என் மலர்
உள்ளூர் செய்திகள்

துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் மின்மாற்றியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார். அருகில் ராமலிங்கம் எம்.பி. உள்ளார்.
துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் மின்மாற்றி திறப்பு; எம்.பி- எம்.எல்.ஏ. இயக்கி வைத்தனர்
- 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகம்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் 33/11 கேவி துணை மின் நிலையம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கூடுதலாக மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேற்படி துணை மின் நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறன் மின்மாற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி துணை மின் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மின்வாரிய நாகை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமை தாங்கினார். சீர்காழி கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடு துறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கூடுதல் திறன் மின்மாற்றியை இயக்கி வைத்து பேசினர்.
தற்போது செம்பனார்–கோயில் பிரிவிற்குட்பட்ட கீழ்மாத்தூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், மேமாத்தூர் ஊராட்சி தலைவர் தெட்ஷிணாமூர்த்தி, மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






