என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சுகதேவுக்கும், சுஷ்மா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
    • காதலர் தினத்தன்று தனது திருணமத்தை நடத்த திட்டமிட்டார்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் செல்வக்குமார்-செல்வராணி தம்பதியர். இவர்களது மகன் சுகதேவ். இவர் இந்தியா ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுஷ்மா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் சுகதேவ் சாதிமறுப்பு திருமணம் முடிவு செய்து, காதலர் தினத்தன்று தனது திருணமத்தை நடத்த திட்டமிட்டார்.

    அதன்படி நேற்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. விழாவுக்கு புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தந்தை பெரியார் திராவிட இயக்க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பங்கேற்று சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இதில் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, விடுதலை சிறுத்ைதகள் கட்சி மாவட்ட செயலாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ், சி.பி.எம் மணிகண்டன், மணிகண்டராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
    • வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மற்றும் திருடிச் சென்ற செல்போன்களை மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

    இதன்படி ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் பே.டி.எம், மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை வங்கி மற்றும் பேடிஎம், நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவரிடம் கொடுக்கப்பட்டது.மேலும் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுவின் கார் டிரைவர், தவறுதலாக வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் பண மோசடி நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையம் மூலம் ஆன்லைன் பண மோசடி, லோன் ஆப் மூலம் மோசடி, மார்பிங், ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 67 வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 679 புகார்கள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நடந்த சைபர் கிரைம் வழக்குகளில் இதுவரை ரூ.6 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 232 பணம் மோசடி பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளது. இதில் ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 230 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர சுமார் ரூ.4 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரத்து 404 பணம் செல்லாமல் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. முடக்கப்பட்டுள்ள பணம் நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை தொலைந்து போன 129 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி, சப் இன்ஸ்பெக்டர்கள் கலைவாணி, யசோதா மற்றும் போலீசார் பிரவீன், கருணாகரன், ஜெகதீஸ், கண்ணன் உள்பட பலர் இருந்தனர்

    • குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பாடந்துறை மற்றும் தேவர் சோலை பேரூராட்சி கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த காட்டெருமைகளை வனத்திற்குள் விரட்டுவதற்கு வனத்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஒற்றை காட்டெருமை மட்டுமே கிராமங்களில் உலாவந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நீலகிரி ஓட்டல் ரெஸ்டாரண்ட் அசோசிசன் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
    • இறுதி போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் சர்வதேச பள்ளி விளையாட்டு மைதானத்தில் நீலகிரி ஓட்டல் ரெஸ்டாரண்ட் அசோசிசன் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்சியில் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் முன்னாள் தலைவர் முரளிகுமார் கொடியேற்றினார். பிரித்தி கிளாசிக்டவர் மேலாளர் ரசூல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்சியில் தாஜ், சலிவன்கோர்ட், ஜெம்பார்க், பிரித்திகிளாசிக்டவர், ஸ்டர்லிங், குல்னிமேனர், சன்சைன் உள்ளிட்ட 12 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டது. இதன் இறுதி போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. நிகழ்சியயை செல்வம், கனேஷ், சதிஷ், பிராங்களின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈஷா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
    • கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகிறார்.

    ஊட்டி:

    கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் அரசியல் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் சிவராத்திரியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

    இதற்காக வருகிற 18-ந் தேதி காலை புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர், பின்னர் கார் மூலம் பகல் 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். பின்னர் மீண்டும் விமானம் மூலம் மதுரையில் இருந்து கோவை வருகிறார். அங்கு ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் (19-ந்தேதி) காலை 9 மணி அளவில் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகிறார். அப்போது ராணுவ பயிற்சி அதிகாரிகள் மத்தியில் அவர் பேசுகிறார். இதன் பின்னர் மதியம் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் நீலகிரிக்கு முதல்முறையாக வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் தயார் நிலையில் இருக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் அன்றைய தினம் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் நேற்று முதல் ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • அர்ஷத் என்னும் குழந்தை இன்னோவா காரில் செல்ல வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் ஆசையாக கேட்டது.
    • அந்த குழந்தையை காப்பாளரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடப்புழு நீக்க மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்து கலெக்டர் அம்ரித் திரும்பி செல்ல முயன்றபோது அந்த அங்கன்வாடி மையத்தில் இருந்த அர்ஷத் என்னும் குழந்தை இன்னோவா காரில் செல்ல வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் ஆசையாக கேட்டது.

    சிரித்த முகத்துடன் கேட்ட மழலையை ஏமாற்ற விரும்பாத கலெக்டர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்துக் கொண்டு அங்கன்வாடி மையத்தில் இருந்து கொஞ்ச தூரம் காரில் சென்றார். இதையடுத்து அந்த குழந்தையை அங்கன்வாடி மைய காப்பாளரிடம் கொடுக்க முயன்றபோது குழந்தை போக மாட்டேன் என்றும் காரை நிறுத்தாமல் ஓட்ட வேண்டும் என்று கூறி அடம்பிடித்தது.

    இதையடுத்து குழந்தையிடம் சற்றுநேரம் கொஞ்சி பேசி சிரித்து விளையாடிய கலெக்டர், மற்றொரு நாள் வந்து வேறு இடத்துக்கு கூட்டி செல்வதாகவும் அங்கு யானை, புலி உள்ளிட்ட விலங்குகளை காண்பிப்பதாகவும் கூறி சமாதானப்படுத்தி அந்த குழந்தையை காப்பாளரிடம் கொடுத்துவிட்டு சென்றார். இந்த செயல் அங்கிருந்த பெற்றோர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது

    ஊட்டி

    தமிழக கேரள எல்லையையொட்டி கிண்ணக்கொரை கிராமம் உள்ளது. இங்குள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கிண்ணக்கொரை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களை இயற்கை முறையில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, தோட்டக்கலை துறைமூலம் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில், விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழிற்சாலையில் உறுப்பினர்கள் கடந்த மாதம் வினியோகித்த தேயிலைக்கு சராசரி விலையாக கிலோவுக்கு, ரூ.10 வழங்க முடிந்தது. ஆனால், இயற்கை விவசாயம் முழுமையாக மேற்கொண்டவர்களுக்கு, கிலோவுக்கு, ரூ.18 விலை வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ரவிசந்திரன் கூறுகையில், இயற்கை விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.18, இயற்கை மேற்கொள்வதாக எழுதி கொடுத்தவர்களுக்கு கிலோவுக்கு ரூ.14, இயற்கை விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • கடைகளுக்கான டெண்டர் கடந்த 10-ந் தேதி விடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
    • அ.தி.மு.க சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக கடைகளை கட்டியிருந்தது.இந்த கடைகள் இங்கு இருக்கக்கூடிய 120 சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவதாக நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கடைகளுக்கான டெண்டர் கடந்த 10-ந் தேதி விடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    ஆனால் இந்த அறிவிப்பை சாலையோர வியாபாரிகளுக்கு யாருக்கும் தெரிவிக்கவில்லை எனக் கூறி சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அ.தி.மு.க மாவட்ட செயலாளரை சந்தித்து டெண்டர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்தனர்.

    இதனை கேட்டறிந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் இது குறித்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் நகராட்சி ஆணையாளர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க சார்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தார்.

    • 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும்,
    • மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

    அரவேணு

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரவிடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வருகை புரிகின்றனர். குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டும், அதிக வேகம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து போலீசார் அரவேணு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் சிறப்பு சார்பு இன்ஸ்பெக்டர்கள் ஜான், ராஜேந்திரன், போலீசார்கள் அப்பாஸ், சுரேஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த 2 நாட்களில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.84 ஆயிரம் அபராதம் மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 3 வாகன ஓட்டிகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அபாயகரமான வளைவுகள், மலைப்பாதையில் எவ்வாறு வாகனங்களை முறையாக இயக்க வேண்டும், சமவெளி பகுதிகளில் வாகனங்களை இயக்கும் போது 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும், அபாயகரமான வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    • விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் பொது வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ் கோத்தகிரி தலைவர் விஜய் குமார் மற்றும் பெள்ளி தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஜெ. குமார், மண்டல் பொது செயலாளர்கள் ரமேஷ், கிருஷ்ணா குமார் மற்றும் மண்டல் அணி தலைவர்கள், கிளை தலைவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    • தேயிலை மற்றும் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
    • நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனி தாக்கம் அதிகமாக இருந்தது.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. மேலும் பனிமூட்டம் மற்றும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கியது. ஆனாலும் தேயிலை விளைச்சல் போதுமானதாக இருந்தது வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் முழுவதும் நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனி தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் அனைத்தும் கருகின.

    விவசாயிகள் கவலை இதற்கிடையில், பனியின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளைப் பாதுகாக்க, தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். மேலும் சிலர் செடி, கொடிகள் மற்றும் தோகைகளை தேயிலை செடிகள் மீது பரப்பி வைத்து தேயிலை செடிகள் கருகாமல் பாதுகாத்து வந்தனர்.

    ஆனாலும் கடும் பனிப்பொழிவு காரணமாக மிளிதேன், கேர்கம்பை, கீழ்கோத்தகிரி, ஒன்னட்டி, பனிப்பள்ளம், குடுமனை, பனஹட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துளள்னர்.

    மேலும் மழை பெய்தால் மட்டுமே மீண்டும் தேயிலை செடிகள் பசுமைக்கு திரும்பும் என்பதால் விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.

    இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கியது. பகலில் வெயில் அடித்தாலும் இரவில் உறைபனியின் தாக்கம் இருந்ததால், தேயிலை கொழுந்துகள், செடிகள் கருகின. இதனால் சாகுபடி குறைந்துள்ளதுடன், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும். இதற்கு 4 மாதங்கள் வரை ஆகும். எனவே மழைக்காக எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்தனர் 

    • மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
    • குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்த வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு நகர பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்துவது.

    கோத்தகிரி அரசு சித்தா பிரிவில் போதிய மருந்துகள் இல்லாமல் இருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி, ஆலோசகர் பிரவின், முகமது இஸ்மாயில், கிரேஸி, செயற்குழு உறுப்பினர்கள் விபின் குமார், சுரேஷ், லலிதா, சங்கீதா, திரைசா, ரோஸ்லின், ராதிகா, பியூலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் நன்றி கூறினார்.

    ×