என் மலர்
நாமக்கல்
- தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது.
- ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் முட்டைகள் மிக முக்கிய உணவு பொருளாக இடம் பிடித்துள்ளது.
நாளை அக்டோபர் (13-ந் தேதி) உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வரும் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.
முட்டையின் நன்மைகள் குறித்து அதில் உள்ள சத்துக்கள் மற்றும் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவாக முட்டை திகழ்கிறது. புரதச்சத்து அதிகம் இருக்கும் கோழி முட்டை ஏற்றுமதியில் இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முதலிடம் வகிக்கிறது.
குறைந்த விலையில் கிடைக்கும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு முட்டை மட்டும் தான், வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஊட்டச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி 12, பி 2, பி 5, இ கோலின், சியாந்தீன் போன்ற கனிம சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த முட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்த முட்டை ஏற்றுமதிக்கு சொந்தமான நாமக்கல் மாவட்ட மக்களை பெருமையடைய செய்துள்ளது என்றால் மிகையாகாது.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 1100-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த முட்டை கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகள் தரமானதாக கிடைப்பதால் தமிழகத்தின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகள், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் முட்டைகளுக்கு தனி சிறப்பு உண்டு என்பதால் உலகம் முழுவதும் இந்த முட்டைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. இதில் உள்ளூர் தேவைக்கு போக மீதம் உள்ள 40 லட்சம் முட்டைகள் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்தில் உள்ள நாமக்கல் மண்டலத்தில் இருந்து உற்பத்தியாகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல்களில் கண்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல், நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. இதில் இரண்டு கரு அடங்கிய முட்டைகள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த முட்டைகளில் சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். இதனால் வெளிநாடுகளில் இந்த முட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அனைத்து ஓட்டல்களில் மற்றும் வீடுகளில் முட்டைகள் மிக முக்கிய உணவு பொருளாக இடம் பிடித்துள்ளது. குறிப்பாக ஆம்லெட், ஆப்பாயில், முட்டை தோசை, முட்டை குழம்பு, முட்டை புரோட்டா, முட்டை பிரியாணி என பல்வேறு வகையில் அனைவரும் விரும்பும் வகையில் உணவு பொருளாக இந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழிக்குஞ்சுகள் பிறந்து ஒரு நாள் குஞ்சுகளாக பண்ணையில் விடப்படுகிறது. தொடர்ந்து அதற்கு தீவனம் கொடுத்து வளர்த்து 8 வாரங்களில் முட்டையிடும் கோழிகளாக மாறுகின்றன. இந்த கோழிகள் அதிகபட்சமாக 72 வாரங்கள் முட்டையிடுகிறது. பின்னர் கறிக்காக குறைந்த விலையில் இந்த முட்டை கோழிகள் விற்கப்படுகிறது. முட்டை கோழிகளுக்கு சத்து வாய்ந்த மக்காச்சோளம், ராகி மாவு, தானியங்கள் அரைத்த மாவு உணவாக வழங்கப்படுகிறது.

கோழிப்பண்ணை
நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோழிகளை வளர்க்க தீவனம் போடுவது, தண்ணீர் கொடுப்பது, கோழிகள் போடும் முட்டைகளை எடுத்து அட்டையில் அடுக்குவது, லாரியில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்புவது, கோழிப்பண்ணைகளை பராமரிப்பது, சுத்தம் செய்வது, முட்டைகளை வாகனங்களில் எடுத்து செல்வது, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் இருந்து தீவனங்கள் கொண்டு வருவது, முட்டைகளை உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என இந்த தொழிலை நம்பி 5 லட்சத்திற்கும் அதிகமாக தொழிலாளர்கள் உள்ளனர். இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
ஏற்கனவே நாமக்கல்லில் முட்டை உற்பத்தி 6 கோடியாக இருந்த நிலையில் தற்போது தீவன விலை உயர்வால் பல பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் முட்டை உற்பத்தி 5 கோடியாக குறைந்துள்ளது. இதனால் பலர் பண்ணைகளை மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்றதால் இதனை நம்பி இருந்த பலர் வேலை இழந்துள்ளனர்.
எனவே கோழி தீவனத்தை மானிய விலையில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும், வங்கி கடன்களை நிபந்தனையில்லாமல் வழங்கி சிறப்பு வாய்ந்த இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பது கோழிப்ப ண்ணையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்கிறது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் தற்போது முட்டை விலை 510 காசுகளாக உள்ளது. வழக்கமாக முட்டை விலை புரட்டாசி மாதங்களில் குறைவாக இருக்கும், ஆனால் இந்தாண்டு தற்போதும் முட்டை விலை குறையவில்லை. நிர்ணயிக்கும் விலையில் இருந்து மைனஸ் விலை இல்லாமல் விற்பனை செய்ய பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினசரி 1 கோடி முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் புரட்டாசி மாதத்திலும் முட்டை விலை அதிகரித்தே காணப்படுகிறது.
- போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
- மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு வளையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனை மேற்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி 2 கார்களில் வந்த அமலாக்கத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மணல் சேமிப்பு கிடங்கில் சோதனை நடத்தினர்.
ஆற்றில் இருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. எவ்வளவு மணல் விற்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
35 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் மணல் சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றில் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
மேலும் போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மணல் வழங்கப்பட்ட விபரம், ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வரப்பட்டது, தற்போது சேமிப்பு கிடங்கில் இருப்பு விபரம், எந்தெந்த வாகனங்களுக்கு மணல் விற்பனைக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை செய்தனர்.
அதேபோல் அரசு நிர்ணயித்த 3 யூனிட் மணலுக்கு 7,950 ரூபாய் தொகையை விட கூடுதலாக 6,500 ரூபாய் எவ்வளவு பேரிடம் வாங்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள என்.புதூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை ஏலம் எடுத்த நபர்கள் எவ்வளவு மணல் அள்ளிச் சென்றுள்ளனர் என்பது குறித்து நேற்று காலை முதல் மதியம் வரை அமலாக்கத்துறையினர் ஆய்வு நடத்தி குழிகளை அளந்து பார்த்து மதிப்பிட்டனர்.
தொடர்ந்து மாலை 4 மணியளவில் 7 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் 9 பேர், 2 குழுக்களாக பிரிந்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களுடன் கோரக்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட அளவீட்டாளர்கள், திருச்சி பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கீதா ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது ஆற்றுக்குள் இறங்கி அரசு அனுமதித்த அளவை விட முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? மணல் அள்ளிய குழிகளின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை சுமார் 2 மணி நேரம் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்து அதனை குறித்துக் கொண்டனர். பின்னர் 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த சோதனையின் போது 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவாரியை சுற்றி துப்பாக்கியுடன் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
கடந்த முறை அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து மணல் குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
- நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி முன்பு தொடங்கி மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் பள்ளியை பேரணி வந்தடைந்தது.
பேரணியில் பெண்குழந்தை களை பாதுகாப்போம், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்வோம். பாலின தேர்வு அடிப்படையில் கருவில் பெண் குழந்தைகள் அழிவதை தடுக்க வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்ட மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர். இப் பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி, உதவி தலைமை ஆசிரியர் கற்பகம், போக்குவரத்து ஆய்வாளர் ஷாஜஹான், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, லட்சுமி, பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
- அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அண்ணா நகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் இடத்திற்கு தற்போது கம்பி வேலி அமைத்து வழக்கமாக செல்லும் பாதை மறிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உடனடியாக அந்த கம்பி வேலியை அகற்ற வலியுறுத்தி ஜேடர்பாளையம்- திருச்செங்கோடு பிரதான சாலையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
நாமக்கல்:
நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் கோட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 12-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுஉள்ளது.
- பரமத்திவேலூர் நோக்கி 15- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்தது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த கோரை புற்கள் குவியலாக முளைத்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர் பாளையத்திலிருந்து மினி பஸ் ஒன்று பரமத்திவேலூர் நோக்கி 15- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்தது. மினி பஸ் கொந்தளம் அருகே உள்ள கருக்கம்பாளையத்தில் சென்றபோது எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் மினி பஸ்சை இடது புறமாக திருப்பினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த கோரை புற்கள் குவியலாக முளைத்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தது. இதனால் உள்ளே இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பெரியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் அடியில் மாட்டிக் கொண்டு அலறினர். அவர்களது அலறல் கேட்டு அங்கு விவசாயம் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் மினி பஸ் டிரைவர் சந்தோஷ், பாண்டமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் பொன்மலர்பாளையத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி (17), தேசிகா (15), உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் சந்தோஷ், மாணவி ஸ்ரீமதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பார்மசி பயிலும் கொந்தளத்தை சேர்ந்த மகிமா(21), லலிதா(42), சின்னத்தம்பி(21), கனகா(26), ஜோதி(26), அண்ணாமலை(32), மற்றும் நாகம்மாள் (21) ஆகியோர் லேசான காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசாரால் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் என 11 போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
- ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18-ந் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக 5000 ரூபாய் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் என 11 போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18-ந் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக 5000 ரூபாய் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்தும் நபர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, ஜி.எஸ்.டி. முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதார் கார்டு அல்லது ஓட்டுனர் உரிமம் 2 நகல்கள் எடுத்து வர வேண்டும். ஏல வாகனங்களை அக்டோபர் 17-ந் தேதி காலை 10:30 மணி முதல் பார்வையிடலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
- இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், அதன் சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஏலத்தில் அரசு விதிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க தகுதிச் சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏலத்தில் பங்கேற்று கழிவு பொருட்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகை முழுவதையும் மற்றும் அப்பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி. தொகையுடன் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
- சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
- வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்த் (27).
தற்கொலை
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாததிற்கு முன்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து பொத்தனூருக்கு வந்து விட்டார்.
வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அரவிந்த் வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அரவிந்த் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அரவிந்தை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவ மனை யில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
ரூ.5 லட்சம்
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 72.32 குவிண்டால் எடை கொண்ட 237 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.33-க்கும், சராசரி விலையாக ரூ.83.60-க்கும் என ரூ.5 லட்சத்து 35ஆயிரத்து 683-க்கு ஏலம் போனது.
- பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள 4 ரோடு அருகே நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
- அப்போது அங்கு வேகமாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்ததில் 37 மூட்டையில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள 4 ரோடு அருகே நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வேகமாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்ததில் 37 மூட்டையில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தி வந்த பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த தனபால் மகன் பொன்னர் (6), குப்புச்சிபாளையத்தை சேர்ந்த அப்பாவு மகன் சக்திவேல் (47 )ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி கடத்தி வந்த டெம்போ வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர் பகுதியில் அரிசி வியாபாரிகள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ரேஷன் அரிசி வாங்கி வைத்திருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களை அணுகி அவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவ டிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
- உச்சநீதிமன்ற உத்தரவின்படி குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளன.
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக குடும்பத்துடன் நிரந்தரமாக வசித்து வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவின்படி குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக குடும்பத்துடன் நிரந்தரமாக வசித்து வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தில் உள்ள ஒரு சிலர் இங்கேயும் தான் சார்ந்த மாநிலத்திலும் ஒரு சிலர் வசித்து வருகிறார்கள். இதில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கிடவும், தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது விவரங்களை முழுமையாகப் பெற்று அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட அவர் சார்ந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வசித்து வருபவர்கள் உரிய படிவத்தினைப் பூர்த்தி செய்து தொடர்புடைய தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






