என் மலர்tooltip icon

    நீலகிரி

    • உறைபனி தாக்கம் தொடர்வதால் இத்தலார், காந்தி கண்டி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன.
    • தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொள்முதல் அடியோடு குறைந்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது.

    இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சியில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    அவலாஞ்சியில் நேற்றுமுன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக இருந்தது. நேற்று மைனஸ் ஒரு டிகிரி செல்சியசாக பதிவானது.

    கடுங்குளிர் நிலவுவதால் தேயிலை தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    உறைபனி தாக்கம் தொடர்வதால் இத்தலார், காந்தி கண்டி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொள்முதல் அடியோடு குறைந்துள்ளது.

    இதுகுறித்து சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் உறைபனி இருப்பதால் பயிர்கள் கருகி விடுகிறது. தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும். இதற்கு 4 மாதங்கள் வரை ஆகும். அதுவரை என்ன செய்வது என்பது தெரியவில்லை. எனவே பனியால் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    அறுவடைக்கு தயாரான தேயிலை, எடுக்க முடியாத அளவுக்கு கருகியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். நாள்தோறும் 5 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகளுக்கு 2 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வழங்க முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாதம் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்த தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் இதர சுகாதார ஆய்வாளர்களின் நீலகிரி மாவட்ட கூட்டமைப்புக்கான தேர்தல், ஊட்டியில் நடந்தது. இதில் தேர்தல் அலுவலராக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் வேணுகோபால் பணியாற்றினார். ேதர்தலில் தலைவராக கே.டி.மூர்த்தி, செயலாளராக பி.குமாரசாமி, பொருளாளராக ஏ.கார்த்திக், துணைத்தலைவராக ஆர்.சங்கரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த கிரேடு-2 நிலையில் உள்ள சுகாதார ஆய்வாளர்களை கிரேடு-1 ஆக பதவி உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் தினசரி, வாராந்திர, மாதாந்திர அறிக்கைகளை தயார் செய்து அனுப்ப எழுதுபொருள் மற்றும் இதர கட்டணமாக மாதம் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • ரகசிய தகவல் கிடைத்தது.

    கூடலூர்,

    ஓவேலி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராகிம், முத்து முருகன், அசோக் உள்ளிட்ட போலீசார் கூடலூர், ஓவேலி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றதாக கூடலூரை சேர்ந்த அலி(வயது 47), 1-ம் மைல் கோகோகாடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக்(45), ஓவேலி பேரூராட்சி சூண்டி மரப்பாலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த சுமார் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • பெண் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளமும் வழங்க வேண்டி உள்ளது.
    • 90 நாட்களில் பூண்டு அறுவடைக்கு தயாராகி விடும்.

    அரவேனு,

    கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் வெள்ளைப் பூண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    இதேபோன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்து கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளைப் பூண்டு அதிக காரத்தன்மைக் கொண்டதாகவும் , மருத்துவ குணம் கொண்டதுமாகவும் இருப்பதால் நீலகிரி பூண்டுக்கு எப்பொழுதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

    இதன் காரணமாக கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் முதல் போக விவசாயமாக மருத்துவ குணம் கொண்ட நீலகிரி பூண்டை தற்போது தங்களது தோட்டங்களில் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.

    இது குறித்து பூண்டு பயிரிட்டுள்ள கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறியதாவது:-

    முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் நீலகிரி பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2 ஆம் போகத்தில் அறுவடை செய்யும் பூண்டு விதைகாக பயன்படுத்தப்படுகிறது. விதைக்காக நீலகிரி பூண்டுகளே பெரிதும் பயன்படுத்தப்படுவதால், இரண்டாம் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு விதைகளை இந்தியா முழுவதிலும் இருந்து வந்து விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். பூண்டுக்கு என நிரந்தரமான கொள்முதல் விலை கிடைப்பதில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன் பூண்டு கிலோவுக்கு வெறும் 30 ரூபாய் மட்டுமே கிடைத்தது. இதனால் பூண்டு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்ததால், நிலத்தை டிராக்டர் எந்திரம் மூலம் உழுது பதப்படுத்த முடியவில்லை. தற்போது நிலத்தைப் பதப்படுத்தி, ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி மண்ணை இலகுவாக்கி, சால்களை அமைத்து, பூண்டு விதைகளை நடவு செய்து வருகிறோம். ஒரு ஏக்கர் பூண்டு பயிரிடும் செலவில், 10 ஏக்கரில் கேரட் பயிரிட முடியும்.

    முதல் போகத்தில் பூண்டு பயிர்கள் பயிரிட்டால் அறுவடை செய்ய 100 நாட்கள் தேவைப்படும். இரண்டாம் போகத்தில் 90 நாட்களில் பூண்டு அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது ஆண் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளமும், பெண் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளமும் வழங்க வேண்டி உள்ளது. மேலும் பூண்டு பயிருக்கு நோய் வராமல் தடுக்க பயன்படுத்தும் மருந்தின் விலையும் மிக அதிமாக உள்ளது. தவிர என்.சி.எம்.எஸ் மூலம் வழங்கப்படும் உரம் பூண்டுக்கு சிறந்ததாக உள்ளது. ஆனால் உரத்திற்கு பற்றாக்குறை நிலவி வருவதால், சரி வர கிடைப்பதில்லை. பெரும்பாலும் காளான் குடில்களில் வீணாகும் இயற்கை உரம் மற்றும் சாண உரத்தை வாங்கி பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வருகிறோம்.

    ஒரு கிலோ விதைப்பூண்டு 250 ரூபாய் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு பூண்டு பயிரிட 750 கிலோ விதைகள் தேவை. ஒரு ஏக்கரில் பூண்டு பயிரிட்டால் குறைந்த பட்சம் 500 கிலோ முதல் 600 கிலோ வரையும், நன்கு பராமரித்தால் 800 முதல் 900 கிலோ பூண்டை அறுவடை செய்ய முடியும். நீலகிரி மாவட்டத்தில் பூண்டு விதைகளை பாதுகாப்பாக வைக்கவும், அறுவடை செய்த பூண்டை, நல்ல விலை கிடைக்கும் வரைப் பாதுகாத்து வைக்கவும் எவ்வித வசதியும் இல்லை. எனவே தோட்டக்கலை வணிக வேளாண்மை துறையின் சார்பில் கிடங்கு அமைக்கவும், பூண்டுக்கு குறைந்த பட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 50-வது ஆண்டு ஆலயத் திருவிழா நடைபெறுகிறது.
    • 100-க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஊட்டி,

    கேரள மாநிலம், மானந்தவாடியில் உள்ள புகழ் பெற்ற தூய மரியன்னை ஆலயம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள தூய மரியன்னையின் திருஉருவம் 160-க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் ஜெபத்துக்காக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த யாத்திரை மானந்தவாடியில் தொடங்கியது. கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி தூய மரியன்னையின் திருஉருவம் குன்னூா் புனித செபஸ்தியாா் ஆலயத்திற்க்கு வந்தடைந்தது. இங்கு நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனைக்குப் பின் கூடலூரில் உள்ள தா்மகிரி ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த யாத்திரை மே 1-ந் தேதி முடிவடைகிறது. அன்றையதினம் மானந்தவாடியில் உள்ள தூய மரியன்னைஆலயத்தில் 50-வது ஆண்டு ஆலயத் திருவிழா நடைபெறுகிறது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

     கோத்தகிரி

     கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் விநாயகர் கோவில் முன்புறம் கரடி உலா வந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல நேற்று முன்தினம் இரவு ஊர்க்காவல் படையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 43) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் கரடி துரத்தியதில் தவறி கீழே விழுந்து கிறிஸ்டோபர் காயமடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


    இதற்கு ஏற்ப பகலில் நன்கு வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது.

    நீலகிரி

    கூடலூர் பகுதியில் பாகற்காய் சாகுபடி தொடங்கியது. பாகற்காய் விவசாயம் கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இடைவிடாமல் பெய்வது வழக்கம். இதைத்தொடர்ந்து மழைக்காலத்தில் விளையக்கூடிய இஞ்சி, ஏலக்காய், காபி மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

    தற்போது மழைக்காலம் முடிவடைந்து விட்டது. இதற்கு ஏற்ப பகலில் நன்கு வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் பயிரிட்டு இருந்த நெல் அறுவடை பணியும் நிறைவு பெற்றது. தொடர்ந்து வரும் மாதங்கள் கோடை காலம் என்பதால் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பாகற்காய், பஜ்ஜி மிளகாய், அவரக்காய் உள்ளிட்ட கோடை கால பயிர்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதில் பாகற்காய் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு உள்ளது. 

    கேரளாவில் வரவேற்பு இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இந்த மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு பகுதிகளில் நடைபெறும். இதேபோல் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு அடுத்தபடியாக சித்திரை விஷு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டும், கோடை வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பாகற்காய் பயிருக்கு கேரளாவில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பாகற்காய் பயிரிடப்படுகிறது. தொடர்ந்து பாகற்காய் அறுவடை செய்யப்பட்டு கேரளாவுக்கு தினமும் லாரிகளில் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாகற்காய் உயர் ரக விதைகள் கிடைப்பது தாமதமாகி வருகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.


    • தொழிலாளர்கள் அனைவருக்கும் விபத்து காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என கூறினர்.
    • தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நீலகிரி

    நீலகிரி மாவட்ட அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், பொதுநலசங்க நீலகிரி மாவட்ட தலைவரும் அ.தி.மு.க பிரமுகருமான நொண்டிமேடு கார்த்திக் கட்டிட தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்குமாரிடம் கோரிக்கை மனு வழங்கினார். பணியின் போது மரணம் அடையும் மற்றும் விபத்தில் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பிட்டு தொகை வழங்க வேண்டும். மற்றும் நடமாடும் கட்டுமானம் மருத்துவ ஊர்தி முறையாக செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 2-வது முறையாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவராக பொறுப்பேற்று உள்ள பொன்குமாருக்கு வாழ்த்துக்களை கூறி மனுவை வழங்கினார். மேலும் இ சேவை மையம் உருவாக்கி அதில் முறையான கட்டிட தொழிலாளர்கள் அனைவரும் அதில் பதிவு செய்யப்பட வேண்டும். அதில் இடம் பெறும் தொழிலாளர்கள் அனைவருக்கும் விபத்து காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என கூறினர். நீலகிரி மாவட்டத்தில் 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிறது. எனவே தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
    • கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நீலகிரி

    அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவும் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊட்டியில் இன்று 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
    • தொடர்ந்து உறைபனி கொட்டுவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

     ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும்.


    தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போா்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன.

    புற்கள் மற்றும் வாகனங்களில் வெண்மை யாக படா்ந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கி ன்றனா்.

    கடும் உறைபனி பொழிவு காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கடும் குளிா் நிலவி வருகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இந்த தட்பவெப்ப நிலையைக் அனுபவித்து செல்கிறார்கள்.

    இன்று 3-வது நாளாக நீலகிரியில் உறைபனி காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட நகர் பகுதியில் இன்று காலை 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து உறைபனி கொட்டுவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை.
    • பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி

    கோத்தகிரி அருகே தொட்டனி கிராமத்தில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது67). கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என செல்வமணி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தொட்டனிலிருந்து கனகாம்பை செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்ட முட்புதரில் காணாமல் போன பால்ராஜ் சடலமாக உடல் அழுகிய நிலையில் காணப்பட்டு கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடும் உறைபனி பொழிவு காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கடும் குளிா் நிலவி வருகிறது.
    • குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இந்த தட்பவெப்ப நிலையைக் அனுபவித்து செல்கிறார்கள்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும்.

    தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போா்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன.

    புற்கள் மற்றும் வாகனங்களில் வெண்மையாக படா்ந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனா்.

    கடும் உறைபனி பொழிவு காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கடும் குளிா் நிலவி வருகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இந்த தட்பவெப்ப நிலையைக் அனுபவித்து செல்கிறார்கள்.

    இன்று 3-வது நாளாக நீலகிரியில் உறைபனி காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட நகர் பகுதியில் இன்று காலை 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து உறைபனி கொட்டுவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×