என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறை அருகே கொரோனாவுக்கு பலியானவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவர், கடந்த 4-ந் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான மயிலாடுதுறை சித்தர்காட்டிற்கு கொண்டு சென்றனர். சித்தர்காடு காவிரிக்கரையில் உள்ள சுடுகாட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், போலீசார் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை ஊழியர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய குழி தோண்டினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அருகே உள்ள இந்திரா காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கொரோனோ பாதித்தவரின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்களிடம் கொரோனா பாதித்த வரை சுகாதார முறைப்படி புதைப்பதால் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க பொதுமக்கள் மறுத்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆனாலும் சுடுகாட்டில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் சுகாதார முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    நாகூர் அருகே வேலை வாய்ப்பு இல்லாமல் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நாகூர்:

    நாகூரை அடுத்த தெத்தி கீழத்தெருவை சேர்ந்த வடிவேல் மகன் சிவமுருகன் (வயது 28). இவர், தற்போது வேலை வாய்ப்பு இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த சிவமுருகன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கீற்று கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதைகண்ட உறவினர்கள் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தோப்புத்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு லாட்டரி விற்ற நாகை அருகே உள்ள சிக்கல் கிராமத்தை சேர்ந்த அம்பிகாபதி (வயது43) என்பவரை கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.1,220, ஆன்லைன் லாட்டரிக்காக அவர் பயன்படுத்திய செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    சீர்காழி நகராட்சி சார்பில் சீர்காழி புறவழிச்சாலை முதல் மயிலாடுதுறை சாலை வரை கழுமலை ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல், தேனூர், பத்தக்குடி, கொட்டாய்மேடு, வள்ளுவக்குடி, மருதங்குடி, நிம்மேலி, அரூர், அகனி, ஆலஞ்சேரி, கோவில்பத்து, சட்டநாதபுரம், கைவிளாஞ்சேரி, சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், சிவனார்விளாகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விளை நிலங்கள் சீர்காழி கழுமலை ஆறு பாசன வாய்க்காலை நம்பி உள்ளன.

    இந்தநிலையில் சீர்காழி புறவழிச்சாலை முதல் மயிலாடுதுறை சாலை வரை சீர்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பாசன வாய்க்கால்களில் பாலித்தீன் பைகள், குப்பை கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

    இந்தநிலையில் சீர்காழி கழுமலை ஆறு பாசன சங்கம் மற்றும் பொதுப்பணித்துறையினரின் வேண்டுகோளை ஏற்று சீர்காழி நகராட்சி சார்பில் சீர்காழி புறவழிச்சாலை முதல் மயிலாடுதுறை சாலை வரை கழுமலை ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கு சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லை விடங்கன், திருத்தோணிபுரம். வனார்விளாகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சீர்காழி நகராட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

    திருகருகாவூர் கிராமத்தில் இறால் குட்டைகளை தடை செய்து, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருகருகாவூர் கிராமத்தில் 1,500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக இருப்பதால் அந்த கிராம மக்கள் காலம் காலமாக குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் நிலத்தடி நீரையே பயன்படுத்தி வந்தனர். இந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வந்தது இல்லை.

    இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக இறால் குட்டைகள் வெட்டப்பட்டு அவற்றில் உப்பு நீரை தேக்கி இறால் வளர்ப்பில் சிலர் ஈடுபட்டு வந்தனர். இதனால் 80 ஏக்கர் விளை நிலங்கள் இறால் குட்டைகளாக மாறி உள்ளன. அதனை சார்ந்துள்ள 300 ஏக்கர் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியதால் நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே திருகருகாவூர், வடகால், கடவாசல், எடமணல், கீராநல்லூர், வெள்ளப்பள்ளம், கிளாக்தோப்பு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாகை கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், குடிநீர் தட்டுப்பாட்டுக்கும், விவசாய நிலங்கள் பயனின்றி போவதற்கும் காரணமாக இருந்து வரும் இறால் குட்டைகளை தடை செய்து, நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தொழிற்சங்க மையம், விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும். பொது முடக்கத்தால் வேலை வாய்ப்பு இழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.7,500-ஐ 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    நாகை தாலுகா அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை தாலுகா அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நாகை மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பிரகாஷ், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார். கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேசன்கடை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் பொருளாளர் ராஜா நன்றி கூறினார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் நாகை மாவட்டத்தில் உள்ள 486 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன.
    திருமருகல் ஒன்றிய பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றிய பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வள்ளுவன் தோப்பு பகுதியில் 500 -க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர் திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மருத்துவர் மணிவேல் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் லதா சக்திவேல் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
    நாகூர் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகூரை அடுத்த கொட்டரக்குடியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொட்டரக்குடி முக்கடையை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி கார்த்திகா (வயது 28) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகாவை கைது செய்து, அவரிடம் இருந்த 55 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    தரங்கம்பாடி அருகே ரூ.3 லட்சம் மதிப்புடைய பைபர் படகு, என்ஜின் மற்றும் வலைகள் தீயில் எரிந்து நாசமாயின.
    பொறையாறு:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மாணிக்கப்பங்கு ஊராட்சி புதுப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது31), செல்லச்செட்டி(42) ஆகியோர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பக்கத்து கிராமமான தாழம்பேட்டையில் பயன்படுத்தப்பட்ட பைபர் படகை ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கு வாங்கி வந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால் புதுப்பேட்டை கடற்கரையோரம் அந்த பைபர் படகை நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று காலை மீனவர்கள் இருவரும் கடலுக்கு வந்து பார்த்தபோது பைபர் படகு மற்றும் அதில் இருந்த வலைகள், என்ஜின் உள்ளிட்டவை தீயில் எரிந்த நிலையில் காட்சி அளித்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பொறையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு யுவபிரியா, பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பைபர் படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எரிந்த பைபர் படகு, வலை மற்றும் என்ஜின் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பைபர் படகு மீனவர்களுக்கும், சுருக்குமடி வலையை பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நிலவி வரும் நிலையில் புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் பைபர் படகு தீயில் எரிந்து கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    நாகை:

    நாகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்பிக்கள், எம்எல்ஏ ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    இதனால் ஆட்சியர் அலுவலகம் இன்றும் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகை மாவட்ட எல்லையில் இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.
    பொறையாறு:

    ஆகஸ்டு மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்தநிலையில் நாகை மாவட்டம் எல்லை முடிவு, காரைக்கால் மாவட்டம் எல்லை ஆரம்பம் ஆகிய இருமாவட்ட எல்லையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்ட எல்லையான பொறையாறு அருகே நண்டலாறு சோதனை சாவடியில் பொறையாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது இ-பாஸ் அனுமதி இல்லாமல் வரும் கனரக வாகனங்கள், கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள், பாதசாரிகள் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு சாராயம் வாங்க செல்லும் மதுப்பிரியர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ×