என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சுவாமி, அம்மன், செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு வாரந்தோறும் செவ்வாய் கிழமை தருமபுரம்ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வந்து தரிசனம் செய்து, கோவிலில் அடி பிரதட்சணம் செய்வது வழக்கம். அதன்படி தருமபுரம் ஆதீனம் நேற்று செவ்வாய்கிழமை வழிபாடு செய்தார்.

    அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சுவாமி, அம்மன், செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானத்திடம், துர்கா ஸ்டாலின் ஆசிபெற்றார்.

    அவருக்கு தருமபுரம் ஆதீனம் கோவில் பிரசாதங்கள் மற்றும் செல்வமுத்துக்குமார சுவாமி படம் ஆகியவற்றை வழங்கி அருளாசி வழங்கினார். அப்போது வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தார்.
    மேமாத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் பணி 23-ந் தேதி நடைபெறுகிறது.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் பணி 23-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி மற்றும் பரசலூரில் ஒரு பகுதியில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின்உதவி செயற் பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
    மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). இவர் சித்தர்காடு காவிரி ஆற்றங்கரையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சிக்கன் பகோடா விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கலியமூர்த்தி விற்பனையை முடித்துவிட்டு, காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது கலியமூர்த்தி ஆற்றில் நிலைதடுமாறி விழுந்து மூழ்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் கலியமூர்த்தி உடல் ஒதுங்கி கிடந்துள்ளது. தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறையில் எஸ்.பி. அலுவலகம் அருகே கடையின் பூட்டு உடைத்து ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மயிலாடுதுறை- திருவாரூர் ரோட்டில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகம் அருகே ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் தலைக்கவசம் மற்றும் கை உரை அணிந்து கொண்டு வந்தனர். கடைக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திசை திருப்பி விட்டு சட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோ ட்ராவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடினர்.

    இந்நிலையில் இன்று காலை மணிகண்டனின் தாயார் கடை வாசலை சுத்தம் செய்ய வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பாதி ‌ஷட்டர் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்ததையும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதேபோல் மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அமைந்துள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான பழமண்டி கடையின் பூட்டை அறுத்து தூக்கி எறிந்து விட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பணம் ஏதும் இல்லாததால் திரும்பி சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணிகண்டன் கடை முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களின் கை வரிசையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து அந்த கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருக்கடையூர், பொறையாறு, செம்பனார்கோவில் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், கிள்ளியூர், டி.மணல்மேடு அன்னப்பன்பேட்டை, கிடங்கல், மாமாகுடி, மடப்புரம், காலமநல்லூர், வளையல் சோழகன், சீவக சிந்தாமணி, சரபோஜிராஜபுரம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நேற்று தரங்கம்பாடி, பொறையாறு, சங்கரன்பந்தல், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, தில்லையாடி, காட்டுச்சேரி, விசலூர், திருவிடைக்கழி, காழியப்பநல்லூர், நல்லாடை, அனந்தமங்கலம், திருவிளையாட்டம், அரசூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், நரசிங்கநத்தம், செம்பனார்கோவில், பரசலூர், மேலப்பாதி, கருவாழக்கரை, கீழையூர், கஞ்சாநகரம், கிடாரங்கொண்டான், புன்செய், ஆறுபாதி, வடகரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 446 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 446 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ளனர்.
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி சங்க கிளைத்தலைவர் தாஸ் தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலக ஊழியர்களுக்கு டார்கெட் நிர்ணயிப்பதை கைவிடவேண்டும். அஞ்சலக ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.

    தபால்காரர்களுக்கு கூடுதல் பணி வழங்க கூடாது. கொரோனா காலத்தில் மூடப்பட்ட ஆர்.எம்.எஸ். மெயில் அலுவலகங்களை மீண்டும் திறக்க வேண்டும். எம். எம். எஸ் ஓட்டுனர்களுக்கு இரட்டிப்பு பணி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
    கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    நீட் தேர்வு அநீதியால் தமிழகத்தில் மாணவர் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவனும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் தற்போது பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வால் கிட்டத்தட்ட இருபது மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

    ஒன்றிய அரசின் காவி கார்பரேட் கொள்கையின் அடிப்படையில் மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையாக தமிழகத்திற்கு பொருந்தாத நீட் தேர்வை மத்திய அரசு இங்கு திணித்து வருகிறது. தமிழக மக்களோடு இந்திய மாணவர் சங்கமும் கடந்த ஐந்தாண்டுகளாக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு கொடூர மனதுடன் செவிசாய்க்க மறுத்து வருகிறது. தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மத்தியில் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை உறுதியுடன் வெளிப்பட்டது. தேர்தல் முடிவுகளில் இதன் தாக்கத்தால் அதிமுக கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாங்கம் நீட் தேர்வை ரத்து செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது 84 ஆயிரம் மக்களிடம் கருத்து கேட்டதில் சுமார் 70 விழுக்காடு மக்கள் நீட் தேர்வை வேண்டாமென உறுதியுடன் கூறியுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டு மாணவர்கள் இறப்பு நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை மேலும் தீவிரபடுத்தியுள்ளது. தமிழக அரசு நீட்டிற்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக அரசை போன்று சட்டம் நிறைவேற்றுவதோடு மட்டும் இல்லாமல் வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசும் மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மன உறுதிக்கான வகுப்புகளை எடுக்க வேண்டும். இது அரசின் தவறான முறையற்ற தேர்வு நடவடிக்கை என்ற வகையில் இறந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மணிபாரதி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைராஜன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கார்த்தி பிரவீன் தவசி பிரகாஷ் ஆகியோர் பேசினர். இறுதியாக மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ நிறைவுரையாற்றினார்.
    திருவாவடுதுறையில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஊராட்சி டி.மேலக்கடை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது88), இவருடைய மனைவி மாரியம்மாள் (82). இவர்களுக்கு திருமணாகி 60 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக மூத்த மகன் செழியன் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரியம்மாள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.

    60 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது மனைவியை பிரிந்த துக்கம் தாங்காமல் கலியபெருமாள் அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    இதனையடுத்து உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் சேர்ந்து இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதிசடங்கு செய்து இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டது.

    மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்து சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் திருவாவடுதுறை கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
    பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு தளத்தை 300 மீட்டர் தூரம் நீட்டிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த 8,000 மீனவர்கள் 350 விசைப்படகு, மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். இங்கிருந்து ஒரு நாளில் ரூ.3 கோடிக்கு மீன்வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    இத்துறைமுகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் கருவாடு அனுப்பி வைக்கப்படுகிறது. பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு தளத்தை 300 மீட்டர் நீட்டிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி விசைப்படகு உரிமையாளர்கள் கூறியதாவது. கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத கனமழையால் கடலுக்கு சென்ற உபரிநீர் அடித்து வந்த மணல் திட்டுக்கள் பழையாறு துறைமுகத்தில் தேங்கியதால் படகு தளம் 200 மீட்டர் வரை மணல் மூடியுள்ளது. இதனால் படகை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை வேறு இடத்தில் இறக்கியோ அல்லது அடுத்தடுத்த படகின் வழியே தூக்கி வந்து ஏலக்கூடத்திற்கு கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய இடவசதி இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாகவும் எஞ்சிய படகுகள் பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தப்படுகிறது. இதனால் மீன் பிடிக்க செல்லும் போதும் அவசர காலங்களிலும் முன்னாள் நிற்கும் படகுகளை எடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த படகுகளை எடுக்க முடியும் நிலை உள்ளது.

    எனவே 6 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க பழையாறு மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரி படகு தளத்தை 300 மீட்டர் தூரத்துக்கு நீட்டித்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சீர்காழியில் பலகாலமாக நின்று சென்ற பயணிகள் ரெயில்கள், கோவிட் 19 பிறகு நிற்காமல் செல்வதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
    சீர்காழி:

    சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர் சங்க சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் அதன் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், பகுதி செயலாளர் இந்திரஜித், வர்த்தக நல சங்க தலைவர் கோபு, சீர்காழி தாலுக்கா மொபைல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் மார்க்ஸ்பிரியன் செயலாளர் ஞானமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழுதுகள் இயக்கத் தலைவர் ‌ஷரவணன், நலம் அறக்கட்டளை செயலாளர் சுதாகர், ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீர்காழியில் பலகாலமாக நின்று சென்ற பயணிகள் ரெயில்கள், கோவிட் 19 பிறகு நிற்காமல் செல்கிறது. இதனால் சீர்காழி வாழ் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என கருத்துக்களை கூறினர்.

    இதனிடையே பலமுறை ரெயில்வே நிர்வாகத்திற்கு நேரிலும், கடிதம், மின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதாலும், அனைத்து ரெயில்களும் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்தி ரெயில்நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்து வணிகர்களும் கடையடைப்பு செய்வது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. நிறைவில் செயலாளர் முஸ்தபா நன்றி கூறினார்.
    மயிலாடுதுறை ரெயில்வே ஸ்டேசனில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1½ கிலோ தங்க நகைகளை பயணியிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி:

    சென்னை-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறை ஸ்டேசனுக்கு வந்தபோது ரெயில்வே பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் சுமார் ஒன்றரை கிலோ மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான நகை என்பதும், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதியில் விற்க எடுத்து வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சென்னையிலிருந்து ரமேசை வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவலறிந்த வணிக வரித்துறை அலுவலர்களும் ரமேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×