என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மக்னா யானை பிடிபட்டது
    X

    கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மக்னா யானை பிடிபட்டது

    • மக்னா யானை கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி ஊருக்குள் புகுந்தது.
    • சுல்தான் பத்தேரி பகுதியில் சுற்றி திரிந்த பி.எம்.2 மக்னா யானைக்கு கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த பி.எம்.2 மக்னா யானை பாப்பாத்தி என்ற பெண்ணை தாக்கி கொன்றது.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை பகுதியில் வனத்துறையினர் விட்டனர். மேலும் அந்த யானையை ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் மக்னா யானை கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி ஊருக்குள் புகுந்தது.

    தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற சுபேர் என்ற தம்பி என்பவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த முத்தங்கா சரணாலய வனத்துறையினர் 2 கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சுல்தான்பத்தேரி பொதுமக்கள் மக்னா யானையை பிடித்து முத்தங்கா சரணாலய முகாமில் அடைக்க வேண்டும் என கூறி வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தை தொடர்ந்து கேரள முதன்மை தலைமை வன பாதுகாவலர் கங்கா சிங், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து வனத்துறையினர் முத்தங்கா சரணாலய கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான மருத்துவ குழுவினருடன் இணைந்து சுல்தான் பத்தேரி பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுல்தான் பத்தேரி பகுதியில் சுற்றி திரிந்த பி.எம்.2 மக்னா யானைக்கு கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை சிறிது தூரம் நடந்து சென்று பின்னர் அங்கேயே நின்று விட்டது. உடனடியாக வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை லாரியில் ஏற்றி, முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×