என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    இந்நிலையில் இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.

    கோவிலுக்கு 5 கிலோ தங்க கட்டிகள் காணிக்கையாக வரப்பெற்றதையடுத்து இதனை தகடுகளாக மாற்றும் வகையிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.

    முன்னதாக 2 கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    மணல்மேடு அருகே சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மணல்மேடு:

    மணல்மேட்டை அடுத்த இளந்தோப்பு ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். இங்கு 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியரை பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இளந்தோப்பு கடைவீதியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், வட்ட செயலாளர் மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் ரவீந்திரன், வட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், இளந்தோப்பு ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். இளந்தோப்பு-பட்டவர்த்தி சுடுகாட்டு சாலையை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, வட்டார சுகாதார கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சர்க்கரை ஆலையை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்றும், மற்ற பிரச்சி்னைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    சீர்காழி ஒன்றியம் திட்டை ஊராட்சியில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி ஒன்றியம் திட்டை ஊராட்சியில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அன்பரசன் நன்றி கூறினார். இதேபோல் சீர்காழி நகர் பகுதியில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பு ஊசி போட்டுக்கொண்டனர்.
    மயிலாடுதுறையில் திருமண விழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மணக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல் மகன் பாலமுருகன் (வயது 37). இவர் சிமெண்ட் ஒர்க்கடை வைத்து நடத்தி வருகிறார். மயிலாடுதுறை கழுக்காணி முட்டம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கட்ராஜூலு. இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது நண்பர் ஒருவரின் குடும்ப திருமண விழாவில் கலந்து கொள்ள மயிலாடுதுறை சேந்தங்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு சென்று உள்ளார். அங்கு பாலமுருகன் உணவு சாப்பிட்டுவிட்டு கைகழுவிய போது முன்விரோதம் காரணமாக வெங்கட்ராஜூலு மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தைகளை திட்டி உருட்டு கட்டையால் தாக்கினர்.

    அப்போது பாலமுருகனும், அவரது அண்ணன் செந்தில்குமாரும் சேர்ந்து வெங்கட்ராஜூலுவை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த பாலமுருகன், வெங்கட்ராஜூலு ஆகிய 2 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வெங்கட்ராஜூலு, செட்டிகுளத்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார், மயிலாடுதுறை சேர்ந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் மாதவன் (27), பாலமுருகன், செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர்.

    திருமண விழாவில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மயிலாடுதுறை அருகே கொரோனா நீங்க வேண்டி சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, இனிப்பு பண்டங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
    தரங்கம்பாடி:

    சத்குரு சித்தர் சுவாமிகளின் 58-வது ஆண்டு சித்தி தினத்தை முன்னிட்டு, சுவாமி ஓங்காரநந்தா என்பவர், தனது சீடர்களுடன் மயிலாடுதுறை அருகே மாப்படுகை சுடுகாட்டில் விநோத வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை நடத்தினார்.

    சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, இனிப்பு பண்டங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்த்து 50கிலோ அரிசி கொண்டு சாதம் படைக்கப்பட்டு, ஒரே இடத்தில் குவியலாக வைத்து, அதில், சாம்பார், மோர், ரசம், அப்பளம், வடை, பாயாசம், பழங்கள், இனிப்புப் பொருட்கள் கொண்டு மகா படையல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மகா படையலுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும் தனித்தனியே தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா நீங்க வேண்டி சிவாய மந்திரத்தை 108 முறை கூறி கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். பொதுமக்களுக்கு படையல் செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் அங்கேயே வழங்கப்பட்டது. அவற்றை சுடுகாட்டிலேயே உண்டனர்.

    இது குறித்து சுவாமி ஓங்காரநந்தா கூறும்போது, சுடுகாடு என்பது புனிதமான இடமாகும். இங்கு கண்ணுக்குத் தெரியாத சூட்சும ரூபத்தில், லட்சக்கணக்கான ஆன்மாக்கள் வசிக்கின்றன. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்கள் நீங்கும். அவர்கள் அமைதி அடைய வேண்டும். அவர்கள் அமைதி அடைந்தால், இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள் ஏற்படாது. இந்தியாவில் உள்ள மயானங்களை தூய்மைபடுத்தவேண்டும் என்றார்.
    பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்துள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்களான கர்ணன், மாதவன் உள்ளிட்ட ஆறு குடும்பத்தினரை மீனவ கிராமம் தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் அவர்கள் மளிகை கடை, கோவிலுக்கு செல்லகூடாது. கிராம மக்கள் யாரிடனும் பேசக்கூடாது, எந்த ஒரு பொருளும் கொடுத்து வாங்க கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சீர்காழி தாசில்தார் சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் தாசில்தார் சண்முகம், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கிராம பொறுப்பாளர்கள் கிராம மக்களை அழைத்து பேசி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்து சென்றனர்.

    இந்நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினரை சேர்ந்த 5 பேர் கீழமூவர்கரை கிராமத்துக்குள் வந்தனர். இதனையறிந்த சிலர் அவர்களை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் கீழமூவர்கரை கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி திருவெண்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்துள்ளனர்.

    திருக்கடையூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கடையூர்:

    பொறையாறு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருக்கடையூர் அருகே மருதம்பள்ளம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், குமாரகுடி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என்பதும், மருதம்பள்ளம் பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    மயிலாடுதுறை அருகே ரெயிலில் அடிபட்டு தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது55). தச்சு தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மல்லியம் ரெயில் நிலையம் அருகில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி துரை தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த துரையை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே துரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி சட்டநாதர்கோவிலில் குடமுழுக்கு திருப்பணி விழா தொடங்கியது. இதில் தருமபுரம், மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்கள் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்மன்- பிரம்மபுரீஸ்வரர் கோவிலான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு அம்மன் ஞானப்பால் ஊட்டிய இடமாகும்.

    மூன்று தளங்களில் அமைந்துள்ள இந்த கோவில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலை மீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரர் கோலத்திலும், அதற்கு மேல் உள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவன் ஒரே கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதியாக உள்ள இந்த கோவில் பைரவ ஷேத்திரம் என்று கூறப்படுகிறது. சமயக் குரவர்களால் தேவாரம் பாடப்பெற்ற இந்த கோவிலில் 1991-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி குடமுழுக்கிற்கான திருப்பணிகள் நேற்று ெதாடங்கின.

    இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் ஈசானிய மூலையான வடகிழக்கு மூலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காறு பாறு சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டநாதர் கோவில் குடமுழுக்கு பணிகள் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    குத்தாலம் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனையை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார், குத்தாலம் மற்றும் ஆலங்குடி பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன் (வயது 27) என்பவர் ஆலங்குடி பழவாறு பாலம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் பழவாறு பாலம் பகுதியை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டனையும் பிடித்து குத்தாலம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து, 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழியில் தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகராட்சி உள்ளது. இந்த நகராட்சி 24 வார்டுகளை கொண்ட பகுதியாகும். இதில் முக்கிய நகர் பகுதியில் உள்ள வார்டுகளில் தனியார் தூய்மை பணியாளர்கள் கொண்டு காலை மற்றும் மாலை தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கக்கோரி சீர்காழி நகராட்சி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தினக்கூலி பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.400 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி, பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது தினசரி வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.320-ல் இருந்து ரூ.370 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்த கலெக்டர் லலிதா தடுப்பூசி செலுத்த மக்கள் தயங்க கூடாது என்று கூறினார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லலிதா கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுக்கு இணங்க மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 15 ஆயிரத்து 931 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 35 ஆயிரத்து 387 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 318 பேருக்கு

    கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை பொறுத்தவரை தேவைக்கு ஏற்ப போதுமான அளவு கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சுந்தர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எடக்குடி வடபாதி, காரைமேடு, புங்கனூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பயணிகள் நிழலக கட்டிடம், பசுமை வீடுகள், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஒன்றிய ஆணையர் அருள்மொழியிடம் பணிகளை தரமாக விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து ஊராட்சியில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ.10 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் தரம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார் பின்னர் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம், அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். அப்ேபாது ஆணையர்கள் அருள்மொழி, கஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் தாரா, ஊராட்சி தலைவர்கள் ஜுனைதா பேகம் கமாலுதீன், அஞ்சம்மாள், வஜுரூதீன், ஊராட்சி துணை தலைவர்கள், உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    ×