என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் எதிரொலி: நீலகிரிக்கு வெளிமாநிலங்களில் இருந்து பன்றிகள் கொண்டு வர தடை
    X

    ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் எதிரொலி: நீலகிரிக்கு வெளிமாநிலங்களில் இருந்து பன்றிகள் கொண்டு வர தடை

    • நோயின் தாக்கம் குறையும் வரை அண்டை மாநிலங்களில் இருந்து, பன்றிகள் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது.
    • மாநில எல்லைகளில் 8 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியும் நடக்கிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வரவேற்பு மையம் அருகே அதிகளவில் காட்டு பன்றிகள் இறந்துள்ளன.

    அதனை பிரேத பரிசோதனை செய்து இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் உறுதியாகி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக முதுமலை புலிகள் காப்பகம் 10 கி.மீ சுற்றுப்புறத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் அந்த பகுதி கால்நடை மருத்துவக்குழு சோதனை மேற்கொண்டது. அந்த சோதனையில் எந்த பண்ணையிலும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறியோ, இறப்புகளோ இல்லை.

    பன்றி வளர்ப்பு உரிமையாளர்களிடம் உயிரி பாதுகாப்பு முறைகளான பண்ணையை சுற்றிலும் வேலி அமைத்து காட்டு பன்றிகள் ஏதும் பண்ணையில் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணையை சுற்றிலும் சோடியம் ஹைப்போ குளோரைட் அல்லது கால்சியம் ஹைப்போ குளோரைட், காஷ்டிக் சோடா தெளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இது பன்றிகளை மட்டுமே தாக்க கூடியது. மற்ற விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    இந்த நோயின் தாக்கம் குறையும் வரை அண்டை மாநிலங்களில் இருந்து, பன்றிகள் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது.

    இதற்காக மாநில எல்லைகளில் 8 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியும் நடக்கிறது. கால்நடைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு பன்றிகள் பண்ணைக்குள் வருவதை தடுக்க வளர்ப்பு பன்றிகளை கொட்டகைக்குள் பூட்டி வைத்து வளர்க்கவும், பண்ணையை சுற்றி தடுப்புகள் போட்டு பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் உணவகங்களில் இருந்து பெறப்படும் உணவு கழிவுகளையும் மற்றும் சந்தை பகுதிகளில் பெறும் காய்கறி கழிவுகளையும் இந்த நோய் தாக்கம் குறையும் வரை வளர்ப்பு பன்றிகளுக்கு உணவாக வழங்க தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×