என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கீழ்வேளூர் அருகே கோவிலுக்கு நடந்து சென்ற அரசு பஸ் கண்டக்டர், சரக்கு வாகனம் மோதி பலியானார்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே சிக்கவலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது52). இவர் திருவாரூரில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மாரிமுத்து வீட்டில் இருந்து அருகில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வாகனம், மாரிமுத்து மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ‘நிவர்’ புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புயலை எதிர் கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று(புதன்கிழமை) கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேலும் வழக்கத்தை விட நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக கடுவையாற்று பகுதியில் மீனவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். துறைமுகம் இல்லாத மீனவ கிராமங்களில் பைபர் படகுகளை கடற்கரையை விட்டு 500 மீட்டர் தூரத்திற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கூரை வீட்டில் தார்பாய்கள் போடுவது என புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டனர். வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்தினர்.

    நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் புதிய பஸ் நிலையம், நாகூர், உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் மின் கம்பங்களை உரசும் மரங்களை வெட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நாகை, நாகூர், வேளாங்கண்ணி ஆகிய கடற்கரை பகுதியில் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று காலை முதலே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை நேரங்களில் கடற்கரைகளில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 140 வீரர்கள் 20 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    வெள்ள மீட்பு பணிக்கு ரப்பர் படகு, மரம் அறுக்கும் கருவிகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன. நேற்று 1 மணிக்கு மேல் நாகை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால் நாகை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. புயலையொட்டி மார்க்கெட் மற்றும் கடைகளில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்களுக்கு எரிப்பொருள் நிரப்ப வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

    வேதாரண்யம் கடற்கரை மற்றும் நகர் பகுதிகளிலும் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் அலைகள் 6 அடி முதல் 7 அடி உயரத்திற்கு எழுந்தன. வேதாரண்யம் பகுதியில் நேற்று ஒரு மணி முதல் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு, பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை நிரப்ப பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்தனர். இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. புயல் முன்எச்சரிக்கை குறித்து வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

    கடற்கரை கிராமங்களான கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, ஆயக்காரன்புலம், மருதூர், தகட்டூர், வாய்மேடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்று அங்குள்ள மீனவர்களையும் தாழ்வான பகுதியில் உள்ள கூரை வீடுகளில் உள்ள பொதுமக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அரசின் பாதுகாப்பு மைய கட்டிடங்களுக்கும் செல்ல அறிவுறுத்தினார்.

    பாதுகாப்பு மையங்களில் உள்ள வசதிகளை பார்வையிட அமைச்சர் மின்சார வசதி உரிய ஜெனரேட்டர்களை எடுத்துவரவும், உணவு பொருட்களை பாதுகாப்பு மையங்களில் அதிக அளவில் கொண்டுவந்து, சமையலுக்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் துரிதபடுத்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உடமைகளையும், வீடுகளையும் பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூரை வீடுகளுக்கு மேல் கம்புகளை போட்டு கீற்றுகள் சேதமடையாமல் இருக்க கட்டி வைத்தும், ஓட்டு வீடுகளுக்கு கயிறு மற்றும் வலைகள் போட்டு கட்டியும் பாதுகாத்து வருகின்றனர்.பெரும்பாலான இடங்களில் உள்ள தென்னை மரங்கள், புளிய மரங்கள் போன்றவைகளை வெட்டப்பட்டன. பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்கோபுரங்களில் மின்விளக்குகள் கீழே இறக்கப்பட்டன. புயல், மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேதாரண்யத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் விஜயமூர்த்தி (வயது 23). இவர் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் கடல் சீற்றத்துடனும், பயங்கர காற்றும் வீசி வருகிறது.

    இதனால் காற்றின் வேகத்தால் விஜயமூர்த்தியின் படகு திசை மாறியது. அதிர்ச்சியடைந்த விஜயமூர்த்தி படகை கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கவே நாகை மாவட்டம் வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் படகுடன் விஜயமூர்த்தி கரை ஒதுங்கினார்.

    தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று படகு வலையை பறிமுதல் செய்து விஜயமூர்த்தியை கைது செய்தனர்.

    காற்றின் வேகத்தில் தான் விஜயமூர்த்தி தமிழக கடற்கரைக்கு வந்தாரா? அல்லது கடத்தலில் ஈடுபட வந்துள்ளாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    நல்லம்பள்ளி அருகே வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 62). வேன் டிரைவர். இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யத்தில் அண்ணன்-தங்கையை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). விவசாயி. இவருடைய தங்கை மணிமேகலை வேதாரண்யத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்து வெளியே வந்தபோது கருப்பம்புலத்தை சேர்ந்த செல்லத்துரை (42) என்பவர் மணிமேகலையை தரக்குறைவாக பேசி தாக்கி உள்ளார். இதை தட்டிக்கேட்ட தியாகராஜனையும் செல்லத்துரை தரக்குறைவாக பேசி தாக்கி உள்ளார். இதுகுறித்து தியாகராஜன் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.
    பலத்த மழை, சூறாவளி வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினமும் 15 முதல் 20 லாரிகளில் உப்பு அனுப்பப்படுகிறது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் ஆகிய 3 இடங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நாள்தோறும் லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்தனர்.தற்போது 1 லட்சம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    கன மழை, சூறாவளி வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து தினமும் 50 லாரிகளில் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது லாரி வரத்துக்குறைவால் தினமும் 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ.400-க்கு விற்பனை ஆனது, தற்போது ஒரு டன் உப்பு ரூ,1,000 வரை விற்பனை ஆகிறது.

    வடகிழக்கு பருவ மழையையொட்டி கன மழை மற்றும் சூறாவளி வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உப்பு இருப்பு வைத்துள்ள உற்பத்தியாளர்கள் உப்பை விரைவாக விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் கஜா புயலின் போது இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டன் உப்பு முற்றிலும் சேதமானது. கடந்த 2 நாட்களாக உப்பை பாக்கெட் போட்டு லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழையில் இருந்து பாதுகாக்க உப்பை பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் பனைமட்டை வைத்து மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே காக்கழனி- ஆத்தூர் பாலம் பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் தங்கபாண்டியன் (வயது26), பெருங்கடம்பனூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயராஜ் (40) ஆகிய 2 பேரை பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியன், ஜெயராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    கொள்ளிடம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டு இருந்தாள். அதேபோல அதே பகுதியை சேர்ந்த 10 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் 4 பேரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திடீரென சிறுவர்கள் 4 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஒரு வீட்டின் பின்புறத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர், புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

    இதையடுத்து சிறுமி சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

    நேற்று 2-வது நாளாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அனுமதியின்றி கொரோனா பரவும் விதமாக கூட்டத்தை கூட்டியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர். விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்று பிரசாரம் தொடங்கியவுடனேயே எங்களை போலீசார் கைது செய்தனர். அது போலவே இன்றும் கைது செய்துள்ளனர். எங்களைப் பார்க்க வேண்டும், பேச்சைக் கேட்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதைப்பார்த்து சகிக்க முடியாத அ.தி.மு.க. அரசு பிரசாரத்திற்கு இடையூறு செய்து வருகிறது.

    கைது நடவடிக்கைகள் எடுத்தாலும் பிரசாரம் தொடரும். தொடர்ந்து இடையூறு செய்தால் தி.மு.க. கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு செல்லும். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தேர்தலில் வெற்றிபெற எங்களுக்கு சுலபமாக இருக்கும். அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் பா.ஜ.க. கையில் இருக்கிறது. அதற்கு பயந்துதான் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்.

    தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிக்கல், நாகூர், பால்பண்ணைச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு தனது தாயார் ஊரான சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் தங்கினார்.

    தொடர்ந்து மயிலாடுதுறைக்கு சென்ற அவர் அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார். பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் தமிழ்க்கடவுள் சேயோன் என்ற ஆன்மீக நூலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

    மயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    இன்று 3-வது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நாகையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையில் நேற்று முன்தினம் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அவரை போலீசார் கைது செய்தனர். நேற்று அவர் தனது 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொண்டார். நாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார்.

    இதையடுத்து மீன்பிடி துறைமுகத்தில் ஒரு விசைப்படகில் ஏறி கடல் முகத்துவாரம் வரை பயணம் செய்தார். சிறிது தூரம் விசைப்படகை ஓட்டினார்.

    படகில் இருந்து கீழே இறங்கியதும் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை கைது செய்தனர். இதை கண்டித்து போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததுடன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கைதான அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு..க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவல்துறை எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் எங்களது பிரசாரம் தொடரும். தி.மு.க.வின் பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. நான் சென்ற இடம் எல்லாம் மக்கள் நல்ல எழுச்சியோடு வரவேற்றனர். இது ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பு. தி.மு.க.வின் பிரசாரத்தை ஒடுக்கவே ஆளும் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    நேற்றுமுன்தினம் பிரசாரத்தை தொடங்கியபோதும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன். இன்று உலக மீனவர் தினம் என்பதால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து மீனவர்களை சந்திக்கலாம், அவர்களுடைய குறைகளைக் கேட்கலாம் என்று வந்துள்ளேன். இப்போது 2-வது நாளாக என்னை கைது செய்துள்ளனர். தி.மு.க. பிரசாரத்தை கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவெண்காடு அருகே சாலையில் கொட்டுவதற்காக கழிவு நீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர்.
    திருவெண்காடு:

    திருவெண்காடு நெய்தவாசல் சாலையில் எட்டு கமா பகுதியில் இரவு நேரங்களில் தனியார் லாரிகளில் கழிவு நீர் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுவதாகவும், கழிவுநீரால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாகவும் புகார்கள் வந்தன. 

    இந்தநிலையில் நேற்று காலை திருக்கடையூர் பகுதியில் இருந்து கழிவு நீரை கொண்டு வந்து நெய்தவாசல் சாலையில் கொட்டப்படுவதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கழிவு நீரை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன், திருவெண்காடு காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதவன், சுகாதார ஆய்வாளர்கள் ரெங்கராஜன், கார்த்திக் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வட்டார மருத்துவ அலுவலர், இனிமேல் இந்த பகுதியில் கழிவுநீர் கொட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்தார். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காயமடைந்த சிறுமிக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
    ×