என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு காவிரி ஆற்றுக்கு செல்லும் அக்ரஹாரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அனிச்சம்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு காவிரி ஆற்றுக்கு செல்லும் அக்ரஹாரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் ஒன்றரை யூனிட் மணல் அள்ளிச்சென்ற பரமத்திவேலூரை சேர்ந்த சிங்காரம் (30) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற சத்யா(37). இவரது மனைவி மாதேஸ்வரி(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    காணவில்லை

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது மனைவி மாதேஸ்வரி பார்த்திபனுக்கு இரவு முழுவதும் போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி பல்வேறு இடங்களில் கணவரை தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    கிணற்றில் பிணமாக மீட்பு

    இந்நிலையில் நேற்று பார்த்திபன் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிணற்றுக்குள் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர் மாதேஸ்வரிடம் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற மாதேஸ்வரி கணவன் உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்து மோகனூர் போலீசில் மாதேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பார்த்திபன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமார் (41) குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.
    • ரியல் எஸ்டேட் தொழில் எதுவும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு ஈஸ்வரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (41) தேங்காய் மண்டி வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது நண்பரான திருச்செங்கோடு அருகே மொளசியை சேர்ந்தவர் விஜயகுமார் (41) குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.

    ரியஸ் எஸ்டேட் தொழில்

    விஜயகுமார் மற்றும் அவரது மனைவி கவிதா (37) மற்றும் உறவினரான ஆண்டலூர்கேட்டை சேர்ந்த சுரேஷ் (45) ஆகிய 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், ஈஸ்வரனையும் கூட்டாக தொழில் செய்ய அழைத்துள்ளனர்.

    இதையடுத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பல தவணைகளாக ஈஸ்வரன் ரூ.17 லட்சம் பணத்தை விஜயகுமார் உள்ளிட்டவர்களிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டல்

    இதனிடையே ரியல் எஸ்டேட் தொழில் எதுவும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு ஈஸ்வரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன் மேற்கொண்டு பணம் தராமல் இதுவரை கொடுத்த ரூ.17 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு 3 பேரும் பணத்தை திருப்பி தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஈஸ்வரன் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் சோழிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் பொத்தனூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா (26). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் -மனைவியிடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தராஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார் .இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் தனியாக வீட்டில் இருந்த போது மனைவியின் துப்பட்டாவை எடுத்து விட்டத்தில் மாட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இன்று காலை அவரது உறவினர்கள் பார்த்த போது கோவிந்தராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
      • இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbnamakkal.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்பட உள்ளது.

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

      இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbnamakkal.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்பட உள்ளது. இதற்கான எழுத்துதேர்வு டிசம்பர் மாதம் 24-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பட்டய பயிற்சி தேர்ச்சி ஆகும். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி இணைய முகவரியில் விண்ணப்பித்து, பயிற்சியில் சேர்ந்து உள்ளவர்களும், இப்பணிக்கு உரிய சான்று மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை கொண்டும், நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

      இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

      • காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது.
      • இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.

       பரமத்திவேலூர்:

      பரமத்திவேலூர் பகுதிகளில் காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.

      போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பரமத்திவேலூரை சேர்ந்த ராஜலிங்கம் ( 55), இவரது மகன் மணிகண்டன் (24 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார், 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 45 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

      • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
      • இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர் பாண்டமங்கலம் வெங்கரை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங்குறிச்சி, குப்பிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசிராமணி, சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், சின்ன சோளி பாளையம், குமாரசாமி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தது.

      இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

      • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
      • இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

      பரமத்திவேலூர்:

      பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

      வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.100-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது.

      இந்தநிலையில் கார்த்திகை தீபத்திருவிழா, கிருத்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      • அனைத்தும் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
      • பேனர் வைத்திருந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      பரமத்திவேலூர்:

      முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மன்றம், ெஜயலிலதா பேரவை, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப பிரிவு, மீனவரணி, நெசவாளர், இலக்கியம், அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் அணி உள்ளிட்ட அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணிகளுக்கு மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் நியமித்து கட்சியை பலப்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

      சமீபத்தில் மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது.

      இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் மற்றும் எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மோகனூர் ஒன்றியம் கீழ்பாலப்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று புரட்சித் தமிழர் பேரவை சார்பில் என குறிப்பிட்டு பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.

      இதை கட்சி நிர்வாகிகள் பலர் பார்த்து விட்டு சென்றனர். கட்சி தலைமை இப்படி ஒரு பேரவையை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் புரட்சித் தமிழர் பேரவை என பேனர் வைத்திருந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      எம்.ஜி.ஆர்-க்கு எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதாவுக்கு ஜெயலலிதா பேரவை என்பது போல் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பேரவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதா? என அக்கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

      • புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரியிடம் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
      • கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் சென்று வருகிறது.

      பள்ளிபாளையம்:

      நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் வழித்தடத்தில் விரிவுபடுத்தப்பட்ட புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரியிடம் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பள்ளிபாளையத்தை சேர்ந்த பஸ் உரிமையாளர் பி.எஸ்.கே. என்கிற கந்தசாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து பள்ளிபாளையம் பஸ் நிலையம் வரை மேம்பாலம், சாலை விரிவாக்கம் பணி நடந்து வந்ததால் கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் சென்று வருகிறது. தற்போது ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி முதல் ஆர்.எஸ். பிரிவு வரை சாலை விரிவாக்கம் பணி முடிந்து விட்டது. பணிகள் முடிக்கப்பட்ட இந்த புதிய சாலையில் வாகனங்கள் சீராக சென்று வர முடியும். இதுபற்றி நகராட்சி தலைவர், அதிகாரியிடம் விரிவுபடுத்தப்பட்ட புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போது விரைவில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

      • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
      • அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

      அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

      இதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

      இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

      • அத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார்.
      • இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் மதிய உணவு, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை பற்றி கேட்டறிந்தார்.

      ராசிபுரம்:

      நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் மதிய உணவு, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை பற்றி கேட்டறிந்தார்.

      பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்குத் தேவையான குறைகளையும் நிறைகளையும் கேட்டறிந்தார். அப்போது பள்ளியில் கழிப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளதாகவும் அதற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

      இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரூராட்சி மூலமாக கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

      ×