என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    கொள்ளிடம் அருகே சொத்து பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொள்ளிடம்:

    கொள்ளிடம் அருகே சோதியகுடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவருக்கும், அவருடைய சகோதரர்கள் 3 பேருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதுெதாடர்பாக சோதியகுடி கிராமத்தில் ஒரு இடத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது கோவிந்தராஜனின் மாமனார் அனுமந்தபுரத்தை சேர்ந்த சேகர் (வயது60), அவரது தம்பி பாண்டியன் (57) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 15 பேர் ஒரு காரில் அங்கு வந்தனர். பின்னர் கோவிந்தராஜனுக்கு சொத்தில் அதிகம் பங்கு தரவேண்டும் என கூறி தகராறு செய்து, பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட சேகர், பாண்டியன் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சின்னக்கடை வீதி, கண்ணாரத்தெரு, காமராஜர் சாலை, பூக்கடை தெரு வழியாக ெரயிலடி காவேரி நகரை சென்றடைந்தது.

    ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாஜகான், ஜே.சி.ஐ. தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள். திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவி.அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மணல்மேடு அருகே 27 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மணல்மேடு:

    மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு பகுதியில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக இயக்கவில்லை. இந்த நிலையில் சர்க்கரை ஆலையில் பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலை வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. சங்க செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 27 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் பணப்பயன், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    சீர்காழி அருகே குடிபோதையில் சாலையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவெண்காடு:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 32). திருவாரூர் மாவட்டம் எடையூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்த இவர், தற்போது கடற்கரை போலீஸ் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விடுமுறையில் உள்ள சக்திவேல் தனது சொந்த ஊரான காத்திருப்பு கிராமத்தில் தங்கி உள்ளார்.

    நேற்று முன்தினம் மாலை காத்திருப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் குடிபோதையில் சில வாலிபர்கள் ரகளை செய்து கொண்டிருந்தனர். அவர்களை சக்திவேல் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

    இதை தொடர்ந்து சக்திவேல் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேலின் கை மற்றும் மார்பில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் சக்திவேலை கத்தியால் குத்தியதாக செம்பனார்கோவில் அருகே உள்ள திருச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்த அருள்(28), ரமேஷ்(26), தட்சிணாமூர்த்தி(23), சதீஷ்(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் திருட்டு வாகனங்களை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

    மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மற்றும் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வாறாக தற்போது மொத்தம் 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் வழக்கு சொத்தாக வைக்கப்பட்டுள்ளது.

    அவற்றுள் 154 நான்கு சக்கர வாகனங்களும், 77 ஜெசிபி மற்றும் மாட்டு வண்டிகளும் அடங்கும்.அது மட்டும் அல்லாமல், இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் திருட்டில் ஈடுபட்டவர்கள் இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு நபர் மீது இதுபோன்ற தொடர் மணல் திருட்டு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. பொதுமக்கள் உங்கள் ஊர்களில் மணல் திருட்டு நடைபெறுவது பற்றிய தகவல்களை 9442626792 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

    உங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தற்போது மணல் திருட்டு வாகனங்களை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

    செம்பனார்கோவில் அருகே மீன் வாங்கியதற்கான பணத்தை கேட்டதால் தகராறில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே முடிகண்டநல்லூர் வடபதி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவர் சின்னமேட்டை சேர்ந்த மீனவரான மணிகண்டன் (வயது32) என்பவரிடம் மொத்தமாக மீன் வாங்கி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். மீன் வாங்கிய வகையில் மணிகண்டனுக்கு, கண்ணன் பணம் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டன் சின்னமேடு பகுதியை சேர்ந்தவர்களுடன் நேற்று அதிகாலை கண்ணன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் கண்ணணை தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அபோலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சின்னமேடு பகுதியை சேர்ந்த மணிக்கண்டன், ராஜ்குமார் (43), கலைவாணன் (36), கண்ணன் (40), புதுப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி (36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக முன்னதாக பொறையாறு போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கண்ணன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரில் வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகளாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன. இதனால் மயிலாடுதுறை நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் லலிதா ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் நேற்று சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

    முன்னதாக கால்டெக்ஸ் பகுதி 4 ரோடு சந்திப்பில் பூம்புகார் சாலையில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. அப்போது கடைகளின் முன்பு சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கட்டுமானங்கள், இரும்புத்தகடு கொட்டகைகள், விளம்பர பலகைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    தொடர்ந்து சீர்காழி சாலை மற்றும் பெரியக்கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தங்கராஜ், நகராட்சி ஆணையர் பாலு ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்புடன் நடந்தது. இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை நகரில் பட்டமங்கலத்தெரு, காந்திஜி சாலை, கச்சேரி சாலை, டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
    மயிலாடுதுறை எடத்தெருவில், பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சாலையில் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நகரில் ஆங்காங்கே பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து சாலைகள் உள்வாங்குகின்றன. பல இடங்களில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கிறது.

    மயிலாடுதுறை நகரில் ஆள்நுழைவுத் தொட்டிகள் மட்டும் 15 இடங்களில் உடைந்து சேதமடைந்து சீரமைக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 10 மாதத்திற்கு முன்பு 16-வது இடமாக தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி உடைந்து உள்வாங்கி, தற்போதுவரை முழுமையாக சீரமைக்கப்படவில்லை. பிரதான சாலையான தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து அடிக்கடி உள்வாங்குவதை தவிர்க்க, புளியன் தெருவில் உள்ள 4- கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து 8-வது கழிவு நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்ல தரங்கம்பாடி சாலையின் ஓரத்தில் புதிதாக இரும்பு குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த பணியிலும் குளறுபடி ஏற்பட்டு சோதனையின் போதே கழிவுநீர் வெளியேறியதால், தற்போது வரை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக தரங்கம்பாடி சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தரங்கம்பாடி சாலையில் புழுதியும் பறப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் கூறைநாடு எடத்தெரு, அய்யனார் கோவில் தெரு சந்திப்பில் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இந்த கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் வாசலில் எப்போதும் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல காமராஜர் சாலை, அவையாம்பாள்புரம், கீழநாஞ்சில்நாடு உள்ளிட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல தேங்கி நிற்கின்றன. எனவே இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை அருகே மதுவிற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டை சேர்ந்தவர் செல்வம்(வயது38). இவர் சித்தர்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    மணல்மேடு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே உள்ள கன்னியாநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம்(வயது75). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வயிற்று வலி அதிகமானதால் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து ராஜாங்கம் மயக்கமடைந்தார். இதனால் அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜாங்கம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த தொடுவாய் அன்னை தெரசா வீதி சுனாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 26). இவர் கடந்த 5-ம் தேதி மாரியம்மன் கோவில் அருகே காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    விசாரணையில் முருகன் தொடுவாய் பகுதியில் உள்ள மதியழகன் என்பவர் வீடு புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீடு புகுந்த முருகனை பிடித்து அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் சிலர் அடித்துள்ளனர். அதன் பின்னர் முருகன் இறந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்பதை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்து தொடுவாய் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவியரசன் (24), வெள்ளரீசன் (44), மதுரைவீரன் (33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அஞ்சம்மாள், செல்வம், செல்வநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    சீர்காழி அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமம் காட்டுதெரு சுனாமி நகரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் சண்முகம் (வயது 35). கொத்தனார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவர் சண்முகத்திடம் கோபித்து கொண்டு செல்வி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதை தொடர்ந்து சண்முகம் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×