search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி அதிகரிப்பு
    X

    கோத்தகிரியில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி அதிகரிப்பு

    • ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோ ரூ.200க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • கொய் மலர்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது.

    கடந்த பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால், அவர்களது பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வங்கியில் கடன் பெற்று தேயிலைக்குப் பதிலாக மாற்று விவசாயமான கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டனர்.

    இந்த கொய் மலர்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைத்தது.

    இருப்பினும் இந்த தொழில் விவசாயிகளுக்கு புதியதாக இருந்ததாலும், போதிய அனுபவம் இல்லாததாலும் கொய்மலர் சாகுபடி தொழிலில் தொய்வு ஏற்பட்டது.

    இதனால் விவசாயிகள் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து பெரும் செலவில் அமைக்கப்பட்ட குடில்கள் வீணாகாமல் தடுக்கும் வகையில் பெரும்பாலான விவசாயிகள் அந்தக் குடில்களில் மேரக்காய், பீன்ஸ், உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களை பயிரிட்டு அதன் மூலம் கணிசமான லாபம் ஈட்டி வந்தனர்.

    தற்போது அவர்கள் பயிரிட்ட ஸ்ட்ராபெரி பழங்களுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து ஸ்ட்ராபெரி பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    கூக்கல் தொரை, கேர்கம்பை, கீழ் கோத்தகிரி தூனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஸ்ட்ராபெரி பழங்களை கொய்மலர் குடில்களில் பயிரிட்டுள்ளனர்.

    ஸ்ட்ராபெரி பயிரிடுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் இத்தாலி நாட்டில் இருந்து 700 நாற்றுக்கள் கொண்ட ஒரு பெட்டி நாற்றுக்களை 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், புனேவில் இருந்து நாற்றுக்கள் ஒன்றுக்கு ரூபாய் 10 வீதமும் வாங்கி வந்தோம்.

    கொய்மலர் குடில்களில் உள்ள மண்ணை பதப்படுத்தி அந்த மண்ணுடன் மாட்டு புழு உரம், ஆடு மற்றும் மாட்டு சாணம் ,தசகாவியம் பஞ்சகாவியம் ஆகிய இயற்கை உரங்களைக் கலந்து மண்ணை நன்கு பதப்படுத்தி நாற்றுகளை பயிரிட்டோம். சொட்டுநீர் பாசனம் செய்து நாற்றுக்களை நன்கு பராமரித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்கு தயாராகின. தற்போது சாகுபடியும் அதிகரித்து வருகிறது.

    குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.

    இந்த நாற்றுக்களை உரிய முறையில் நன்கு பராமரித்தால் ஒரு ஆண்டு காலம் வரை பலன் தரும். கடந்த ஆண்டு கிலோ 350 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்தது.

    தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெரி பழத்திற்கு 200 ரூபாய் கொடுத்து விளைநிலங்களுக்கே வியாபாரிகள் நேரில் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.தேவைக்கேற்ப கொள்முதல் விலை இன்னும் உயரும் வாய்ப்புள்ளது.

    எனவே அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×