தால் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

    • வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    நீலகிரி,

    பந்தலூர் அருகே உப்பட்டி பஜாரில் செந்தூர் முருகன் கோவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலை திறந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் மேஜை உள்ளே வைக்கப்பட்டு இருந்த ரூ.2,500 மற்றும் உண்டியல் பணம் திருட்டு போனது தெரியவந்தது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமரா காட்சிகளை பார்த்த போது, வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்து திருடி விட்டு, அருகே பள்ளி மேற்கூரை வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் கமிட்டியினர் தேவாலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலில் திருடிய ஏலமன்னா பெருங்கரை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 19) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • பாரதியார் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
    • 80 மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள புனித தெரசன்னை ஆரம்பப்பள்ளியில் பாரதியார் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளை நிர்வாகி பேட்ரிக் ஏற்பாட்டின் மூலம் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது. மொத்தம் 80 மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனதலைவர் தமிழ் வெங்கடேசன், யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை நிறுவனர் சரவணன், விடியல் தன்னார்வு அமைப்பு நிறுவனர் லாரன்ஸ், பள்ளி தாளாளர் தந்தை லியோன் பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி நவீஸ், அறக்கட்டளை செயலாளர் கங்காதரன் ,பொருளாளர் டீனாஜெனிபர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

    • போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை
    • 15 கிலோ மீட்டருக்குள் இயக்கலாம் என விதி மாற்றப்பட்டது.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் நகர பகுதிகளுக்குள் மட்டுமே ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்ற விதி இருந்தது. பின்னர் 15 கிலோ மீட்டருக்குள் இயக்கலாம் என விதி மாற்றப்பட்டது.

    ஆனால் பல ஆட்டோக்கள் 25 கிலோ மீட்டர் உள்ள பைக்காரா வரை இயக்கபட்டு வந்தன. இதனால் டூரிஸ்ட் வாகனங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அதிக அளவு சுற்றுலா பயணிகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்வதாகவும் கூறப்பட்டது.

    இந்தநிலையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிலை ஒன்று விஜயலட்சுமி பைக்காரா பகுதியில் திடீர்ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல ஆட்டோக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் இயக்கப்பட்டது தெரியவந்தது.

    சாலை விதியை மீறி குறிப்பிட்ட தூரத்திருக்கு மேல் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற 5 ஆட்டோக்களுக்கு ரூ, 2500, அபராதத்தை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயலட்சுமி விதித்தார்.

    குறிப்பிட்ட துரத்திற்கு மேல் ஆட்டோக்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். 

    ×