என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • இந்த ஏலத்துக்கு அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 290 முதல் ரூ.7 ஆயிரத்து 419 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 219 முதல் ரூ.5 ஆயிரத்து 609 வரையிலும் ஏலம் போனது. இவை ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்ப டுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.
    • இந்த விளையாட்டு போட்டிகள் 17, 18, 21 வயதுக்குட்பட்ட பிரிவுகள் ஆகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்ப டுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். இந்த விளையாட்டு போட்டிகள் 17, 18, 21 வயதுக்குட்பட்ட பிரிவுகள் ஆகும்.

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் -2023 தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    கபடி

    இப்போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 5,000 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடத்தப்பட உள்ள விளையாட்டுகள் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால் , பளுதூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், மல்லக்கம்பு, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிசுடுதல், ஹாக்கி, களரிபயட்டு, கபடி, ஜூடோ, கோ-கோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, கட்கா, யோகாசனம், டென்னிஸ், தாங்தா, சிலம்பம் உள்ளிட்டவைகள் ஆகும்.

    தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

    பங்கேற்பதற்கு தகுதி பெற விளையாட்டு வீரர்கள் வயது சரிபார்ப்பு (01.01.2005 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்) செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்கவேண்டும்.

    கல்விச்சான்றிதழ்

    ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ் ( 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப் பட்டது) ஆகியவை ஆகும்.

    தமிழ்நாடு அணிகளில் இடப்பெறுவதற்கான தேர்வு குறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை நேரில் அணுகவும். பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இதில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் -வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஒரு சில மளிகை கடைகள், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒட்டமெத்தை பகுதியில் உள்ள டீ கடை, மற்றும் ஆர்.எஸ். சாலையில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பெட்டி கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து 5½ கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    • பாலஅய்யப்ப சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், செட்டியார் தெருவில் எழுந்தருளியுள்ள பாலஅய்யப்ப சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த வருடமும் பால அய்யப்ப சாமி கோவிலில் கணபதி ஹோமும், 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாலஅய்யப்ப சாமி அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலஅய்யப்பசாமி கோவில் பவுர்ணமி குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

    • ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ராஜ்குமார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜ்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    மூளை சாவடைந்து உறுப்பு தானம் செய்த அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9.10 மணிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா, திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மதுரா செந்தில் மற்றும் போலீசாரால் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக மேலகவுண்டன்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

    • ராசிபுரம் பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

     நாமக்கல்:

    ராசிபுரம் பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ராசிபுரம் வட்டம், காட்டூர் அணைக்கும் கரங்கள் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு இப்பள்ளிக்கு அரசால் வழங்கப்படும் நிதி ஆதாரங்கள், செலவினங்கள் பயன்பெறும் குழந்தைகள், குழந்தைகள் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து சேந்தமங்கலம் வட்டம் உத்திரகிடி காவல் ஊராட்சி, நாச்சிபுதூர் காலணியில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரவியல் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) மகிழ்நன், தாசில்தார் (தேர்தல்கள்) திருமுருகன், ராசிபுரம் தாசில்தார் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றைக் பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பணியிட விபத்து மரண உதவித்தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,750 மதிப்பீட்டில் காதொலி கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்டவை என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.93.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் கீழ் உலகவங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், சமூகத் தரவு பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள், கையேடுகளை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்
    • அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.

     பரமத்திவேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நெல்-(சம்பா), சோளம், நிலக்கடலை, கரும்பு, சிறிய வெங்காயம், வாழை, மரவள்ளி, தக்காளி உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம். விவசாயிகள் முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல் மற்றும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5 சதவிகிதம் பிரிமியமும், இதர குறுகிய காலப்பயிர்களுக்கு 1.5 சதவிகித பிரிமியமும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அருகிலுள்ள கபிலர்மலை வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

    அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள், அந்த கிராமத்தில் எந்தெந்த பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது, காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி, விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை விவசாயிகள் தமிழக அரசின் விவசாயிகளுக்கான சிறப்பு செயலியான உழவன் செயலியில் தங்களது கைப்பேசியிலியே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி மற்றும் தேர்வு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    2023-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச நேரடி விரைவுப் பயிற்சி மற்றும் திருப்புதல் தேர்வு, திங்கட்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பாடத் திட்டத்திற்கான முழுதேர்வு வியாழக்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

    பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
    • பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை மோகனூர் ரோடு சாலையில் சின்னு நகர் அமைந்துள்ளது.

    இந்த நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த பல வருடங்களாக பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பயன்பாடு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அங்கு பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்ோது பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இதனால் பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு கூறுகையில், சின்னு நகரில் பேரூராட்சி பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் தற்போது தனி நபர்கள் ஆக்கிரப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பழைய பைல்களை ஆய்வு செய்து வருகிறோம். வேலூர் பேரூராட்சியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்.

    பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை ஆக்கிரப்பு செய்தவர்கள் தாங்களாக பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எந்தவொரு ஆக்கிர மிப்புக்கும் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காது என்றார்.

    • டிசம்பர் மாதம் 9-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
    • மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்கு களுக்கு மேல்முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரு மான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சேந்தமங்கலம் நீதிமன்றம் மற்றும் குமார பாளையம் நீதிமன்றத்திலும் வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த கோர்ட்டில் விசாரிக்கப்படும்.

    மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்கு களுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள், நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் மக்கள் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ராஜம் தியேட்டர் அருகே உள்ள ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு ரோட்டை கடந்து செல்ல வேண்டி ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    இது குறித்த புகாரில் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஷேர் ஆட்டோ டிரைவர் பாபு என்பவரை கைது செய்தனர்.

    ×