என் மலர்
நீலகிரி
- இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிநீரை குடிநீராக மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர் மலை மற்றும் கல்லட்டி பகுதிகளுக்கு இடைப்பட்ட விவசாய நிலங்களில், பிரதம மந்திரியின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வந்தது.
தற்போது பணிகள் முடிவடைந்து, அழகர் மலைப்பகுதிக்கு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் வழங்குவதில்லை.
மாறாக இப்பகுதியில் பணிபுரியும் குடிநீர் பம்பு ஆபரேட்டர்களின் உதவியுடன் பைக்காரா கூட்டு குடிநீர் திட்ட குடிநீர், விவசாய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் எடுப்பதால் அழகர் மலை பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை என அழகர் மலை பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் குடிநீரை குடிநீராக மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கோடைகாலம் நெருங்கிவரும் இந்த நேரத்தில் குடிநீர் இப்படி விவசாய நிலங்களுக்கு அனுமதி இன்றி பயன்படுத்துவது பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கிரிக்கெட், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
- போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் கடந்த 6-ந் தேதி முதல் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், கிரிக்கெட், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் காது கேளாதோா் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில், ஓட்டப்பந்தய போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தியது பாா்ப்போரை பரவசப்படுத்தியது. இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
- முருக்கம்பாடி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.
- நடைபாதை, தெருவிளக்கு, முதியோர் உதவிதொகை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே படச்சேரி, முருக்கம்பாடி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்த குறை தீர்ப்பு முகாம் நடைெபற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
பந்தலூர் தாசில்தார் நடேசன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, திருஞானசம்பந்தம், வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திர குமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். சாலை, நடைபாதை, தெருவிளக்கு, முதியோர் உதவிதொகை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
- மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்று காலை கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் திருப்பூர் காங்கேயம் சாலையை சேர்ந்த மாணிக்கம் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் அத்தியூர்மட்டம் பகுதியில் நடத்திய சோதனையில், மதுவிற்றதாக அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (62) என்பவரை கைது செய்தனர்.
- பல கிராமங்களுக்கு மார்கெட் திடல் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
- தீயணைப்பு படையினர் மரக்கிளையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், பல கிராமங்களுக்கு மார்கெட் திடல் வழியாக அரசு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலையோரத்தில் நின்ற ராட்சத சோலை மரத்தின் கிளை முறிந்து சாலையின் குறுக்கே தொங்கியபடி கிடந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து, மரக்கிளையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மரக்கிளையை அகற்றியதும் போக்குவரத்து சீரானது. மரத்தில் இருந்து கிளை முறிந்து விழுந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனமும் அந்த வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
- காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோத்தகிரி பகுதியில் மக்கள் கூடும் முக்கியமான பகுதிகளில் கடந்த சில நாட்களாக 4 காட்டெருமைகள் சேர்ந்த கூட்டம் ஒன்று பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வலம் வருகிறது.
வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளை போன்று இவைகள் சாலைகளில் சுற்றி திரிவது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று காலை நேரத்தில் 4 காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து நீண்ட நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்து காட்டெருமைகள் கூட்டம் நகர்ந்து சென்ற பின்பு போக்குவரத்து சீரானது. எனவே காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அருண்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
- நகைச்சுவையாளர் மன்றம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதல்மைல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் அருண்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் நகைச்சுவையாளர் மன்றம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார்.
இந்த நிலையில் இவர் பள்ளியில் முறையாக கற்பித்தல் பணியை மேற்கொள்ளாமலும், கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து வருவதாகவும் அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் ஆளும் கட்சி பெயரை கூறி பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதையறிந்த தொடக்கக் கல்வி அலுவலர், கூடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரைகள் வழங்கியும், எச்சரித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஆசிரியர் அருண்குமாரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அருண்குமார், பள்ளியில் முறையாக கற்பித்தல் பணியை மேற்கொள்ளாமல் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரியிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததாகவும் புகார் வந்தது. அதன் பேரில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளனது.
- சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசிப்பதற்காக தினந்தோறும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.
- கேரளா, கர்நாடகாவில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமானோர் சுற்றுலா வந்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் இயற்கை அழகுடன் கூடிய வனப்பகுதியையும், எண்ணற்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும்.
இங்கு நிலவும் சிதோஷ்ண நிலை, சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசிப்பதற்காக தினந்தோறும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.
தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
அப்படி வருபவர்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலைரெயில், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். மேலும் இயற்கை அழகுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது சமவெளி பகுதிகளில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. இதன் காரணமாக பலரும் குளுமையான பிரதேசமான நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் 2 நாட்களாக ஊட்டி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.இதில் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமானோர் சுற்றுலா வந்துள்ளனர்.
அவர்கள் நேற்று தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானத்தில் அங்கும், மிங்கும் ஒடி ஆடி விளையாடி மகிழ்ந்தனர்.
இதுதவிர பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்துள்ளனர்.
அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற பகுதிளை சுற்றி பார்த்து வருகின்றனர். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர்-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகள் சாலைகளில் கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு, மலை உச்சியில் இருந்தபடி இயற்கை அழகினை கண்டு ரசிக்கின்றனர்.
- முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
- மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேனாடு ஊராட்சி தலைவர் ஆல்வின் கலந்து ெகாண்டார். கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்விழி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் டோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.
- மாவட்ட தலைவர் மோகன்ராஜ் திறந்து வைத்தார்.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாநிலத் தலைவர் அறிவுரையின்படி கொடியேற்றுதல் கட்சி அலுவலகங்கள் திறப்பு, பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டி அருகே எல்லநல்லி பகுதியில் பா.ஜ.க.வின் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகம் முன்பு கொடியேற்றப்பட்டு மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மண்டல் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பரமேஸ்வரன், ஈஸ்வரன் மற்றும் மகளிர் அணி தலைவர் திலகேஸ்வரி, எல்லநல்லி கிளை தலைவர் கார்த்திக் கண்ணன், பொது செயலாளர்கள் பெள்ளன், குரு மாதேஷ், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் வருண், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் தங்கதுரை உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
- 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.
ஊட்டி
குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மலர் அங்காடியில் 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. உடனே அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இதுகுறித்து குன்னூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிறுவனை பணிக்கு அமர்த்திய மலர் அங்காடி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதேபோன்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் 16 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அந்த சிறுவனை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் கலெக்டருக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
- கல்லூரி முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்.
- நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
ஊட்டி,
தமிழக அரசின் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பூபந்து ஒற்றையர் போட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மாணவர் பாரத்கண்ணன் 2-வது இடமும், சுஜித் 3-வது இடமும் பிடித்தனர்.இரட்டையர் பூபந்து போட்டில் பாரத்கண்ணன், சுஜித் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரி விளையாட்டு அலுவலர் ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் பாராட்டுகளை தெரிவித்தார்.






