search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சாலையில் தேங்கி கிடந்ததை படத்தில் காணலாம்.
    X
    பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சாலையில் தேங்கி கிடந்ததை படத்தில் காணலாம்.

    பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    மயிலாடுதுறை எடத்தெருவில், பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சாலையில் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நகரில் ஆங்காங்கே பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து சாலைகள் உள்வாங்குகின்றன. பல இடங்களில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கிறது.

    மயிலாடுதுறை நகரில் ஆள்நுழைவுத் தொட்டிகள் மட்டும் 15 இடங்களில் உடைந்து சேதமடைந்து சீரமைக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 10 மாதத்திற்கு முன்பு 16-வது இடமாக தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி உடைந்து உள்வாங்கி, தற்போதுவரை முழுமையாக சீரமைக்கப்படவில்லை. பிரதான சாலையான தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து அடிக்கடி உள்வாங்குவதை தவிர்க்க, புளியன் தெருவில் உள்ள 4- கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து 8-வது கழிவு நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்ல தரங்கம்பாடி சாலையின் ஓரத்தில் புதிதாக இரும்பு குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த பணியிலும் குளறுபடி ஏற்பட்டு சோதனையின் போதே கழிவுநீர் வெளியேறியதால், தற்போது வரை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக தரங்கம்பாடி சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தரங்கம்பாடி சாலையில் புழுதியும் பறப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் கூறைநாடு எடத்தெரு, அய்யனார் கோவில் தெரு சந்திப்பில் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இந்த கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் வாசலில் எப்போதும் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல காமராஜர் சாலை, அவையாம்பாள்புரம், கீழநாஞ்சில்நாடு உள்ளிட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல தேங்கி நிற்கின்றன. எனவே இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×