என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழி அருகே மரத்தின் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.
    சீர்காழி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மணல்மேடு கிராமம் முதல் சட்டநாதபுரம் வரை கட்சி கொடிகள், விளம்பர பலகைகள் வைப்பதற்கு சேலத்தை சேர்ந்தவர்களிடம் தி.மு.க.வினர் ஒப்பந்தம் செய்து இருந்தனர். அதன்படி சேலத்தை சேர்ந்த 4 பேர் நேற்று காலை மணல்மேடு கிராமத்தில் இருந்து சட்டநாதபுரம் வரை தி.மு.க. கொடிகள் மற்றும் தோரணங்களை கட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை முடித்துக்கொண்டு சரக்கு வேனில் மணல்மேட்டில் இருந்து சீர்காழி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    சீர்காழி சூரக்காடு பகுதியில் வந்தபோது சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சேலம் மாவட்டம் வீரபாண்டி தாலுகா சின்னப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் (வயது 55) படுகாயம் அடைந்தார். மேலும் வேனில் அவருடன் பயணம் செய்த 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறையில் ரூ.2¼ கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் சேகரிக்கப்படுகின்றன. இங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகள் உரமாக மாற்றப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தன. இதனை மேலாண்மை செய்ய முடியாமல் நகராட்சி அதிகாரிகள் சிரமப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சிறப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பழைய குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அதற்காக எந்திரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த திட்டத்தின்படி 32 ஆயிரத்து 500 கனமீட்டர் பரப்பளவில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதுவரை 20 ஆயிரம் கனமீட்டர் பரப்பளவுக்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உள்ளது. பிரிக்கப்பட்ட குப்பைகள் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்து பழைய குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஆணையருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பையா, உதவி பொறியாளர்கள் சந்திரசேகரன், குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    மயிலாடுதுறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்
    மயிலாடுதுறை:-

    மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சோழம்பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்த அமிர்தராஜ் (வயது22) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டிராக்டர் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கடலில் மூழ்கி தத்தளித்த 5 பேரையும் காரைக்கால் பகுதி மீனவர்கள் மீட்டு அழைத்து சென்றனர். விசை படகு மட்டும் கடலுக்குள் மூழ்கி விட்டது. இதையடுத்து கடலுக்குள் மூழ்கிய படகை பழையாறு மீனவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி தாலுகா பழையாறு சுனாமி நகரைச் சேர்ந்த மதி (வயது 55), ஹரிஷ் (22), புதுப்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்த அப்பு என்கிற நகுலன் (45), முத்தையா (60), ராஜதுரை (45) ஆகிய 5 மீனவர்களும் கடந்த 3ஆம் தேதி பழையாறு துறைமுகத்தின் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். மடவாமேடு கிராமம் அருகில் 3 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது காற்று அதிகமாக வீசியதால் எதிர்பாராதவிதமாக விசை படகு தண்ணீரில் மூழ்கியது.

    இதில் கடலில் மூழ்கி தத்தளித்த 5 பேரையும் காரைக்கால் பகுதி மீனவர்கள் மீட்டு அழைத்து சென்றனர். விசை படகு மட்டும் கடலுக்குள் மூழ்கி விட்டது. இதையடுத்து கடலுக்குள் மூழ்கிய படகை பழையாறு மீனவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக கடலூரிலிருந்து மூன்று நீர்மூழ்கி வீரர்கள் வந்து கடலுக்குள் சென்று மூழ்கிய படகை தண்ணீருக்குள் சென்று கயிறு கட்டி பின்னர் படகின் மூலம் வெளியே இழுத்து வந்தனர். இதைதொடர்ந்து படகு பழையார் மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி கரைக்கு உடைந்த நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து வரப்பட்டது.

    இதுகுறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்செழியன் கூறுகையில், ரூ.20 லட்சம் மதிப்பில் உள்ள இந்த விசைப்படகு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந் தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டது. படகில் இருந்த 5 பேரும் பத்திரமாக தப்பித்து கரையேறி விட்டனர். படகுகளுக்கு விபத்து காப்பீடு திட்டம் இல்லை. இதனால் வழக்கமாக அனைத்து படகுகளுக்கும் வழங்கப்படும் ரூ.45 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்.

    ஆனால் படகை இழந்த மீனவர்களுக்கு நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. விவசாய பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கி புயல் மற்றும் வெள்ளம் ஆகிய இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவது போல் விசைப்படகை இழந்த குடும்பத்தினருக்கு அரசு போதிய நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். அப்போதுதான் படகின் உரிமையாளர் வறுமையில் இருந்து மீள்வதற்கு வாய்ப்புள்ளது. இயற்கை சீற்றத்தால் படகு விபத்துகுள்ளாகி தண்ணீரில் மூழ்கி விட்டால் அதற்குரிய போதிய நிவாரணத்தை தமிழக முதல்வர் இனிமேல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கிடையே எம்.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. பழையார் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உரிய நிவாரணம் கிடைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கபடும் என்றார். அப்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடனிருந்தார்.

    மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை அருகே மல்லியம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மதியழகன் இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் மோட்டார் சைக்கிளில் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை மல்லியத்துக்கு திரும்பியுள்ளார். மூவலூர் மெயின்ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த மணிகண்டன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாய் நிர்மலா அளித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் தனியார் கல்லூரி பின்புறம் காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி தனியார் கல்லூரி பின்புறம் காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டிவந்த மன்னம்பந்தல் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கிட்டப்பா மகன் கீர்த்திகேயன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி முருகன் தலைமை தாங்கினார். தடுப்பூசி முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட சபாநாயகம் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர், நகராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.
    மயிலாடுதுைற கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை 2-வது நாளாக பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பேச்சு வார்த்தையால் ஏற்பட்ட உடன்பாட்டால் அனைவரும் கலைந்து சென்றனர்.
    மயிலாடுதுறை:

    புதிய மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக வணிகவரித்துறை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்திற்கு புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கட்ட மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் 21 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட ஆதீனம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவு செய்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான டெண்டர் அறிவிப்பும் கடந்த 11-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டது.

    இந்த நிலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக இடம் சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது அந்த பகுதி மக்கள் தாங்கள் விவசாயம் செய்து வரும் இடம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் அதில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும், எனவே எந்தவித இழப்பீடும் வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இடம் தூய்மைப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் இடம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் இடம் தூய்மைப்படுத்தும் பணியை தடுத்ததோடு பொக்லின் எந்திரத்தையும் முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து தாசில்தார் ராகவன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை தற்போது சுத்தம் செய்யப்போவதில்லை என்றும், தருமபுர ஆதீனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் மட்டுமே தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து ஆதீனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் இடம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது என்பது குறிபிடத்தக்கது.

    சீர்காழி அருகே 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சரகம் ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவஷீலா (வயது 18) திருமணமானவர். மணல்மேடு நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாருமதி (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் சாருமதி ஆதமங்கலத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு கடந்த 29ஆம் தேதி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சாருமதி தனது தாத்தாவின் மோட்டார் சைக்கிளை வாங்கிகொண்டு சீர்காழி வரை சென்று வருவதாக கூறி புறப்பட்டுள்ளார். அப்போது அவருடன் சிவஷீலாவும் சென்றதாக தெரிகிறது.

    ஆனால் இருவரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவ ஷீலாவின் தாய் பொன்னாச்சி வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 இளம் பெண்களையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே சாருமதி எடுத்து சென்ற மோட்டார் சைக்கிள் வைத்தீஸ்வரன் கோயில் ரெயில் நிலையம் அருகே இருந்ததை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    திருவெண்காட்டில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்.
    திருவெண்காடு:

    திருவெண்காட்டில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சீர்காழி வட்டாரத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, பூம்புகார், காத்திருப்பு, வள்ளுவகுடி மற்றும் சீர்காழி ரூரல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து செய்து வருகிறது என்றார். ஆய்வின்போது டாக்டர் அமிழ்தினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர் ரங்கராஜன், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மனோஜ்குமார், வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். முகாமில் 220 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    மயிலாடுதுறையில் ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கும், மாப்படுகை ரெயில்வே கேட்டிருக்கும் இடையில் தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை மீட்டு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த முதியவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், ரெயில் நிலைய பகுதியில் சுற்றித்திரியும் அவர், நேற்று மதியம் ஒரு மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எரவாஞ்சேரி பகுதியில் மணல் திருடுவதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
    குத்தாலம்:

    எரவாஞ்சேரி பகுதியில் மணல் திருடுவதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது எரவாஞ்சேரி சின்ன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது34), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் வயலில் பொக்லின் மற்றும் டிராக்டர்கள் மூலம் மணலை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்கள் மற்றும் பொக்லின் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஜெயசீலன், பன்னீர் செல்வம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×