என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழி பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு 13 மணிநேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டநிலையில் மீண்டும் இவ்வாறு மின்வெட்டு ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டதால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.நேரம் செல்ல,செல்ல மின்சாரம் வரவில்லை. இரவு சுமார் 8.30மணி அளவில் மீண்டும் மின்சாரம் வந்தது. சுமார் மூன்றரை மணிநேரம் ஏற்பட்ட இந்த மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள்,மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    சீர்காழி பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு 13 மணிநேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டநிலையில் மீண்டும் இவ்வாறு மின்வெட்டு ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டதால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்தனர்.

    மின்பராமரிப்பு பணிகளின்போது பழுது ஏற்பட்டுள்ள மின்கம்பி, மின்சாதனபொருட்களை மின்சார வாரியம் முறையாக சீரமைத்திருந்தால் இதுபோன்ற மின்வெட்டு பிரச்சனைகள் ஏற்படாது என வேதனை தெரிவித்தனர்.

    இது குறித்து மின்சார வாரியத்திடம் கேட்டபோது, கிராரங்கொண்டான் மின்நிலையத்திலிருந்து வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்திற்கு வரும் பிரதான மின்பாதையில் பழுது ஏற்பட்டதால் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என்றனர்.

    மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் தொடக்கத்தையொட்டி நடந்த தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
    மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த அபயாம்பிகை உடனான மயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அபயாம்பிகை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி ஈசனை வழிபட்டு மயில் உரு நீங்கி சாபவிமோசனம் பெற்று இறைவனுடன் சேர்ந்ததாக பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கி கொண்டதாக ஆன்மிக புராணங்கள் கூறுகின்றன.

    எனவே ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் சாமி புறப்பாடு இன்றி அஸ்திரதேவர் மட்டும் காவிரி துலா கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு துலா உற்சவம் நடந்தது.

    இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் சாமி வீதியுலா செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக நேற்று தொடங்கியது.

    துலா உற்சவத்தின் முதல் தீர்த்தவாரியான நேற்று அபயாம்பிகை உடனான மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி உடனான அய்யாறப்பர், ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் துலாக்கட்ட காவிரியின் 2 கரைகளிலும் எழுந்தருளினர். அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். இந்த துலா உற்சவத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவமாக சிவாலயங்களில் திருக்கல்யாணம், தேர் திருவிழா, அமாவாசை தீர்த்தவாரி, புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரி என்றழைக்கப்படும் கடைமுழுக்கு, முடவன் முழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    சீர்காழியில் குடோனில் புகையிலை பொருள் பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிறப்பு தனிப்படை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் சீர்காழி பகுதியில் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது திருக்கோலக்கா பகுதியில் குடோனில் ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற புகையிலை குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ.3லட்சம் மதிப்புடைய 9 ஆயிரத்து 174 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்த கோபால் மகன் கஜேந்திரன் ( வயது 52) என்பவரை கைது செய்ததோடு பறிமுதல் செய்த குட்கா பொருட்களை சீர்காழி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய திருக்கோலக்கா பகுதியை வினோத் என்பவரை தேடி வருகின்றனர்.

    சீர்காழி பகுதியில் தொடர்மழை காரணமாக சம்பா நெற்பயிர் சுமார் 60 ஏக்கர் அளவில் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைடைந்துள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 3நாட்களுக்கு மேலாக மழை பெய்துவருகிறது. இதனால் சில இடங்களில் மழைநீர் நெற்பயிரை மூழ்கடித்துள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்திருந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக விதைப்பு செய்து ஒருமாத காலமேயான நேரடி மற்றும் சம்பா நெற்பயிர் சுமார் 60 ஏக்கர் அளவில் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைடைந்துள்ளனர்.

    இதுகுறித்து குன்னம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நரசிம்மன் கூறுகையில், குன்னம் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஒரு மாதமே ஆன நெற்பயிர் முழுவதும் தண்ணீரில் மூழ்கி வயல் கடல் போல் காட்சியளிக்கிறது.

    இக்கிராம பகுதியில் முக்கிய பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்துவரும் அழிஞ்சியாறு மற்றும் ஒட்டன் வாய்க்கால் ஆகிய இரண்டு வாய்க்கால்களும் குன்னம் கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர் வாரப்படாமல் ஆழபடுத்த படாமலும் உள்ளதால் இந்த வாய்க்கால்களில் புதர்கள் மண்டி வாய்க்கால் தூர்ந்து போய் கிடக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்த வாய்க்கால்களை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வாய்க்கால்களை தூர்வாரி இருந்தால் குன்னம் கிராமத்தில் வயல்களில் தேங்கும் அதிகப்படியான மழை நீர் எளிதில் வெளியேறி குன்னம் கிராமத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சென்று கலந்துவிடும்.

    அழிஞ்சிஆறு மூலமாக அதிகப்படியான தண்ணீர் எளிதில் சென்று ஆற்றில் வடிந்துவிடும். ஆனால் இந்த அழிஞ்சி ஆறு மற்றும் ஒட்டன் வாய்க்கால் ஆகிய இரண்டு வாய்க்கால்களும் தூர் வாராமல் விடப்பட்டுள்ளது. தற்போது மழையின் காரணமாக வாய்க்கால்களில் அதிக நீர் வரத்து இருந்து வருகிறது.

    இதனால் தண்ணீர் வடிய முடியாமல் சம்பா நெற்பயிர் மூழ்கி கிடக்கிறது. கடந்த மூன்று நாட்களாக பயிர் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருகிறது. இதனால் இளம் பயிர்அழுகிவிட்டது. இனி மறுமுறை தான் பயிர் செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் செலவு செய்து நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்து தற்போது பயனில்லாமல் போய்விட்டது. எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மீண்டும் மறுமுறை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்ய அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். நெல் விதை மற்றும் குறுவை தொகுப்பு உரம் 100 சத மானியத்தில் வழங்கியது போல உரங்களும் உடனடியாக நிவாரணமாக வழங்க வேண்டும் என்றார்.

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆடு திருடியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மேலையூர் ஐயர் காலனியைச் சேர்ந்த படையப்பா என்கின்ற ராஜீவ்காந்தி, கீழையூர் கே.கே. நகரை சேர்ந்த பால மணிகண்டன் (வயது 25), அருண்குமார் (24) ஆகியோர் செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் விநாயகர் நகரை சேர்ந்த தங்கம் என்கின்ற ரெங்கபாஷ்யம் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு திருடி சென்று இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்ல முயற்சி செய்தனர்.

    இதனையறிந்த ஊர்மக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் படையப்பா மட்டும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து மணிகண்டன், அருண்குமாரை செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து படையப்பாவை தேடி வருகின்றனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 13 வயது கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்பவரின் மகள் ஷோபனா (13). குத்தாலம் அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 7-ந் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சிறுமியின் உறவினர்கள் அன்றிரவே குத்தாலம் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடிய உறவினர்கள், சிறுமியின் மாமா பாலசுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ரத்தக்கரை இருந்தது. மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இதையடுத்து, சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார், வில்லியநல்லூர் கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டிற்கு தூக்கி வந்துவிட்டதால் வாய்க்காலில் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் தொடர் விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியினர் சிலரை போலீசார் கண்காணிப்பு வளைத்தில் கொண்டுவந்து அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சிறுமியின் சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்த அதே தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பிரபாகர் என்ற வாலிபர் (25) அங்கிருந்து நழுவி பஸ்சில் ஏறி தப்பிக்க முயன்றபோது போலீசார் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அச்சிறுமியின் உறவினரான பிரபாகர் கடந்த 3 மாதங்களாக அச்சிறுமியை காதலித்து வந்ததும், அச்சிறுமி பலமுறை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது. சம்பவத்தன்று சிறுமி ஷோபாவை தனியாக வரச்சொன்ன பிரபாகர் சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளார்.

    பின்னர், அப்பகுதி இளைஞர்களுடன் சிறுமி சகஜமாக பேசுவதை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் மயக்கமடைந்த சிறுமியை வாய்க்காலில் தூக்கிப்போட்டுள்ளார். இதில் சிறுமி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். பின்னர் பிரபாகர், உறவினர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல் நடித்துள்ளார்.

    பிரபாகரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதன்மூலமாக கடந்த ஒரு வாரமாக சிறுமியின் மரணத்தில் நிலவிய மர்மத்துக்கு விடை கிடைத்துள்ளது.
    சீர்காழி அருகே உடல் கருகிய நிலையில் தூக்கில் மீனவர் பிணமாக தொங்கினார். அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீனவர் காலனி தோட்டாலம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் குணா (வயது23). மீனவரான இவர் நேற்று முன்தினம் திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவர் கடற்கரையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்தநிலையில் நேற்று காலை திருமுல்லைவாசல் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ஒரு தனியார் மீன் கம்பெனி வளாகத்தில் உடல் எரிந்த நிலையில் தூக்கில் குணா பிணமாக தொங்கினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து குணாவின் தந்தை ரவி சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணா எப்படி இறந்தார்? அவரை யாராவது எரித்துக்கொன்று தூக்கில் உடலை தொங்க விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் கருகிய நிலையில் தூக்கில் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திருமுல்லைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த 2 வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதில் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் அருகே உள்ள அகரஆதனூரைச் சேர்ந்த மதன்மோகன், அவரது தாயார் உமா மகேஸ்வரி ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தில் விவசாய கடன் பெற்று வாங்கிய டிராக்டரை, அந்த தனியார் நிறுவனமே ஜப்தி செய்து எடுத்து சென்றதை கண்டித்தும், தங்களின் பெயரில் இருந்த டிராக்டரை போலி ஆவணம் மூலம் அந்த நிறுவனம் பெயர் மாற்றிக் கொண்டதாகவும் கூறி தீக்குளிக்க முயன்றனர்.

    இதைப்போல சீர்காழியை அடுத்த கடவாசல் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன், அவருடைய மனைவி குணவதி ஆகிய இருவரும் சொத்து பிரச்சினையில் தங்களுக்கு உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரை புதுப்பட்டினம் போலீசார் பதிவு செய்ய மறுப்பதாகவும் தெரிவித்து தீக்குளிக்க முயன்றனர். இதனால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டகமலநாதன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் மதன்மோகன் அவரது தாயார் உமாமகேஸ்வரி மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல பாலசுப்ரமணியன், குணவதி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மயிலாடுதுறை அருகே ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் நடைெபற்றது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மூவலூர் ஊராட்சி உள்ளது. ஆயவலம், மகாதானபுரம் மற்றும் மூவலூர் ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூவலூர் பஸ் நிறுத்தம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் சேதமடைந்த இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் மகாதானபுரம் கிராமத்தில் தொடங்கியது. இதை ஏற்க மறுத்த கிராம மக்கள், ஏற்கனவே ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ள மூவலூர் பகுதியிலேயே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக புதிய கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்படுவதாகவும், மயிலாடுதுறை தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சீர்காழி அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அறுந்து தொங்கிய மின்கம்பி உரசியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலோர கூழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 45). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி லட்சுமி (42). இருவரும் மயிலாடுதுறை சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது கூழையார் கிராமம் பெருமாள் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது மெயின் ரோட்டில் சாலையோரம் மழையின் காரணமாக அறுந்து தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி பின்புறம் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த லட்சுமி கழுத்தில் பட்டு மின்சாரம் தாக்கி கீழே தூக்கி எறியப்பட்டார். ஆபத்தான நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே லட்சுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முத்து மீது மின்கம்பி படாததால் அவர் உயிர் பிழைத்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
    மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கொத்தனாரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை சிவசக்தி நகரை சேர்ந்த வீரமுத்து மகன் கார்த்திக் (வயது33). கொத்தனார். இவர் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி ஒருவரிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்றனர். அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
    மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் கைவரியை காட்டிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரில் பூட்டியிருக்கும் கடை மற்றும் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் உத்தரவின்பேரில் திருடர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நகரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹெல்மெட் அணிந்திருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சித்திரைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது42) என்பதும், இவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மயிலாடுதுறை சித்தர்காடு பனந்தோப்பு தெருவில் சர்தார்சிங் என்பவரிடம் இருந்து திருடி வந்ததும், மயிலாடுதுறையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியதும் தெரிய வந்தது.

    லட்சுமணன் மீது மயிலாடுதுறையில் 4 திருட்டு வழக்குகளும், திருப்பூர், புதுக்கோட்டை, கோவை, திண்டுக்கல், கடலூர், சென்னை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 56 திருட்டு வழக்குகளும் உள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    ×