என் மலர்
நீலகிரி
- ஆங்காங்கே சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது.
- காட்டுத்தீ பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது ஆங்காங்கே சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை கூடலூர் அருகே உள்ள வனத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு தீயில் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வனத்திற்குள் இருக்கும் சிறிய வகை உயிரினங்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.
காட்டுத்தீ பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.
- கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வூர் தூனேரி ஹட்டியில் செல்வவிநாயகர் திருக்கோவில் அருகில் அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் ஊர் பொதுச் செயலர் விசுவநாதன் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்தர் சமுதாயத்தின் முன்னேற்ற சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் குயின் சோலை, இட்டக்கல், அவ்வூர், ஹட்டியின் ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கேசலாடா செல்லும் சாலையில் பகல் நேரத்தில் 4 கரடிகள் உலா வந்தது.
- கரடிகளின் நடமாட்டதைக் கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரவேணு,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், குட்டிகளுடன் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா செல்லும் சாலையில் பகல் நேரத்தில் 4 கரடிகள் உலா வந்தது. சாலையில் உலா வந்த கரடிகளை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு, அதை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சற்று நேரம் அந்த பகுதியில் உலா வந்த கரடிகள் பின்னர் அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், கிராம மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளின் நடமாட்டதைக் கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
- சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர்.
ஊட்டி,
கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்
இந்த பூங்காவில் மலர்த்தோட்டம், அழகிய புல்தரை, ரோஜா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவைகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த பூங்கா பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நேரு பூங்காவையொட்டி புகழ்பெற்ற காந்தி மைதானமும், பூங்கா வளாகத்திலேயே ஆதிவாசி இன மக்களான கோத்தர் இன மக்களின் குல தெய்வமான பழமையான அய்யனார், அம்மனோர் கோவில் அமைந்துள்ளது
இந்த பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்கள் பங்கேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர்.
நேரு பூங்கா மற்றும் காய்கறி கண்காட்சியை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதை முன்னிட்டு பூங்காவை கோடை சீசனுக்குள் மேம்படுத்தி, தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இதன் ஒரு பகுதியாக பூங்காவை மேம்படுத்த கோத்தகிரி பேரூராட்சி மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூங்காவை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டும் பணி, கழிப்பிடங்களை புதுப்பிக்கும் பணி, சிறுவர் பூங்காவில் கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி, வண்ண விளக்குகளுடன் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி, நடைபாதைகளை சீரமைத்து வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றன.
இதனால் பூங்கா புதுப்பொலிவுடன் திகழ்கிறது. மேலும் பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் கவுண்டர் கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பூங்காவில் தரையில் வளர்ந்துள்ள புல்களை எந்திரங்கள் மூலம் வெட்டி சமன் செய்து, பசுமையாக மாற்ற ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு உள்ளது. 30 ஆயிரம் மலர் நாற்றுகள் மேலும் கோடை சீசனுக்காக பல்வேறு ரகங்களை சேர்ந்த 30 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
மலர் நாற்றுகளை நடவு செய்வதற்காக மண்ணை பதப்படுத்தி, மண்ணுடன் இயற்கை உரத்தை கலந்து மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
இதில் நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா கலந்துகொண்டு நாற்றுக்களை நடவு செய்து பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத் தலைவர் உமா நாத், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட பேரூராட்சி அலுவலர்கள், மன்ற உறுப்பினர்கள், பூங்கா ஊழியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு மலர் நாற்றுக்களை நடவு செய்தனர்.
இந்த பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிவடைந்து வரும் மார்ச் மாத தொடக்கத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதுடன், காய்கறி கண்காட்சிக்கு பூங்கா தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- யுஎன்சிஎஸ் 2013 முதல் கோத்தகிரியிலும், சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் 2018 முதல் கூடலூரில் செயல்படத் தொடங்கியது.
- குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றினை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி ஜெம்பார்க் கூட்டரங்கில், (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் பணி புரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கலெக்டர் அம்ரித் நினைவு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
(யுஎன்சிஎஸ்) 2013 முதல் கோத்தகிரியிலும், சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் 2018 முதல் கூடலூரில் செயல்படத் தொடங்கியது. யுஎன்சிஎஸ் மற்றும் எஸ்எஸ்டி பெண்களுக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம், கால்நடைகள் மற்றும் சுகாதாரம், கிராமங்களின் நிலையான முழுமையான வளர்ச்சி ஆகிய துறைகளில் செயல்படுகின்றன.
மேலும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கொரோனா தொற்றுநோய் மக்களுக்கு பெரும் சவால்களையும் இருந்தது. அச்சமயத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர்கள் பொது மக்களுக்காக அதிக அளவில் பணியாற்றி உள்ளனர். அங்கன்வாடி மையங்கள் மற்றும் நியாய விலைக்கடைகளுக்கு, பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்பட்டுள்ளது.
இது தவிர, 600-க்கும் மேற்பட்ட ஏழை பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளன. மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசால் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றினை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியின மக்களின் கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) மூலம் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து முன்னேற்ற பாதையில் என்ற புத்தகத்தினை வெளியிட்டு, பழங்குடியினர்களின் கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தலைவர் ஸ்வரன் சிங் யு.என்.சி.எஸ் முன்னாள் தலைவர் மற்றும் டாக்டர். ஸ்ரீதரன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி, சீனிவாசன் அறக்கட்டளை கள இயக்குநர் சுந்தர்ராஜன், ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்க கள இயக்குநர் சிங்கராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் டிரைவரை பாராட்டினர்.
- போலீசார் செல்போனை ஒப்படைத்தனர்.
ஊட்டி,
கூடலூர் நடு கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சோமசுந்தரம் பயணிகளுடன் கூடலூர் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பின்னர் பயணிகள் சென்ற பிறகு யாரோ விட்டுச் சென்ற செல்போன் கிடப்பதைக் கண்டார். இதைத்தொடர்ந்து சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் முன்னிலையில் போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் டிரைவர் சோமசுந்தரத்தை பாராட்டினர். பின்னர் செல்போன் காணாமல் போனது குறித்து கூடலூர் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த விஷ்ணு சூர்யா என்ற மாணவர் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் போலீசார் செல்போனை ஒப்படைத்தனர்.
- 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.
ஊட்டி,
கூடலூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சிவராஜ், ஆணையா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது:- நகரில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், செம்பாலா பள்ளி அருகே சாலையின் இருபுறமும் மாணவா்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக தடுப்புக் கம்பிகளை அமைக்க வேண்டும். என கூறினார். ஷகீலா (மு.லீக்) முதல் மைல் உள்ளிட்ட பகுதியில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அடிப்படைப் பணிகளை விரைந்து செய்யவும், எந்த பணி செய்தாலும் அது குறித்து உறுப்பினா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். வா்கீஸ் (காங்): மாக்கமூலாவில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என கூறினார். இதுபோல அனைத்து உறுப்பினா்களும் தங்களது வாா்டுகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனா். கூட்டத்தில் அடிப்படை தேவைகள் குறித்த 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 35 கிராம ஊராட்சிகள் உள்ளன.
- 15 ஊராட்சிகளின் துணைத்தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 35 ஊராட்சிகளில், துணைத்தலைவர்களாக உள்ளவர்கள் ஒன்றிணைந்து மாவட்ட அளவிலான கூட்டமைப்பு ஏற்படுத்தி, ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் 15 ஊராட்சிகளின் துணைத்தலைவர்கள் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில், ஊராட்சி துணைத்தலைவர்களின் அதிகாரங்கள், தங்களது ஊராட்சியில் நடந்த பணிகள், மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள், குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் குப்பையில்லா கிராமாக மாற்றிட எடுக்கப்பட்ட நடவடிக்கை, 100-நாள் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் மற்றும் ஊதியம் முழுமையாக பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், ஐல்ஜீவன் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு செயலாக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர்களான உல்லத்தி ராஜவேணி, கடநாடு ஆஷா, மேல்குந்தா வீரமலை, முள்ளிகூர் காமராஜ், தூனேரி சுப்பிரமணி, பேரட்டி சுகுணா, உபதலை செல்வகுமார் மூர்த்தி, கோத்தகிரி தேனாடு அம்சவேனி, கெங்கரை பாபு, குஞ்சப்பனை மஞ்சுளா, நெலாக்கோட்டை நவ்புல் ஹரீப், நஞ்சநாடு அருண்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவராக பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை மோகன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 5 பேர் கொண்ட கூட்டமைப்பு ஆலோசனை குழு ஏற்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
முன்னதாக சேரங்கோடு துணைத்தலைவர் சந்திரபோஸ் வரவேற்றார். முடிவில் தெங்குமரஹாட துணைத்தலைவர் செல்வம் நன்றி கூறினார்.
- 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் அமைந்துள்ள சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். 5 நாட்கள் நடைபெறும் இந்த தேர் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தேர் திருவிழா வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சோலூர் பேரூராட்சியின் சார்பில் தார்சாலை பராமரித்தல், 20-க்கும் மேற்பட்ட கழிவறைகள் பராமரிப்பு, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராஹீம்ஷா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் கௌரி, கோட்டாட்சியர் துரைசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஷத், துணைத் தலைவர் பிரேம்குமார், வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர். இந்தத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
- போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது22). கடந்ந 3 நாட்களுக்கு முன் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக தனது நண்பர் மனோஜ் என்பவருடன் வந்தார்.
கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது, கோர்ட்டின் பின்புறம் 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கோகுலை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டது. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் செல்போன் சிக்னல் ஊட்டி சுற்றுப்புற பகுதியில் காட்டியதால் நீலகிரி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இதனால் அவர்களைப் பிடிக்க நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்து தப்பிக்க முயன்ற குற்றவாளிகளை கோத்தகிரி பகுதியில் வைத்து நீலகிரி போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்னர் கோவை போலீசார் அவர்களை கோவைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் கொலையாளிகளை மடக்கிப் பிடித்த நீலகிரி இன்ஸ்பெக்டர்கள் மணிக்குமார், வேல்முருகன், கவிதா, சரவணகுமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், விஸ்வநாதன், வின்சென்ட், முகைதீன், போலீஸ்காரர்கள் பிரபு, பிரேம் ஆகியோரை பாராட்டி கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.
- பெரியார் நகர் பகுதிக்கு சென்ற காட்டு யானை வனப்பகுதிக்குள்ளும் காய்கறி தோட்டத்திற்குள் மாறி மாறி சுற்றி திரிந்தது.
- காட்டு யானையை விரட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மஞ்சூர் பகுதிக்கு வந்த காட்டு யானை அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் மற்றும் காய்கறி தோட்டங்களில் சுற்றித்திரிந்து வருகிறது. மேல்குந்தா பகுதியை சேர்ந்த குமார் என்ற விவசாயியின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கேரட் பயிர்களை தின்று மிதித்தும் நாசம் செய்தது. இரவு முழுவதும் அட்டகாசம் செய்த யானை அதிகாலையிலேயே தோட்டத்தில் இருந்து வெளியேறியது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மேல்குந்தா பகுதியில் இருந்து பெரியார் நகர் பகுதிக்கு சென்ற காட்டு யானை வனப்பகுதிக்குள்ளும் காய்கறி தோட்டத்திற்குள் மாறி மாறி சுற்றி திரிந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தொட்ட கம்பை சேரனூர் பகுதிக்குள் விழுந்து அங்கும் மழை காய்கறிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு யானையை விரட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் பட்டாசுகள் வெடித்தும் தகரங்களை தட்டியும் சத்தம் எழுப்பி வருகின்றனர். ஆனாலும் ஒற்றை காட்டு யானை என்பதால் அருகில் செல்ல பயந்து கொண்டு தூரத்திலிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டு யானையால் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து சீனிவாசன் கூறுகையில் கேரள மாநிலம் இணைய சீகை பகுதியில் இருந்து தனியாக வந்துள்ள இந்த காட்டு யானைக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம், இரவு நேரத்திற்குள் தோட்டத்திற்குள் வந்து கேரட் பயிர்களை சாப்பிட்டு விட்டு பகல் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இருந்தாலும் அந்த யானையை அடர்ந்த விரட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார்
- இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார், பின்னர் அங்கு தனக்கு உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் கொடுமை படுத்தி வருவதாகவும் தன்னை தமிழகம் மீட்க உதவுமாறு தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், சுற்றுலாத்துறை அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இததையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் தனது முயற்சியால் இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொண்டு சிவகாமியை மீட்டார்.
இதனையடுத்து சிவகாமி விமானம் மூலம் தமிழ்நாடு வந்தடைந்தார். பின்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.






