என் மலர்
செய்திகள்

தாக்குதல்
மயிலாடுதுறையில் திருமண விழாவில் இருதரப்பினர் இடையே மோதல்
மயிலாடுதுறையில் திருமண விழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல் மகன் பாலமுருகன் (வயது 37). இவர் சிமெண்ட் ஒர்க்கடை வைத்து நடத்தி வருகிறார். மயிலாடுதுறை கழுக்காணி முட்டம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கட்ராஜூலு. இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது நண்பர் ஒருவரின் குடும்ப திருமண விழாவில் கலந்து கொள்ள மயிலாடுதுறை சேந்தங்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு சென்று உள்ளார். அங்கு பாலமுருகன் உணவு சாப்பிட்டுவிட்டு கைகழுவிய போது முன்விரோதம் காரணமாக வெங்கட்ராஜூலு மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தைகளை திட்டி உருட்டு கட்டையால் தாக்கினர்.
அப்போது பாலமுருகனும், அவரது அண்ணன் செந்தில்குமாரும் சேர்ந்து வெங்கட்ராஜூலுவை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த பாலமுருகன், வெங்கட்ராஜூலு ஆகிய 2 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வெங்கட்ராஜூலு, செட்டிகுளத்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார், மயிலாடுதுறை சேர்ந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் மாதவன் (27), பாலமுருகன், செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர்.
திருமண விழாவில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






