search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டுக்கிளி
    X
    வெட்டுக்கிளி

    பருத்தி வயலை தாக்கியது உள்ளூர் வெட்டுக்கிளிகள்- வேளாண் அதிகாரி பேட்டி

    பொறையாறு அருகே பருத்தி வயலை தாக்கியது உள்ளூர் வெட்டுக்கிளிகள் என்றும், விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என வேளாண் ஆராய்ச்சி கூடுதல் இயக்குனர் சுப்பையன் கூறினார்.
    பொறையாறு:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சதீஷ் என்பவர் 10 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்து இருந்தார். இந்த பருத்தி வயலில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் திடீர் தாக்குதல் நடத்தின. பருத்தி இலைகள், பூக்கள், காய்களை வெட்டுக்கிளிகள் கடித்து குதறியதால் பயிரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாலூர் கிராமத்தில் பருத்தி பயிரை தாக்கிய வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் பயிர்களை நாசம் செய்த பாலைவன வெட்டுக்கிளிகளா? என்ற அச்சம் பொறையாறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை வேளாண் ஆராய்ச்சி கூடுதல் இயக்குனர் சுப்பையன், மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி., பூம்புகார் பவுன்ராஜ் எம்.எல்.ஏ, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் பன்னீர்செல்வம், மதியரசன், சந்திரசேகரன், ரகு மற்றும் பூச்சியியல் நிபுணர்கள் ஆகியோர் நேற்று பாலூர் கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது வேளாண் ஆராய்ச்சி கூடுதல் இயக்குனர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பருத்தி பயிரில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது உள்ளுர் வெட்டுக்கிளிகள் தான். இவை பாலைவன வெட்டுக்கிளிகளாக இருக்குமோ? என விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். இவை பயிர்களுக்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தாது. வயல்களை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாகவும், வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றியும், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் இவ்வகை வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    பருத்தி செடிகளை பார்வையிட்ட ராமலிங்கம் எம்.பி., ‘பருத்தி பயிர்களை தாக்கிய வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றுகூறினார்.

    முன்னதாக விவசாயிகள் மத்தியில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் நலனுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். தற்போது வந்துள்ள வெட்டுக்கிளிகள் உள்ளூர் வகையை சேர்ந்தது. இதை அழிக்க வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் அப்துல் மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு கட்சியினர் விவசாயிகளை சந்தித்து பேசினர். 
    Next Story
    ×