என் மலர்
நீலகிரி
- பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு கால சாந்தி பூஜை, 11 மணிக்கு உச்சி கால பூஜை, மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதியம் 2 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, மகா யாக பூஜை, மாலை 3.30 மணிக்கு மகா பிரதோஷ அபிஷேகம், 5.30 மணிக்கு தீபாராதனை, 6 மணிக்கு சுவாமி ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர். இதேபோல் ஊட்டி -குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலி சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது.
- வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,
ஊட்டி,
கூடலூர், முதுமலை, மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில் வறட்சியான காலநிலை தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது
கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தேன் வயல் பழங்குடி கிராம மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதிக்கு வந்த யானைகள் பாகற்காய் தோட்டம் மற்றும் வாழைதோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் இரவு முழுவதும் அங்கு நடமாடியதால் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்
எனவே வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது.இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.
- ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோ ரூ.200க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கொய் மலர்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால், அவர்களது பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வங்கியில் கடன் பெற்று தேயிலைக்குப் பதிலாக மாற்று விவசாயமான கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டனர்.
இந்த கொய் மலர்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைத்தது.
இருப்பினும் இந்த தொழில் விவசாயிகளுக்கு புதியதாக இருந்ததாலும், போதிய அனுபவம் இல்லாததாலும் கொய்மலர் சாகுபடி தொழிலில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் விவசாயிகள் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.
இதையடுத்து பெரும் செலவில் அமைக்கப்பட்ட குடில்கள் வீணாகாமல் தடுக்கும் வகையில் பெரும்பாலான விவசாயிகள் அந்தக் குடில்களில் மேரக்காய், பீன்ஸ், உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களை பயிரிட்டு அதன் மூலம் கணிசமான லாபம் ஈட்டி வந்தனர்.
தற்போது அவர்கள் பயிரிட்ட ஸ்ட்ராபெரி பழங்களுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ட்ராபெரி பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-
கூக்கல் தொரை, கேர்கம்பை, கீழ் கோத்தகிரி தூனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஸ்ட்ராபெரி பழங்களை கொய்மலர் குடில்களில் பயிரிட்டுள்ளனர்.
ஸ்ட்ராபெரி பயிரிடுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் இத்தாலி நாட்டில் இருந்து 700 நாற்றுக்கள் கொண்ட ஒரு பெட்டி நாற்றுக்களை 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், புனேவில் இருந்து நாற்றுக்கள் ஒன்றுக்கு ரூபாய் 10 வீதமும் வாங்கி வந்தோம்.
கொய்மலர் குடில்களில் உள்ள மண்ணை பதப்படுத்தி அந்த மண்ணுடன் மாட்டு புழு உரம், ஆடு மற்றும் மாட்டு சாணம் ,தசகாவியம் பஞ்சகாவியம் ஆகிய இயற்கை உரங்களைக் கலந்து மண்ணை நன்கு பதப்படுத்தி நாற்றுகளை பயிரிட்டோம். சொட்டுநீர் பாசனம் செய்து நாற்றுக்களை நன்கு பராமரித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்கு தயாராகின. தற்போது சாகுபடியும் அதிகரித்து வருகிறது.
குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.
இந்த நாற்றுக்களை உரிய முறையில் நன்கு பராமரித்தால் ஒரு ஆண்டு காலம் வரை பலன் தரும். கடந்த ஆண்டு கிலோ 350 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்தது.
தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெரி பழத்திற்கு 200 ரூபாய் கொடுத்து விளைநிலங்களுக்கே வியாபாரிகள் நேரில் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.தேவைக்கேற்ப கொள்முதல் விலை இன்னும் உயரும் வாய்ப்புள்ளது.
எனவே அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ராஜரத்தினம் தேயிலை தொழிற்சாலை அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
- 2 வட மாநில வாலிபர்கள் அங்கு வந்து, ராஜரத்தினத்துடன் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஊட்டி,
கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் (வயது 60). விவசாய கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கட்டபெட்டு இண்ட்கோ தேயிலை தொழிற்சாலை அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது குடிபோதையில் 2 வட மாநில வாலிபர்கள் அங்கு வந்து, ராஜரத்தினத்துடன் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். திடீரென ஆத்திரமடைந்த அவர்கள் கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து ராஜரத்தினத்தின் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அவர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட வெளி மாநில வாலிபர்களை தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ராஜன் பிஷோ கர்மா என்பவரது மகன் கிரிஷ் பிஷா கர்மா (19), மற்றும் ராஜு சுனார் என்பவரது மகன் மந்தீப் சுனார் (19) ஆகிய இருவர் என்பதும், இவர்கள் கூலித் தொழிலாளிகளாக பணி புரிந்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆயிரக்கணகான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடுகள் உள்ளன.
- 100 கி.மீ தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீத காடுகள் உள்ளன. முக்கியமாக முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனப் பகுதி, ஊட்டி வனப் பகுதி என ஆயிரக்கணகான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த ஆண்டு நீலகிரியில் 8 மாதங்கள் மழை பெய்தது. இதனால் திரும்பிய பக்கம் எல்லாம் பசுமையாக காட்சி அளித்தது. ஆனால் கடந்த மாதம் ஏற்பட்ட பனி பொழிவால் புல் வெளிகள், காடுகள் கருக தொடங்கியுள்ளது.
இதனால் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. இதில் வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை சாலையோரங்களில் வீசி விடுகின்றனர். இதனால் வனப்பகுதியில் எளிதில் தீ பரவுகிறது. வன விலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு ஏற்ப கூடலூர், சிங்காரா வனப்குதியில் காட்டுத்தீ பரவியது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் சாலையோரங்களின் இருபுறமும் 6 மீட்டர் அகலத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் தற்போது மும்முரமக ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சிங்காரா, மசினகுடி, தெப்பக்காடு, சீகூர் உள்ளிட்ட வன சரகங்களின் ரேஞ்சர்கள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சரகத்திற்கும் 100 கி.மீ தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுவதாகவும், இப்பணி சில வாரங்களில் நிறைவு பெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் கூறும் போது, நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வனப்பகுதியில் வீசக்கூடாது. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் எச்சரித்தனர்.
- கண்ணன் கடை ஆகிய பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
- குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது.
ஊட்டி,
கூடலூர் தாலுகா தேவாலா சுற்று வட்டார பகுதிகளான வாழவயல், செத்தகொல்லி, அரசு தேயிலைத் தோட்டம் எண்.3, முத்தையா செட், வட மூலா, கண்ணன் கடை ஆகிய பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. நெல்லியாளம் நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட இப்பகுதிகளில் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அடிப்படை வசதிகள் கேட்டு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகளை வாழவயல் பகுதி மக்கள் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் தங்கள் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகளிடம் வாழவயல் பகுதி மக்கள் முறையீட்டனர். மனுவை பெற்ற நகராட்சி பொறியாளர் வசந்தன், அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.
- சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பூஜையின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோத்தகிரி,
மகா சிவராத்திரியை முன்னிட்டு கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
குறிப்பாக கோத்தகிரி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற கடைவீதி மாரியம்மன் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு நேற்று மாலை அலங்கார பூஜையும், இரவு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த பூஜையில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் கமிட்டியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த பூஜையின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போன்று சக்திமலை பகுதியில் உள்ள சிவன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.
- பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
ஊட்டி,
கூடலூா் மாா்த்தோமா நகரில் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.கூடலூா் நகா் 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. தென் மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கூடலூா் வழியாகத்தான் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
இதற்காக இயற்கை சுற்றுலாவுடன் கூடிய பூங்கா அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூடலூா்-மைசூா் சாலையிலுள்ள மாா்த்தோமா நகரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியதன் பேரில் கோட்டாட்சியா் இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கூடலூா் வட்டாட்சியா் சித்தராஜ் மற்றும் வருவாய்த் துறையினா், நகா் மன்ற உறுப்பினா்கள் வெண்ணிலா சேகா், உஸ்மான், வா்கீஸ், தனலட்சுமி, ஆபிதா பேகம், சத்தீயசீலன் உள்ளிட்டோரும் சென்று பாா்வைட்டனா்.
- நீலகிரி மாவட்டத்தில் மேகமூட்டம் நிலவி வருவதால், ஜனாதிபதி திரவுபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டது.
- மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு அவர் வந்தார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அவர் காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மீனாட்சி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டார்.
தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, கோவிலில் உள்ள சிற்பங்களையும் வியந்து பார்த்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து கொண்டு அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து மதுரை பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கோவைக்கு புறப்பட்டார்.
நேற்று மாலை 3.10 மணிக்கு அவர் கோவை விமான நிலையம் வந்தார். அங்கும் அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் காரில் ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர், அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மாலையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.
அங்குள்ள லிங்க பைரவி தேவி, நந்தி சிலையை வழிபட்டார். தொடர்ந்து ஆதியோகி சிலை முன்பு நடந்த மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ஜனாதிபதி மீண்டும் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார். இரவு அங்கு தங்கினார்.
இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்று போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் மேகமூட்டம் நிலவி வருவதால், ஜனாதிபதி திரவுபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டது.
மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணியளவில் கோவை விமானநிலையத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
- பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
- அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
கூடலூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் கடந்த சில வாரங்களாக ஒரு காட்டு யானை ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த யானை ஈப்பன்காடு வழியாக தொரப்பள்ளி, புத்தூர்வயல் பகுதிக்குள் பகல் நேரத்திலும் முகாமிட்டு வருகிறது. இதனால் யானையை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் அடங்கிய 2 குழுக்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானை இருக்கும் இடத்தை டிரோன் கேமரா மூலம் கண்டறிந்து அருகில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- மோட்டார் பம்பை பறிமுதல் செய்தனர்.
- விவசாய மோட்டார் பம்பு திருடு போனது.
ஊட்டி
ஊட்டி அடுத்த காரபிள்ளு பகுதியை சேர்ந்தவர் சாந்தி. விவசாயியான இவரது தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவசாய மோட்டார் பம்பு திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் உல்லத்தி அம்மநாடு பகுதியை சேர்ந்த போஜன் (வயது 48), மணி என்கிற சுரேஷ் என்பதும் விவசாய மோட்டார் பம்பு திருடியது இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, போஜன் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்பை பறிமுதல் செய்தனர்.
- பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கோத்தகிரி காம்பாய்க்கடை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உலா வருகிறது. இரவு நேரங்களிலும் அந்த காட்டெருமைகள் சுற்றி வருவதால் சாலையில் வாகனயொட்டிகள் செல்ல முடிவது இல்லை. பின்னர் முகாமிட்டு இருந்த காட்டெருமை கூட்டம் அங்கிருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. எனவே வனத்துறையினர் காட்டெருமைகள் ஊருக்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






