search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மயிலாடுதுறையில் எஸ்.பி. அலுவலகம் அருகே கடையின் பூட்டு உடைத்து ரூ.1.10 லட்சம் கொள்ளை

    மயிலாடுதுறையில் எஸ்.பி. அலுவலகம் அருகே கடையின் பூட்டு உடைத்து ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மயிலாடுதுறை- திருவாரூர் ரோட்டில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகம் அருகே ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் தலைக்கவசம் மற்றும் கை உரை அணிந்து கொண்டு வந்தனர். கடைக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திசை திருப்பி விட்டு சட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோ ட்ராவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடினர்.

    இந்நிலையில் இன்று காலை மணிகண்டனின் தாயார் கடை வாசலை சுத்தம் செய்ய வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பாதி ‌ஷட்டர் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்ததையும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதேபோல் மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அமைந்துள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான பழமண்டி கடையின் பூட்டை அறுத்து தூக்கி எறிந்து விட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பணம் ஏதும் இல்லாததால் திரும்பி சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணிகண்டன் கடை முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களின் கை வரிசையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து அந்த கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×