என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லும்.
    • தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் சுமார் 44 செமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது.

    இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து மேற்கு திசையில் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லும்.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதி கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செமீ மழை பதிவாகி உள்ளது. சீர்காழியை பொருத்தவரை இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழையாகும். இந்த அளவுக்கு அதிகப்படியான மழை பெய்ததற்கு மேகவெடிப்பு காரணமில்லை.

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் பரவலாகவும், 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை முதல் கடலூர் வரை வட கடலோர மாவட்டங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு வடதமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் மிதமான மழைக்கும், சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. 16ம் தேதியை ஒட்டி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
    • பம்புசெட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வருவதால் மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கேசவன்பாளையம், களுவன்திட்டு, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 13 -வது வார்டு, ஸ்டேட் வங்கி அருகில் தேர் வடக்கு வீதி, 8-வது வார்டு தடாளம் மேற்கு , வசந்த் நகர், 2- வது வார்டு இரணியன் நகர் ஆகிய இடங்களுக்கு கலெக்டர் லலிதா கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கேசவன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை நீரை பம்பு செட் வைத்து வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிட்டார். அங்குள்ள பொது மக்களிடம் மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளதால் பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட களுவன்திட்டு பகுதியில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.

    குறிப்பாக பொது மக்கள் தங்கியிருக்கும் வீடுகளின் அருகில் மழை நீர் தேங்கியிருக்கும் பட்சத்தில் பம்பு செட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

    மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் பம்பு செட்வைத்து மழை நீரை வெளியேற்ற சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இவ்வாய்வின் போது , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, சீர்காழி நகர் மன்றத்த லைவர்துர்கா பரமே ஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுணாசங்கரி, சீர்காழி நகராட்சி ஆணையர்வா சுதேவன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர்கமலக்கண்ணன், வட்டாட்சியர்கள் செந்தில்குமார்,புனிதா,வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரதுறை , வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சீர்காழி தெட்சிணாமூர்த்தி நகர், கோவிந்தராஜ் நகர், இரணியன் நகரில் தெருக்களில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

    சீர்காழி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழி, கொள்ளிடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.

    சீர்காழி நகரில் மட்டும் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி உள்ளது. இதேப்போல் கொள்ளிடத்தில் 31 செ.மீ, செம்பனார்கோவிலில் 24 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    இன்றும் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீர்காழி , வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    குறிப்பாக சீர்காழி தெட்சிணாமூர்த்தி நகர், கோவிந்தராஜ் நகர், இரணியன் நகரில் தெருக்களில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அதிலும் சிலர் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் நீந்தியப்படி பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இது தவிர சாலை எங்கும் உள்ளது என தெரியாத அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறியபடி சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் தேனூர் கதவணையில் இருந்து பிரதான வாய்க்காலான முடவன் வாய்க்காலில் பல்வேறு இடங்களில் கரைகள் உடைந்தும் கரை வழிந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இது தவிர விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்ததால் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேப்போல் சூரைக்காடு உப்பனாற்றில் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    தொடர்ந்து 2 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் கிடக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, திருமுல்லைவாசல், பொறையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்இணைப்பு இன்று காலை 11 மணி வரை சீராகவில்லை. இதனால் விடிய விடிய கனமழையாலும், மின்தடையாலும் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    • சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை.
    • 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் 43.6 சென்டி மீட்டரும், கொள்ளிடத்தில் 31.5 சென்டிமீட்டரும், சிதம்பரத்தில் 30.7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    கனமழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக்கன மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையையொட்டி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாநில பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள், சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

    கடலோர மாவட்டங்களில் மீட்பு பணியில் படகுகளுடன், தேசிய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உள்பட 60 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை, சிவகங்கை உள்பட தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நிலங்களை கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு சீர் செய்தல்.
    • அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசு, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் கிராமத்தில் அட்மா திட்டதின் கீழ் 40 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெ ற்றது. இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் வீழும் அனைவரையும் வரவேற்றார்.

    வேளாண்மை உதவி இயக்குர் கூறுகையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் உள்ள குழி தட்டு நாற்றாங்கால் போதிய இடைவெளி குறைந்த ஆள் செலவு, அதிக மகசூல் போன்றவை கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் அதனை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பயிற்சியில் தொடர்ந்து கரும்பு உதவி அலுவலர் குளஞ்சியப்பன் கூறுகையில், நிலங்களை கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு சீர் செய்வது, இயந்திரங்களை பயன்படுத்தும் வகையில் போதிய இடைவெளி உடன் பார்கள் அமைத்தல் அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்தல் விதை அரும்புகளை பூஞ்சான கொல்லி மருந்தில் விதை நேர்த்தி செய்தல் பற்றி கூறினார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறுகையில், குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து அதனை நடவுக்கு முன்பு வரை நிழல்குடிலில் எப்படி அதை பாதுகாப்பது நடவுக்கு பின் நீர் மேலான்மையில் சொட்டு நீர் பாசனைத்தை பயன்படுத்துவது சொட்டு நீர் அமைப்புடன் உரம் மற்றும் மருந்து கரைசல்களை சேர்த்து எவ்வாறு கரும்புகளுக்கு கொடுப்பது.

    களை மேலாண்மை, இயந்திர அறுவடை போன்றவைகளை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    முன்னதாக குழிதட்டில் நாற்று வளர்ப்பது பற்றி செயல்விளக்கம் காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் கரும்பு முருகன் பன்னிப்பள்ளம் சேகர், செந்தில் அட்மா குழு உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ட 40-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.
    • 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்துள்ளனர்.

    இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பயிர்களைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.

    பயிர்களை சுற்றி தேங்கியுள்ள மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், இந்தப் பகுதிக்கு வடிகாலாக திகழும் அழிஞ்சியாறு சென்ற வருடம் தூர்வாரப்பட்ட நிலையில், மீண்டும் வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.

    சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ள இந்த அழிஞ்சியாறு வாய்க்காலில் தண்ணீர் சீராக சென்று சேர முடியாத அளவுக்கு புல் மற்றும் செடிகள் மண்டி கிடந்தன.

    இதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட விவசா யிகளே ஒன்றிணைந்து கோரை புற்களை அகற்றி வாய்க்காலை சீரமைக்க முடிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.

    தற்போது விவசாயிகள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை அகற்றி உள்ளனர்.

    இந்த வாய்க்காலை தூர் வாரிய செலவினத்தை அதிகாரிகள் வழங்கவும், மேலும் தொடர்ந்து வாய்க்காலை முழுவதுமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 20ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி மற்றும் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தனர்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்ட ங்குடி, கேவரோடை, வெள்ளப்பள்ளம், திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி மற்றும் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அவ்வபோது மழை பெய்துவருவதால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியாமல் உள்ளது.

    இதனிடையே கொள்ளிடம் வட்டாரம் பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சீர்காழி எம்.எல்.ஏ. எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழைநீர் வடிந்த பின்னர் உரிய கணக்கீடு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசா யிகளிடம் உறுதியளித்தனர். ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் உடனி ருந்தார்.

    • வடிவாய்க்கால் கரைகளை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்றி கரைகளை பலப்படுத்தினர்.
    • கதவணைகளை இயந்திரத்தைக் கொண்டு உடைத்து ஆழப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை காரணமாக சீர்காழி வட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சீர்காழியை அடுத்த எடமணல், வேட்டங்குடி, ஆலங்காடு, இருவக்கொ ல்லை, திருமுல்லைவாசல், வழுதலைக்குடி, வடகால் உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இளம் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

    இதனை அடுத்து மழை வெள்ளத்தால் மூழ்கிய பயிர்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் லலிதா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்பொழுது மழைநீரை வேகமாக அகற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொ ள்ள பொது ப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர்.இந்நிலையில்சீர்காழி அருகே உள்ள பழவஞ்சியாறு, முடவன்ஆறு உள்ளிட்ட வடிவாய்க்கால் கரைகளை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்றி கரைகளை பலப்படுத்தினர். மேலும் மண் மூட்டைகள் வைத்து பலப்படுத்தியும் இந்த வடிகால் ஆறு கடலில் சென்று கலப்பதற்கு முன்பு கட்டப்பட்டுள்ள கதவணைகளை (ஏர் பிரேக்கர்) இயந்திரத்தைக் கொண்டு உடைத்து ஆழப்படுத்தும் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதிக ளில் விளை நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் வேகமாக கடலில் சென்று வடிய தொடங்கியுள்ளதாக பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது.
    • பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே, கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.

    இப்பயிற்சியில் எலிகளை கட்டுப்படுத்த எலி பொறிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது, ஆந்தை கூண்டு அமைத்தல் மற்றும் பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தாலம் என்பது பற்றி பயிற்ச்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் விஷ உணவு தயாரிப்பது குறித்து செயல்விளக்கத்தை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச.திருமுருகன் செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி சுந்தர் மற்றும் 40க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய், மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் முத்தமிழன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் ராஜகோபால் நன்றி கூறினார்.

    • பிரம–புரீஸ்வரர் கோவிலுக்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார்.
    • சுவாமி அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமரக்கோயில் அமைந்துள்ளது

    இக்கோயிலில் வள்ளி தேவசேனா உடனாகிய குமரப் பெருமான் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    இக்கோயிலில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்ற போது மாலைப் பொழுது முடிந்து இருள் வந்துவிட்டபடியால் தனக்கு துணையாக வீரபாகு முதலிய ஒன்று துணை வரும் தங்குவதற்கு இந்திரனை அழைத்து ஒரு கோயில் அமைக்க கூறியதாகவும், மறுநாள் சூரிய உதயம் ஆனதும் குமரக் கடவுள் தாம் வீற்றிந்தருளிய ஆலயத்தில் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவித்து சிவபெருமானுக்கு திருமஞ்சனம் எடுத்துக் கொண்டு இந்திராதி தேவர்–களோடு பிரம–புரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார் என்பதும் குமரனே கோயில் கட்ட ஆணையிட்டு கோயிலில் தானே தங்கியதால் இக்கோயில் குமரக்–கோட்டம் என கந்த புராணம் கூறுகிறது.

    இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் கடந்த 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது அப்போது சுவாமி அம்பாளுக்கு ஐதீக முறைப்படி சிவாச்சாரி–யார்களால் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது கோயில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மார்கோனி, கோயில் நிர்வாகி செந்தில், கவுன்சிலர்கள் ஜெயந்தி பாபு, நித்யாபாலமுருகன், தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • அரச மரத்தின் கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.
    • திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    குத்தாலம்:

    திருமந்திரத்தை இயற்றிய திருமூலருக்கு அவர் சமாதியடைந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் குருபூஜை விழா நடைபெற்றது.

    திருமூலர் ஞானசமாதி அடைந்த தலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ளது.

    திருமூலர் சமாதி அடைந்த இடத்தில் இக்கோயிலில் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

    திருமூலர் கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள படர்அரச மரத்தின்கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.

    இந்த 3000 பாடல்களே திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், திருமூலரின் குருபூஜை விழாவை முன்னிட்டு கோயிலின் தென்மூலையில் உள்ள திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, பசுக்களுக்கு பூஜை நடத்தப்பட்டது. விழாவில், 'அருள் அரசர்களும் அடியார்களும்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டருள அதனை திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களின் கண்காணிப்பாளர்கள், ஆதீன பள்ளிகளின் ஆசிரியர் பெற்றுக் கொண்டனர்.

    முன்னதாக, ஆரவாய் அண்ணல் அறக்கட்டளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருமுறை விண்ணப்பம் செய்தனர், சென்னை சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி அமைப்பாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.

    புதுச்சேரி அக்ஸி எழிலன் சிறப்புரையாற்றினார்.

    கோவில்பட்டி சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி பேராசிரியர் விமலா சுப்பிரமணியம் 'திருமந்திரத்தில் சைவ சித்தாந்தம்' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

    • 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகம்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் 33/11 கேவி துணை மின் நிலையம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது கூடுதலாக மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேற்படி துணை மின் நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறன் மின்மாற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதற்கான நிகழ்ச்சி துணை மின் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மின்வாரிய நாகை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமை தாங்கினார். சீர்காழி கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடு துறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கூடுதல் திறன் மின்மாற்றியை இயக்கி வைத்து பேசினர்.

    தற்போது செம்பனார்–கோயில் பிரிவிற்குட்பட்ட கீழ்மாத்தூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், மேமாத்தூர் ஊராட்சி தலைவர் தெட்ஷிணாமூர்த்தி, மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×