என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பயணிகளுடன் செல்லும்போது பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது.
    • குழந்தைகள் நனையும் அவல நிலை காணப்பட்டது.

    ஊட்டி,

    கூடலூர்-ஈரோடு இடையே இயக்கப்படும் அரசு பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்து வருகின்றனர். மேற்கூரை பழுது கூடலூரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பயணிகளுடன் செல்லும்போது பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. தொடர்ந்து மேற்கூரைகள், இருக்கைகள், படிக்கட்டுகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. மேலும் மழை பெய்யும் சமயத்தில் பஸ்சுக்குள் மழைநீர் வழிந்து ஓடுகிறது. இதனால் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பஸ் ஈரோட்டில் இருந்து பயணிகளுடன் இரவு கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஈரோடு முதல் மேட்டுப்பாளையம் வரை தொடர் கனமழை பெய்தது. மேலும் பஸ்சின் மேற்கூரை மிகவும் பழுதடைந்து இருந்ததால், அனைத்து இருக்கைகளின் மீதும் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள், குழந்தைகள் நனையும் அவல நிலை காணப்பட்டது. சிலர் தங்களது கைகளில் வைத்திருந்த குடைகளை பஸ்சுக்குள் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். தொடர்ந்து பஸ் கண்டக்டரிடம் புகார் தெரிவித்தனர். அவரும் வேறு வழியின்றி பயணிகளின் அதிருப்தியை சமாளித்தபடி இருந்தார். ஒரு கட்டத்தில் பயணிகள், வேறு பஸ்சை கூடலூருக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வேறு பஸ் மூலம் பயணிகள் கூடலூர் அழைத்து வரப்பட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நீண்ட தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. அதன் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கேரட் பயிர்கள் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன. தற்போது கேரட் விைளச்சல் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது,இன்னும் ஓரிரு வாரங்களில் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை காரணமாக மலைகாய்கறிகள் அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோ ஒன்று ரூ.90 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதே கொள்முதல் விலை நீடித்தால் கேரட் பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பிற மாநிலங்களில் ரூ.1,600 முதல் ரூ.3,500 வரை வழங்கி வருகிறது.
    • ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நீலகிரி பார்வையற்றோர் சங்க அமைப்பாளர் மோகன் மற்றும் பார்வையற்றோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கடந்த பல ஆண்டுகளாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 மட்டும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், பிற மாநிலங்களில் ரூ.1,600 முதல் ரூ.3,500 வரை வழங்கி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ரூ.ஆயிரத்தில், ஒரு நபர் தன்னை பராமரித்து கொள்வது நடைமுறைக்கு இயலாதது ஆகும். எனவே, பார்வையற்றோருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • காட்டு யானை ஒன்று கீழ்குந்தா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது.
    • கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரியசோலை அருகே மாங்கா மரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று புகுந்தது.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை யானை முற்றுகையிட்டது. பாப்புட்டி என்ற பெண்ணின் வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது தூங்கிக்கொண்டிருந்த பாப்புட்டி, அச்சத்தில் சத்தம் போட்டார். அப்பகுதி மக்கள் வந்து காட்டு யானையை விரட்டினர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். இதேபோல் தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி அருகே பேபி நகரில் மற்றொரு காட்டு யானை புகுந்தது. அப்பகுதியில் பாக்கு உள்ளிட்ட மரங்களை சரித்து போட்டு தின்றது.

    இதில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து பேபி நகர் சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    நேற்று மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மின் வினியோகம் சரி செய்யப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வீடு மற்றும் விவசாய பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தி வருவதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, காட்டு யானைகள் நடமா ட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.

    நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கீழ்குந்தா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. அங்கு சில வீடுகளை சேதப்படுத்தியது.

    மேலும் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்களை யானை சூறையாடியது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • இரண்டு பெரிய யானை மற்றும் ஒரு குட்டி யானை சாலையின் அருகே சுற்றி வருகின்றன.
    • வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது

    அரவேணு

    கோத்தகிரி - மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள முள்ளூர், மாமரம், குஞ்சப்பனை பகுதிகளில் பலாப்பழ சீசன் நடந்து கொண்டிருக்கிறது. பலாப்பழங்களை ருசிப்பதற்காக அந்த பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.

    குஞ்சப்பனை பகுதியில் இரண்டு பெரிய யானை மற்றும் ஒரு குட்டி யானை சாலையின் அருகே சுற்றி சுற்றி வருகின்றன. அதுமட்டுமின்றி சாலையில் செல்லும் வாகனங்களை இடைமறித்து வாகனங்களை தாக்குவது, வாகனங்களில் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா என்று தேடும் செயலில் அந்த யானைகள் ஈடுபட்டு வருகின்றன.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அங்கு வாகன ஓட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது

    பகல் வேளையில் கூட இதுபோன்று சாலையில் செல்லும் வாகனங்களை யானைகள் வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் தங்களை உயிரை காத்துக் கொள்ள வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடும் நிலை உள்ளது.

    எனவே சாலையில் முகாமிட்டுள்ள யானைகளை அங்கிருந்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.  

    • துமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினாா்.
    • அவசர உதவி எண் கொண்ட புகாா் பெட்டியினை திறந்துவைத்தாா்.

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் தொடக்க விழா நடந்தது. ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் பங்கேற்று 163 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினாா். மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதா வது:-

    அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.

    நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 163 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை கல்லூரி மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் புதுமைப்பெண் திட்டத்தில் சிறந்த 24 பங்காளிப்பாளா்களுக்கு விருதினை வழங்கிய பின்னா், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமையினை தடுத்து நிறுத்துவதற்கான அவசர உதவி எண் கொண்ட புகாா் பெட்டியினையும் திறந்துவைத்தாா்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், மகளிா் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன், மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் கீதா நடராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்யராஜா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் தேவகுமாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராகிம்ஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட சமூக நல அலுவலா் பிரவீணா தேவி உள்பட பலா் கலந்து கொண்டனா். 

    • கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன.

    தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது,இன்னும் ஓரிரு வாரங்களில் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை காரணமாக மலைகாய்கறிகள் அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோ ஒன்று ரூ.90 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதே கொள்முதல் விலை நீடித்தால் கேரட் பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • தொடர் மழையால் நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
    • தொடர் மழை காரணமாக ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கடைகள் என 4,000 வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர் நகராட்சி மூலம் வினியோகிக்கப்படுகிறது.

    பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி, கிளன்ராக் ஆகிய அணைகள் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஊட்டி நகர் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இதுவரை 100 சதவீதத்துக்கு அதிகமாக பதிவாகி உள்ளது. தொடர் மழையால் நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடர் மழை காரணமாக ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டது. தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், மார்லிமந்து அணைக்கு வரும் பவுட்டா கால்வாய், ஸ்னோடவுன் கால்வாய் 2 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்லிமந்து அணை 23 அடி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இந்த அணை மூலம் 7 வார்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 50 அடி கொள்ளளவு கொண்ட பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 48 அடியாகவும், 39 அடி கொள்ளளவான டைகர்ஹில் அணையில் 39 அடியாகவும், 12 அடி கொள்ளளவு கொண்ட கோடப்பமந்து அணையில் 12 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது. இதனால் வருகிற நாட்களில் ஊட்டி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கூடு கட்டும் பருவத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் வைக்கப்பட்டது.
    • உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது.

    ஊட்டி,

    மசினகுடி, சீகூர் வனப்பகுதியில் கழுகுகள் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கழுகுகள் தினம் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண்குமார் உத்தரவின்படி, மசினகுடியில் உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு மசினகுடி வனச்சரகர் பாலாஜி தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், நீலகிரி மாவட்ட மருந்து விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். சீகூர் வனச்சரகத்தில் உள்ள ஜகலிக்கடவு பகுதியில் உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாறு கழுகுகள் கூடு கட்டும் பருவத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு படம் வரைதல் மற்றும் பரமபதம் விளையாட்டு மூலம் பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    • சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது.
    • சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் சென்றனர். இந்தநிலையில் கூடலூர் ஊசிமலை அருகே சாலையோரம் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் தென்பட்டது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் செல்ல முயன்றது. ஆனால் தடுப்பு சுவர்கள் உயரமாக இருந்ததால், ராஜநாகத்தால் உடனடியாக அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனால் ராஜநாகம் பல கட்ட முயற்சிக்குப் பிறகு சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது. இதனிடையே சாலையோரம் ராஜநாகம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையோரம் தென்பட்டால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது. தானாகவே வனத்துக்குள் சென்று விடும் என்றனர்.

    • மூலைக்கடையில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டது.
    • குடியிருப்புகளை முற்றுகையிட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சாலையில் உலா கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையில் குஞ்சப்பனை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு உள்ளன. அத்துடன் அடிக்கடி சாலையில் உலா வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் குட்டியுடன் 2 காட்டு யானைகள் நின்றன. குறுகிய வளைவில் யானைகள் நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். சாலையில் யானைகளை கண்டால் தொல்லை அளிக்கவோ அல்லது அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது. ஒலிப்பான்களை ஒலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். வாழை மரங்கள் சேதம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா பகுதிக்குள் இரவு காட்டு யானை புகுந்தது. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டது. கனகராஜ் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இரு்நத வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. பின்னர் மூலைக்கடை பகுதியில் வர்க்கீஸ் என்பவரது வீட்டின் நுழைவுவாயிலை காட்டு யானை உடைத்து, வளாகத்துக்குள் புகுந்தது. அங்கு வாழை மரங்களை சேதப்படுத்தியது. மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை தாக்க முயன்றது. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்ைட தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டினர். இதையடுத்து மூலைக்கடையில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலை சேறும், சகதியுமாகவும், தண்ணீர் தேங்கியும் காணப்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் உல்லத்தி ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் பகுதிக்கு ஒரு சாலை உள்ளது. அந்த சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சொல்லவே வேண்டாம்.

    சாலை சேறும், சகதியுமாகவும், தண்ணீர் தேங்கியும் காணப்படும். இதில் அந்த பகுதி மக்கள் நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக மழைகாலங்களில் இந்த சாலை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இந்த பாதையை சரி செய்ய கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை.

    இந்த சாலையை தான் தினமும் பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு செல்லும் போது சில நேரங்களில் சிலர் வழுக்கி கீழே விழுந்து விடுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×