என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது.
    • ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் அதிகமாக இருக்கும்.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.

    தற்போது மழை குறைந்ததால் பனிப்பொழிவு குறைந்து உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக உறைபனியில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் மறுநாள் காலை வரை குளிரும் நிலவுகிறது.

    ஊட்டியில் இன்று காலை தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது.

    இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி கொட்டி கிடந்தது.

    அதிகாலையில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள் வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.

    அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.

    ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 23.7 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இது புறநகர் பகுதிகளில் குறைந்து 2 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது.

    அதே சமயம், ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டியில் கடும் உறைபனி காணப்பட்ட நிலையிலும், குளிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், பனி பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அதிகாலை நேரங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது. மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    • புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இதனை தொடர்ந்து கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோத்தகிரி கப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையிலும் பாண்டியன்பர்க் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலும் புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து அங்கு சென்ற போலீசார் அந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்ததாக கப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் கோத்தகிரி கார்செலி பகுதியை சேர்ந்த ரமேஷ் தாவுத் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

    • கூடுதல் விலைக்கு ஒருவர் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • புதுக்கோட்டையில் இருந்து வந்த 25 வயதான அன்பழகன் என்பது தெரிய வந்தது

    கோத்தகிரி,

    கோத்தகிரி கூக்கல் தொரை பகுதியில் கூடுதல் விலைக்கு ஒருவர் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது கூக்கள்தொரை மதுபானக்கடையின் அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அந்த இளைஞர் கோத்தகிரி பகுதிக்கு வேலைக்காக புதுக்கோட்டையில் இருந்து வந்த 25 வயதான அன்பழகன் என்பது தெரிய வந்தது அந்த இளைஞர் கூக்கள்தொரை மதுபானக்கடையில் மது பாட்டில்களை வாங்கி அருகில் உள்ள ஊர்களுக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டின் பூட்டை உடைத்து 2022 அக்டோபா் 7ஆம் தேதி 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • வழக்கு விசாரணை கூடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள மைசூா் மரப்பாலம் மங்குழி பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2022 அக்டோபா் 7ஆம் தேதி 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    இது தொடா்பாக கூடலூா் போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியைச் சோ்ந்த மது (23), கேரளம் மாநிலம், மாநந்தவாடி பகுதியைச் சோ்ந்த மனு (20), அவரின் தாயாா் லதா (38) ஆகியோரைக் கைது செய்தனா்.

    இந்த வழக்கு விசாரணை கூடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசின்குமாா் மூன்று பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்

    • கடந்த 4 நாட்களாக ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக உறைபனி தாக்கம் தொடங்கும். குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாக கடந்த நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கியது.

    இதற்கிடையே ஊட்டியில் மீண்டும் மழை பெய்ததால், பனிப்பொழிவு குறைந்தது. மீண்டும் கடந்த 2 வாரத்திற்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை கடுங்குளிரும் நிலவி வருகிறது.

    ஊட்டியில் நேற்று காலையில் அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி ரெயில் நிலையம், குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைபனி தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    அதிகாலையில் பச்சை புல்வெளிகளே தெரியாத வகையில் உறைபனி படர்ந்து இருந்தது. அவலாஞ்சி, தலைகுந்தா, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சமாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நேற்று பதிவானது. ஊட்டி நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடந்தது. வாகன ஓட்டிகள் உறைபனியை அகற்றி விட்டு, வாகனங்களை இயக்கினர். ஊட்டியில் குறைந்தபட்சமாக 2.8 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

    ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடுங்குளிரை போக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். மேலும் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.

    • 39-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டப்பட்டது.
    • மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    ஊட்டி,

    ஊட்டி அப்பர் பஜாரில் வீற்றிருக்கும் குழந்தை ஏசு ஆலயத்தின் 39-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டப்பட்டது.

    கடந்த புதன் கிழமை மாலை பங்கு தந்தை செல்வநாதன் கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.கோத்தகிரி மரியன்னை ஆலய உதவி பங்கு தந்தை ஜூட் அமலநாதன் 3 நாட்கள் சிறப்பு மறையுரை நிகழ்த்தி திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    மறைமாவட்ட பொருளாளர் ஸ்டீபன் லாசர், உதவி பங்கு குருக்கள் பிரெட்ரிக், ஜோசப் மற்றும் பங்கு தந்தை இணைந்து திருப்பலி சிறப்பித்தனர். மதியம் திருவிழா அன்பின் விருந்து நடைபெற்றது.

    பிற்பகல் 3 மணிக்கு புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு சிஜோ ஜார்ஜ் எடக்குடியில் தலைமையில் மலையாள சிறப்பு திருப்பலி நடைபெற்றது .

    மாலை 5.30 மணிக்கு குன்னூர் ஆழ்வார்பேட்டை புனித சூசையப்பர் ஆலய உதவி பங்கு குரு விமல் பாக்கியநாதன் சிறப்பு திருப்பலி மறையுரை நிகழ்த்தி சிறப்பித்தார்.

    பின்னர் குழந்தை ஏசு ஆடம்பர தேர் பவனி நடைபெற்று இறை ஆசீர் வழங்கப்பட்டது . அனைத்து ஏற்பாடுகளும் பங்கு குரு செல்வநாதன் பங்கு மக்கள் மற்றும் இளைஞர் இயக்கம் செய்திருந்தனர்.

    • 5 வாக்கு சாவடிகளின் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
    • கழக நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    குன்னூர் நகரத்திற்கு உட்பட்ட 5 வாக்கு சாவடிகளின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனைப்படி குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி தலைமையில், குன்னூர் நகர தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர் செல்வம், நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நகர அவை தலைவர் தாஸ், துணைச் செயலாளர்கள் சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், சார்லி மற்றும் கழக நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது.
    • ரூ.1000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சி எம்.பாலாடா நியாய விலைக்கடையில் பொங்கல் பண்டிகை–யையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, கரும்பு, ரூ.1000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாக்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 335 ரேஷன் கடைகளில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 624 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 28 ரேஷன் கடைகளில் 18,400 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 26 ரேஷன் கடைகளில் 15,535 குடும்ப அட்டைதாரர்களுக்கும், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் 15 ரேஷன் கடைகளில் 2,235 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என நீலகிரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 404 ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வீதம் 2,19,794 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.21.97 கோடி வழங்கப்பட உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் வேலை நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷ்னி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகானந்தம், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான முத்துசிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பையில் 2000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு இருந்தது.
    • போலீசார் உரியவரை வரவழைத்து ஒப்படைத்தனர்

    அரவேணு,

    கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் பணப்பை ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற கெட்சிகட்டி யை சேர்ந்த மணி என்பவர் பார்த்தார். பின்னர் அதனை எடுத்த பார்த்தார். அப்ேபாது அந்த பையில் 2000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு இருந்தது.

    அதனை ஒப்படைப்பதற்காக நீண்ட நேரமாக அங்கேயே காத்திருந்தார். ஆனால் யாரும் வராததால் நேராக, கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

    அங்கு இருந்த போலீசாரிடம் இந்த பணப்பை கீழே கிடந்தது. யாருடையது என்று தெரியவில்லை என கூறி அதனை ஒப்படைத்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பணப்பை யாருடையது என்பதை கண்டறிய அதில் இருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஆதார்கார்டு மூலம், பணப்பையை தவறவிட்டது, கூடலூர் ஒவேலியை சேர்ந்த கலாதேவி என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.

    உடனடியாக அதில் இருந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் கூடலூர் திரும்பிய போது பணப்பையை தவற விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து குன்னூர் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் ஆகியோர் கலாதேவியிடம் பணப்பையை ஒப்படைத்தனர். மேலும் பணப்பையைக் கண்டெடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மணியை போலீஸ் துணை சூப்பிரண்டு பாராட்டி ஊக்குவித்தார்.

    கீழே கிடந்த பணப்பையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த மணிக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • நோயின் தாக்கம் குறையும் வரை அண்டை மாநிலங்களில் இருந்து, பன்றிகள் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது.
    • மாநில எல்லைகளில் 8 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியும் நடக்கிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வரவேற்பு மையம் அருகே அதிகளவில் காட்டு பன்றிகள் இறந்துள்ளன.

    அதனை பிரேத பரிசோதனை செய்து இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் உறுதியாகி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக முதுமலை புலிகள் காப்பகம் 10 கி.மீ சுற்றுப்புறத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் அந்த பகுதி கால்நடை மருத்துவக்குழு சோதனை மேற்கொண்டது. அந்த சோதனையில் எந்த பண்ணையிலும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறியோ, இறப்புகளோ இல்லை.

    பன்றி வளர்ப்பு உரிமையாளர்களிடம் உயிரி பாதுகாப்பு முறைகளான பண்ணையை சுற்றிலும் வேலி அமைத்து காட்டு பன்றிகள் ஏதும் பண்ணையில் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணையை சுற்றிலும் சோடியம் ஹைப்போ குளோரைட் அல்லது கால்சியம் ஹைப்போ குளோரைட், காஷ்டிக் சோடா தெளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இது பன்றிகளை மட்டுமே தாக்க கூடியது. மற்ற விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    இந்த நோயின் தாக்கம் குறையும் வரை அண்டை மாநிலங்களில் இருந்து, பன்றிகள் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது.

    இதற்காக மாநில எல்லைகளில் 8 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியும் நடக்கிறது. கால்நடைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு பன்றிகள் பண்ணைக்குள் வருவதை தடுக்க வளர்ப்பு பன்றிகளை கொட்டகைக்குள் பூட்டி வைத்து வளர்க்கவும், பண்ணையை சுற்றி தடுப்புகள் போட்டு பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் உணவகங்களில் இருந்து பெறப்படும் உணவு கழிவுகளையும் மற்றும் சந்தை பகுதிகளில் பெறும் காய்கறி கழிவுகளையும் இந்த நோய் தாக்கம் குறையும் வரை வளர்ப்பு பன்றிகளுக்கு உணவாக வழங்க தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுலாத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தகவல்.
    • பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சா் தெரிவித்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இங்கு பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இருப்பினும், கேளிக்கை பூங்காக்கள், சாகச விளையாட்டுகளை அறிமுகம் செய்ய வேண்டும் என இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா். குறிப்பாக, ஊட்டியில் ரோப்காா் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனா். அரசும் இதனை ஏற்று ரோப்காா் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஆய்வு மேற்கொண்டது. ஆனால், தற்போது வரையில் ரோப்காா் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில், தொட்டபெட்டாவில் இருந்து வேலி வியூ வரை ரோப்காா் திட்டம் அமைக்கப்படுவது தொடா்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

    • பள்ளிகளில் கராத்தே பயிற்சி நடந்தது.
    • அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

    கோத்தகிரி,

    தமிழக விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதனை முன்னிட்டு கோத்தகிரி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் நீலகிரி மாவட்ட சோரின்ட்ரியூ கராத்தே பள்ளி, தூரிகை அறக்கட்டளை, கருவி அறக்கட்டளை மற்றும் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை இனைந்து கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் கராத்தே பயிற்சி நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நடந்தது. விழாவுக்கு நீலகிரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் மணிகண்டராஜ் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தாத்தையன், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, மாவட்ட துணை தலைவர் சுரேஷ், சரத்பாபு, கவுதம், வெங்கடேஷ், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ×