என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் தீவிரம்"

    • பெண் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளமும் வழங்க வேண்டி உள்ளது.
    • 90 நாட்களில் பூண்டு அறுவடைக்கு தயாராகி விடும்.

    அரவேனு,

    கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் வெள்ளைப் பூண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    இதேபோன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்து கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளைப் பூண்டு அதிக காரத்தன்மைக் கொண்டதாகவும் , மருத்துவ குணம் கொண்டதுமாகவும் இருப்பதால் நீலகிரி பூண்டுக்கு எப்பொழுதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

    இதன் காரணமாக கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் முதல் போக விவசாயமாக மருத்துவ குணம் கொண்ட நீலகிரி பூண்டை தற்போது தங்களது தோட்டங்களில் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.

    இது குறித்து பூண்டு பயிரிட்டுள்ள கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறியதாவது:-

    முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் நீலகிரி பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2 ஆம் போகத்தில் அறுவடை செய்யும் பூண்டு விதைகாக பயன்படுத்தப்படுகிறது. விதைக்காக நீலகிரி பூண்டுகளே பெரிதும் பயன்படுத்தப்படுவதால், இரண்டாம் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு விதைகளை இந்தியா முழுவதிலும் இருந்து வந்து விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். பூண்டுக்கு என நிரந்தரமான கொள்முதல் விலை கிடைப்பதில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன் பூண்டு கிலோவுக்கு வெறும் 30 ரூபாய் மட்டுமே கிடைத்தது. இதனால் பூண்டு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்ததால், நிலத்தை டிராக்டர் எந்திரம் மூலம் உழுது பதப்படுத்த முடியவில்லை. தற்போது நிலத்தைப் பதப்படுத்தி, ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி மண்ணை இலகுவாக்கி, சால்களை அமைத்து, பூண்டு விதைகளை நடவு செய்து வருகிறோம். ஒரு ஏக்கர் பூண்டு பயிரிடும் செலவில், 10 ஏக்கரில் கேரட் பயிரிட முடியும்.

    முதல் போகத்தில் பூண்டு பயிர்கள் பயிரிட்டால் அறுவடை செய்ய 100 நாட்கள் தேவைப்படும். இரண்டாம் போகத்தில் 90 நாட்களில் பூண்டு அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது ஆண் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளமும், பெண் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளமும் வழங்க வேண்டி உள்ளது. மேலும் பூண்டு பயிருக்கு நோய் வராமல் தடுக்க பயன்படுத்தும் மருந்தின் விலையும் மிக அதிமாக உள்ளது. தவிர என்.சி.எம்.எஸ் மூலம் வழங்கப்படும் உரம் பூண்டுக்கு சிறந்ததாக உள்ளது. ஆனால் உரத்திற்கு பற்றாக்குறை நிலவி வருவதால், சரி வர கிடைப்பதில்லை. பெரும்பாலும் காளான் குடில்களில் வீணாகும் இயற்கை உரம் மற்றும் சாண உரத்தை வாங்கி பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வருகிறோம்.

    ஒரு கிலோ விதைப்பூண்டு 250 ரூபாய் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு பூண்டு பயிரிட 750 கிலோ விதைகள் தேவை. ஒரு ஏக்கரில் பூண்டு பயிரிட்டால் குறைந்த பட்சம் 500 கிலோ முதல் 600 கிலோ வரையும், நன்கு பராமரித்தால் 800 முதல் 900 கிலோ பூண்டை அறுவடை செய்ய முடியும். நீலகிரி மாவட்டத்தில் பூண்டு விதைகளை பாதுகாப்பாக வைக்கவும், அறுவடை செய்த பூண்டை, நல்ல விலை கிடைக்கும் வரைப் பாதுகாத்து வைக்கவும் எவ்வித வசதியும் இல்லை. எனவே தோட்டக்கலை வணிக வேளாண்மை துறையின் சார்பில் கிடங்கு அமைக்கவும், பூண்டுக்கு குறைந்த பட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×