என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாகை மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வேலைக்காக சென்றவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

    இதில் பலருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு வருவதால், நாகை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து வேதாரண்யம் அருகே உள்ள செம்போடைக்கு வந்த சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 28 வயது நபர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

    இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. இதில் 59 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாராயம் கடத்தி வந்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 1,000 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    குத்தாலம்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு காரில் சாராயம் கடத்தி வரப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தலைமையிலான போலீசார், மயிலாடுதுறை ரெயிலடி அருகே மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் வகையில் மொபட்டில் வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் மொபட்டின் பின்னால் வந்த காரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் 1,000 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து மொபட்டில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், செம்பனார்கோவில் அருகே உள்ள முடிகண்டநல்லூர் ராஜபாளையம் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் பாபுகண்ணன்(வயது 27) என்பதும், சாராயம் கடத்தி வந்த காரை ஓட்டி வந்தது இவரது தம்பி சந்திரன்(21) என்பதும் தெரிய வந்தது. சாராயம் கடத்தி வந்த காருக்கு முன்னால் பாபுகண்ணன் மொபட்டில் சென்று போலீசார் யாரும் வருகிறார்களா? என பார்த்து வந்தது தெரிய வந்தது.

    அண்ணன்-தம்பிகளான இவர்கள் இருவரும் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை கடத்தி மயிலாடுதுறை ரெயிலடி தூக்கணாம் குளம் பகுதியில் உள்ள ஒரு சாராய வியாபாரிக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு கண்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1000 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
    கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ராதா மங்கலம் எறும்புகன்னியில் சாராயம் விற்ற முருகையன் (வயது45), தெற்காலத்தூரில் சாராயம் விற்ற சாரதா (66), கடம்பர வாழ்க்கை பகுதியில் சாராயம் விற்ற மாரியம்மாள் (55), சிக்கல் அய்யனார் தோப்பில் சாராயம் விற்ற கார்த்திகாயினி(40), ஆவராணி ரெயில்வே கேட் அருகே சாராயம் விற்ற நாகை வண்டிப்பேட்டையை சேர்ந்த லெட்சுமி (48) ஆகிய 5 பேரையும் போலீசார் பிடித்தனர்.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    கொள்ளிடம் பகுதியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதிக்கு சென்னையில் இருந்து சிலர் வந்திருப்பதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து கடந்த 13-ந் தேதி கொள்ளிடம் பகுதிக்கு வந்த சிலர் யாருக்கும் தகவல் கொடுக்காமல் வீட்டிலேயே தங்கியிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.

    இதில் கோதண்டபுரம் கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேருக்கும், வெட்டாத்தங்கரை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேருக்கும், மணலகரம், கீராநல்லூர், வழுதலைக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 பேருக்கும் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து 9 பேரும் 108 ஆம்புலன்சு மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இருந்து வந்த 9 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொள்ளிடம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் இருந்து வருபவர்களால் கொள்ளிடம் பகுதியில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவே கொள்ளிடம் சோதனைச்சாவடி வழியாக வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை நகரில் கடந்த 15 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பிரதான குழாய்கள் வழியாக மன்னம்பந்தலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கழிவுநீர் தடையின்றி செல்வதற்காக 10 இடங்களில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஒருமுறை ‘பம்பிங்’ செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சில இடங்களில் உள்ள கழிவு நீரேற்று நிலையங்கள் சரிவர செயல்படாததால் ஆங்காங்கே பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் தெருக்களில் தேங்கி நிற்பது வாடிக்கையாக நடக்கிறது.

    பாதாளசாக்கடை குழாய் உடைப்பு காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை உள்வாங்கி பள்ளம் உருவாகி உள்ளது. இதை அரசு சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின்னரும் பாதாள சாக்கடை குழாய்கள் சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    மயிலாடுதுறை கவரத்தெருவில் பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதேபோல் நகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாதாளசாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    சென்னையில் இருந்து சீர்காழி வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பெண்ணும், சீர்காழி திருத்தளமுடையார் கோவில் தெருவை சேர்ந்த பெண்ணும் கடந்த 11-ந் தேதி சென்னைக்கு சென்று பின்னர் சீர்காழிக்கு வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் சீர்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நாகை மாவட்டத்தில் குடிமராமத்து திட்ட பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள ஆனைக்கோவில், திருப்பயத்தங்குடி கிராமத்தில் உள்ள வளப்பாற்றை தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. ராதாரம்பூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி ஆகிய கிராமங்களில் நரிமனியார் வடிகால் வாய்க்கால் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது. அங்கு மண் திட்டுகளும் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் வீரமுட்டி வாய்க்கால், கீழ்வேளூர் அருகே பாலக்குறிச்சி கிராமத்தில் மரவனாறு வாய்க்கால், பாலக்குறிச்சி வாய்க்கால், நந்தனம் வாய்க்கால், குதிரைசேவகனாறு வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

    இவை உள்பட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் சுமார் 1,071 கி.மீ. தொலைவுக்கு 80 பணிகளும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 131 பணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    234 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரும் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, அதில் 101 பணிகள் நிறைவடைந்துள்ளன. 370 குளங்களை விரைவில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் பழனிகுமார், காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், செயற்பொறியாளர் ராஜன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கமலக்கண்ணன், உதவி பொறியாளர்கள் செல்வபாரதி, செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். 
    கீழ்வேளூர் அருகே 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கொளப்பாடு அருகே உள்ள முத்தரசபுரத்தை சேர்ந்த சிலர் கொளப்பாடு ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிபாளையம் சோழவித்தயாறு கரைகளில் நேற்று காலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் இருந்த மூங்கில் மரங்கள், கருவேல மரங்களை தீவைத்து கொளுத்தினர். அப்போது காற்று வேகமாக வீசியதால் அந்த பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ், நாகரத்தினம், பாஸ்கர், கற்பகம் ஆகிய 4 பேரின் கூரை வீடுகளுக்கும் தீப்பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து தலைஞாயிறு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 4 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன. இதன்சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து பற்றி அறிந்த திருக்குவளை தாசில்தார் சாந்தி, தலைமையிடத்து துணை தாசில்தார் சுதர்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கினர். அப்போது வருவாய் ஆய்வாளர் புனிதா, கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், தலைஞாயிறு ஒன்றிய தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, கொளப்பாடு ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலாஜி உடனிருந்தனர்.
    கொள்ளிடம் பகுதியில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய இடங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், எருக்கூர், மாதிரவேலூர், வடரெங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆனைக்காரன் சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழைய பாளையம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், அரசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் கூறினார். 
    வேதாரண்யம் அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி கொல்லைக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது45). இவர் கருப்பம் புலத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டு வாசல் கதவை திறந்து வைத்து விட்டு தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்தவர்களை தாண்டி உள்ளே சென்று கதவை உள்பக்கமாக தாழ்ப் பாள் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 9 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு பின் பக்க கதவு வழியாக தப்பி சென்றனர்.

    செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் மோப்ப நாயுடன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதே போல தடயவியல் நிபுணர்கள் மூலமாக தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
    பொறையாறு அருகே பருத்தி வயலை தாக்கியது உள்ளூர் வெட்டுக்கிளிகள் என்றும், விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என வேளாண் ஆராய்ச்சி கூடுதல் இயக்குனர் சுப்பையன் கூறினார்.
    பொறையாறு:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சதீஷ் என்பவர் 10 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்து இருந்தார். இந்த பருத்தி வயலில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் திடீர் தாக்குதல் நடத்தின. பருத்தி இலைகள், பூக்கள், காய்களை வெட்டுக்கிளிகள் கடித்து குதறியதால் பயிரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாலூர் கிராமத்தில் பருத்தி பயிரை தாக்கிய வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் பயிர்களை நாசம் செய்த பாலைவன வெட்டுக்கிளிகளா? என்ற அச்சம் பொறையாறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை வேளாண் ஆராய்ச்சி கூடுதல் இயக்குனர் சுப்பையன், மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி., பூம்புகார் பவுன்ராஜ் எம்.எல்.ஏ, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் பன்னீர்செல்வம், மதியரசன், சந்திரசேகரன், ரகு மற்றும் பூச்சியியல் நிபுணர்கள் ஆகியோர் நேற்று பாலூர் கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது வேளாண் ஆராய்ச்சி கூடுதல் இயக்குனர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பருத்தி பயிரில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது உள்ளுர் வெட்டுக்கிளிகள் தான். இவை பாலைவன வெட்டுக்கிளிகளாக இருக்குமோ? என விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். இவை பயிர்களுக்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தாது. வயல்களை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாகவும், வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றியும், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் இவ்வகை வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    பருத்தி செடிகளை பார்வையிட்ட ராமலிங்கம் எம்.பி., ‘பருத்தி பயிர்களை தாக்கிய வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றுகூறினார்.

    முன்னதாக விவசாயிகள் மத்தியில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் நலனுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். தற்போது வந்துள்ள வெட்டுக்கிளிகள் உள்ளூர் வகையை சேர்ந்தது. இதை அழிக்க வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் அப்துல் மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு கட்சியினர் விவசாயிகளை சந்தித்து பேசினர். 
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதியில் இதுவரை 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வேதாரண்யத்தில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக கல்லூரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்றும், கோரிக்கை குறித்த மனுவை கலெக்டரிடம் வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
    ×