என் மலர்tooltip icon

    நீலகிரி

    • வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் கலந்துக்கொண்டனர்
    • முதற்கட்டமாக 6 வாக்குச்சாவடி குழுவினரை ஆய்வு மேற்கொண்டார்.

    ஊட்டி,

    குன்னூர் நகர வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் ஒவ்வொரு குழுவினரையும் அழைத்து நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் ஆய்வு செய்தார். முதற்கட்டமாக 6 வாக்குச்சாவடி குழுவினரை கடந்த 6-ந் தேதி அன்று குன்னூர் நகர அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலாகேத்ரின், நகர அவை தலைவர் தாஸ், துணை செயலாளர்கள் முருகேஷ், சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், பழனிசாமி, கிளை செயலாளர்கள் சிக்கந்தர், நாகராஜ் மற்றும் வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் கலந்துக்கொண்டனர்.

    • கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • மாரியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் அரவேணு சுற்றுவட்டார பகுதிகளில்

    இருந்து பழனிமலை முருகன் கோவிலுக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். ஒவ்வொரு ஆண்டும் பழனி மலை முருகன் கோவிலில் ஜனவரி மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதனையொட்டி கோத்தகிரி பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். இதனை முன்னிட்டு அரவேணு கடை வீதி பகுதியில் உள்ள பழனி முருகன் பாதயாத்திரை குழு சார்பில், அதன் குருசாமி துரை தலைமையில் தொடர்ந்து 29-வது ஆண்டாக அரவேணு, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகள் ஏந்தி பழனி மலைக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அரவேணு சக்த்தா மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    • ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஊட்டி,

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்க ணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக ஊட்டி படகு இல்லம், அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.

    வார விடுமுறையான நேற்று ஊட்டி படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் படகு சவாரி செய்தும், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இதேபோல தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, மலை ரெயிலில் பயணம் செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    கடந்த ஆண்டு மட்டும் ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஊட்டி படகு இல்லத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் மிதவை மேடை அமைக்கப்பட்டுள்ளது. புளோட்டிங் ஜெட்டி எனப்படும் மிதவை மேடை, செவ்வக வடிவில் சிறு, சிறு அமைப்பாக சேர்த்து ஒரு சேர உருவாக்கப்பட்டு உள்ளது.

    சுற்றுலாபயணிகள் இதில் நடந்து சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

    • மக்னா யானை கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி ஊருக்குள் புகுந்தது.
    • சுல்தான் பத்தேரி பகுதியில் சுற்றி திரிந்த பி.எம்.2 மக்னா யானைக்கு கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த பி.எம்.2 மக்னா யானை பாப்பாத்தி என்ற பெண்ணை தாக்கி கொன்றது.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை பகுதியில் வனத்துறையினர் விட்டனர். மேலும் அந்த யானையை ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் மக்னா யானை கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி ஊருக்குள் புகுந்தது.

    தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற சுபேர் என்ற தம்பி என்பவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த முத்தங்கா சரணாலய வனத்துறையினர் 2 கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சுல்தான்பத்தேரி பொதுமக்கள் மக்னா யானையை பிடித்து முத்தங்கா சரணாலய முகாமில் அடைக்க வேண்டும் என கூறி வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தை தொடர்ந்து கேரள முதன்மை தலைமை வன பாதுகாவலர் கங்கா சிங், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து வனத்துறையினர் முத்தங்கா சரணாலய கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான மருத்துவ குழுவினருடன் இணைந்து சுல்தான் பத்தேரி பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுல்தான் பத்தேரி பகுதியில் சுற்றி திரிந்த பி.எம்.2 மக்னா யானைக்கு கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை சிறிது தூரம் நடந்து சென்று பின்னர் அங்கேயே நின்று விட்டது. உடனடியாக வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை லாரியில் ஏற்றி, முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் உள்பட அரியவகை பறவைகள் வலசை பயணமாக வரும்.
    • நீலகிரி மாவட்டம் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கலாம்.

    அரவேணு:

    சர்வதேச அளவில் பறவைகள் வந்து செல்லும் வலசை பாதைகளில், முக்கியமான பாதையாக நீலகிரி மாவட்ட மலைத்தொடர் பகுதி உள்ளது.

    நீலகிரி சிறந்த உயிர்ச் சூழல் மண்டலமாக உள்ளதால், ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் உள்பட அரியவகை பறவைகள் வலசை பயணமாக வரும்.

    இந்த பறவைகள் அங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து, மீண்டும் அவை எங்கிருந்து வந்ததோ அதே இடத்திற்கே திரும்பி சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

    இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் உறைபனி பொழிவு குறைவு காரணமாக, பறவைகளின் வலசைப்பாதை பயணம் சற்று தாமதமாக தற்போது துவங்கியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்திற்கு யுரோப்பியன் கிரீன் வுட் பெக்கர், ப்ளூ கேப்பிடூ ராக் திரஷ், லாங் கிரே பாபுலர், ஹிரோஷியன் வுட் பெக்கர், லாங் டைல் சிறைக், சினோரியஸ் டிட், ஒயிட் ஐ, கிரேட்டர் கோணிகர், வேக்டைல், இந்தியன் ரோலர், ரோஸ் ரிங் பேரகிட், ஹான்பிள் ஆகிய அரிய வகை பறவைகள் வந்துள்ளன.

    பறவைகளை நீலகிரியின் பல்வேறு இடங்களில் எளிதாக காண முடிகிறது. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம் கோடநாடு காட்சி முனை, கோத்தகிரி லாங்வுட் சோலை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, பர்லியார், குன்னூர் டால்பின்ஸ் நோஸ் காட்சி முனை, கூடலூர் ஊசிமலை காட்சி முனை ஆகிய பகுதிகளில் பறவைகள் இடம் பெயர்கின்றன.

    இந்த பறவைகளை பறவைகள் ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு கழித்து, புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டம் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கலாம். ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன.

    தற்போது முக்கிய இடங்களில், பறவைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதற்கு காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர் மழை, பனிப்பொழிவு இல்லாத காரணத்தால் பறவைகளின் உள்ளூர் இடம் பெயர்வு தாமதமாகவே துவங்குகின்றது. இந்த பருவநிலை மாற்றம் இயற்கைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் ஆகும்.

    எனவே மரங்களை வளர்த்து, சுற்றுச் சூழலை பாதுகாத்து, பருவநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்து.
    • கிலோ ரூ.4க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்தலார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிளில் மாற்றுப் பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காளிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேராக்காய், உகு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக, 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, 30 டன் அளவுக்குத்தான் விற்பனைக்கு வருகின்றன.

    உறைபனி விழுவதால் மலை காய்கறிகளை பாதுகாக்க காலை நேரங்களில், 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. உறைபனி தாக்கத்தால் முட்டைகோஸ் பயிர் நிறம் மாறியுள்ளது.

    முட்டைகோசுக்கு நல்லவிலை கிடைத்து வந்தநிலையில் தற்போது அதன் விலை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் படிப்படியாக விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டு தற்போது கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் விட்டுவிடும் நிலை காணப்படுகிறது

    ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டியில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட் உள்பட பல்வேறு மலைகாய்கறிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    தற்போது பிற மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. நேற்று ஊட்டி மார்க்கெட்டில் முட்டைகோஸ் கிலோ 4 ரூபாய்க்கு தான் விற்பனையானது.

    15 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடியாகும். பீட்ரூட், கேரட் விலையும் இதுபோன்று குறைந்து தான் காணப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வந்தது
    • வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது

    கோத்தகிரி,

    கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 30-ந் தேதி அன்று மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து தட்டப்பள்ளம் பகுதியில் போடப்பட்ட வேகத்தடைக்கான பணி முழுவதுமாக முடிக்கபட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் மாலை மலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது.
    • இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான குழி ஒன்று உள்ளது. இந்த குழி பல மாதங்களாக மூடப்படாமலேயே உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இது போன்ற குழி அந்த பகுதியில் இருப்பதே தெரியாமல் உள்ளது.

    இதனால் யாரேனும் இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் பங்கேற்றனர்.
    • வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

    ஊட்டி,

    குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் ெஹத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடி வருகின்றனர். ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, ேபரட்டி, மல்லிெகாரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதையொட்டி பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.

    இதனை முன்னிட்டு நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், அமப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கோத்தகிரி,

    புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வேங்கை வயல் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலத்தை கலந்த சம்பவத்திணை கண்டித்து நாடு முழுவதும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சம்மந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • அடிவாரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது.
    • மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் அமைந்துள்ள கடைசி கடசோலை, குள்ளங்கரை, ரங்கசாமிமலை, கொடநாடு மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வருடந்தோறும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம்.

    மேலும் மலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும் யானைகள் சாலைக்கு வராமல் தடுக்க தொடா்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனா்.

    • கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தன.
    • கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள்பட நீலகிரி வனக்கோட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தன.

    ஆய்வில், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பன்றிகள் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் நடைபெற்ற ஆய்வில், வளா்ப்பு பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என உறுதியானது.

    எனினும், கேரள, கா்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கக்கநல்லா, தாளூா், சேரங்கோடு, நாடுகாணி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவ குழு மூலம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே, நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

    வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சிப் பன்றிகளை நீலகிரிக்கு கொண்டுவரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக கால்நடை மண்டல இயக்குநா் பகவத்சிங், கூடலூா் கோட்டாட்சியா் முகமது ஆகியோா் தலைமையில், மசினகுடி, கூடலூா், தொரப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள வளா்ப்பு பன்றிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வளா்ப்பு பன்றிக்கூடங்களில் உள்ள பன்றிகளை விற்க கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் வனவிலங்குகள், கால்நடைகள், மனிதா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கால்நடை மண்டல இயக்குநா் பகவத்சிங் தெரிவித்துள்ளாா்.

    ×